۞ அல் குர்ஆன் தெளிவுரைஅல்-குர்ஆன் – மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வழிகாட்டுதலும் தீர்வும்
English
3

ஆலெ இம்ரான்

இம்ரான் வம்சத்தவர்

Ale Imran

Surah 3  ·  200 வசனங்கள்

آل عمران
۞

بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

3:0அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (6:162)

3:1

الٓمٓ١

3:1. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் புறத்திலிருந்து முஹம்மது நபி மூலமாக அருளப்பட்ட வேதமிது.

3:2

ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡحَيُّ ٱلۡقَيُّومُ٢

3:2. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருடைய கட்டளைக்கும் இணங்கி செயல்படுதல் ஆகாது என்பதை அடிப்படையாகக் கொண்டு அறிவுறுத்தும் வேதமிது. ஏனெனில் அவனே நித்திய ஜீவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். அகிலங்களையும் அவற்றில் உள்ளவற்றையும் படைத்துப் பரிபாலிப்பவனும் அவனே.

3:3

نَزَّلَ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَأَنزَلَ ٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ٣

3:3. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! மனித வாழ்வின் உயர் இலட்சியத்தை அடைய மிகச் சரியானப் பாதையைக் காட்டும் இவ்வேதம், உமக்கு அருளப்படுகிறது. ஏற்கனவே அருளப்பட்ட ‘தோரா’ மற்றும் ‘பைபிள்’ ஆகிய வேதங்களின் உண்மை விஷயங்களை இது மீண்டும் எடுத்துரைக்கிறது.

3:4

مِن قَبۡلُ هُدٗى لِّلنَّاسِ وَأَنزَلَ ٱلۡفُرۡقَانَۗ إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۗ وَٱللَّهُ عَزِيزٞ ذُو ٱنتِقَامٍ٤

3:4. இதற்குமுன் அருளப்பட்ட வேதங்கள் யாவும் மக்களை நேர்வழிப் படுத்துவதற்காகவும், நன்மை தீமை செயல்களைப் பற்றி தெளிவாக எடுத்துரைப் பதற்காகவும் ஆகும். இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி நடக்க மறுப்பவர்களுக்கு, அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற விதிமுறைகளின்படி பேரழிவுகள் ஏற்படுவது நிச்சயம். மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப இறுதி விளைவுகளை ஏற்படவைக்கும் வல்லமையுடைய இறைவனிடமிருந்து வரும் சொல் ஆகும் இது.

3:5

إِنَّ ٱللَّهَ لَا يَخۡفَىٰ عَلَيۡهِ شَيۡءٞ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ٥

3:5. அல்லாஹ்வின் வல்லமை எந்த அளவுக்கு பேராற்றலுடையதாக உள்ளது என்றால், வானத்திலோ பூமியிலோ நடக்கும் எந்த நிகழ்வுகளும் அவனின் கண்காணிப்பிலிருந்து தப்பவே முடியாது.

3:6

هُوَ ٱلَّذِي يُصَوِّرُكُمۡ فِي ٱلۡأَرۡحَامِ كَيۡفَ يَشَآءُۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ٦

3:6. அதுமட்டுமின்றி, குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், தாயின் கருவறையிலிருந்தே ஏற்படுத்துபவனும் அவனே. அப்படி அனைத்து வல்லமையும் உடையவன் தான் அல்லாஹ். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு படைப்பிற்கும் நடைமுறைச் சட்டங்களை (Control System) நிர்ணயித்ததும் அவனே. அவனைத் தவிர வேறு யாருடைய அதிகாரமும் எங்கும் செல்லாது. அதுமட்டுமின்றி ஒவ்வொன்றும் தெளிவான ஞானத்தின் அடிப்படையைக் (Logic and Wisdom) கொண்டதாகும்.

3:7

هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ مِنۡهُ ءَايَٰتٞ مُّحۡكَمَٰتٌ هُنَّ أُمُّ ٱلۡكِتَٰبِ وَأُخَرُ مُتَشَٰبِهَٰتٞۖ

3:7. அகிலங்கள் அனைத்தும் செயல்படும்படி நடைமுறைச் சட்டங்களை ஏற்படுத்தியது போல், மனிதனுக்கும் சட்ட விதிமுறைகளை நிர்ணயித்ததும் அல்லாஹ்வே. அவை இவ்வேதத்தில் அருளப்படுகின்றன. மனித வாழ்வின் மிகச் சரியான வழிகாட்டியாகத் திகழும் இவ்வேதத்தின் வாக்கிய அமைப்புகள் இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று தெளிவான நேரடி அர்த்தங்களைத் தரக்கூடிய முஹ்கமாத் வாக்கியங்கள் ஆகும். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக்கிட வேண்டும் என்பதே இவ்வேதத்தின் அடிப்படை நோக்கமாகும். இரண்டவதாக முதஷாபிஹாத் என்னும் பல கருத்துக்களைத் தரும் வகையில் உவமான வடிவில் சொல்லப்பட்ட வாக்கியங்களாகும்.

فَأَمَّا ٱلَّذِينَ فِي قُلُوبِهِمۡ زَيۡغٞ فَيَتَّبِعُونَ مَا تَشَٰبَهَ مِنۡهُ ٱبۡتِغَآءَ ٱلۡفِتۡنَةِ وَٱبۡتِغَآءَ تَأۡوِيلِهِۦۖ وَمَا يَعۡلَمُ تَأۡوِيلَهُۥٓ إِلَّا ٱللَّهُۗ

எவர்களின் உள்ளங்களில் நேர்வழி பெறும் ஆர்வம் இல்லையோ, அவர்கள் இந்த உவமை வடிவில் சொல்லப்பட்ட வாக்கியங்களின் வார்த்தைகளுக்கு நேரடி அர்த்தத்தைக் கொடுத்து, அதுவே சரியானவை என்கின்றனர். இவ்வாறு செய்து மக்கள் மத்தியில் பரப்பி குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அவற்றின் உண்மையான விளக்கங்கள் முழு அளவில் அல்லாஹ்வின் ஞானத்தில் உள்ளன.

وَٱلرَّٰسِخُونَ فِي ٱلۡعِلۡمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِۦ كُلّٞ مِّنۡ عِندِ رَبِّنَاۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ٧

இருப்பினும் கல்வி ஞானத்தில் முதிர்ச்சிப் பெற்ற மேதைகள், அவற்றின் உண்மை நிலையை படிப்படியாக கண்டறிந்து, இந்த உண்மைகள் அனைத்தும் இறைவன் புறத்திலிருந்து வந்தவைதாம் என்பதை உறுதிபட ஏற்றுக் கொள்வார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

விளக்கம் : “ஆயத்தெ முஹ்கமாத்” என்னும் தெளிவான அர்த்தங்களைத் தரும் வாக்கியங்கள் நிலையான கட்டளைகளும் செயல்முறைத் திட்டங்களும் அடங்கிய வாக்கியங்களாகும். இந்த வாக்கியங்களில் வரும் சொற்களுக்கு நேரடி அர்த்தம் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். உதாரணமாக ஹுர்ரிமத் அலைக்கும் உம்மஹாதுக்கும் (4:23) என்ற வாசகத்திற்கு, “உங்கள் தாயை மணமுடிக்க உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது” என்று பொருள் வரும். இது நேரடிப் பொருள் தரக்கூடியதாக வாக்கியமாகும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு வேறு எந்தப் பொருளையும் தர இயலாது. எனவே இவை ஆயாதுன் முஹ்கமா துன் ஆக இருக்கின்றது. அதாவது தெளிவுபெற்ற வாக்கியங்கள் ஆகும். ஆக குர்ஆனினுள்ள ஒவ்வொரு வாக்கியமும் தெளிவாக விளங்கவேண்டும் என்பதே குர்ஆனின் நோக்கமாகும்.

மேலும் குர்ஆன், குடும்பவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசும்போது, சாதாரண வாக்கியங்களாக நேரடி பொருள் தரும் வகையில் பேசுகிறது. ஆனால் உலக பொது விஷயங்களைப் பற்றி சொல்லும் போது, அதன் சொற்றொடர் இலக்கண இலக்கிய நயத்துடன் பேசுகிறது. இது ஒவ்வொரு மொழியிலும் உள்ள தனிச் சிறப்பு அம்சமாகும். எடுத்துக்காட்டாக நாம் உலகம் சிரித்தது என்று சொல்கிறோம். அது உலக மக்களைக் குறிக்கும். வயிறு பற்றி எரிகிறது என்கிறோம். அது நம் கோபத்தை வெளிப்டுத்தும் சொல்லாகும். அது போல இப்ராஹீம் நபியை நெருப்பில் போட்டு பொசுக்க மக்கள் ஆக்ரோஷமாகப் பேசியது, அது அவர்களிடையே கொழுந்துவிட்டு எரிந்த கோபத்தை காட்டுகிறது. இதையே “நெருப்பே! நீ இப்ராஹீமுக்காக குளிர்ச்சியாக ஆகிவிடு” என்று 21:69ல் திருக்குர்ஆன் கூறுகிறது. அது மக்களில் இருந்த “ஆவேசத் தீ” என்பதே சரியான கருத்தாகும். அதாவது அவர் ஹிஜ்ரத் செய்து சென்று விட்டதால், அவர்களுடைய கோபக் கனல் தணிந்து விட்டது.

அதே போல மூஸா நபி தம்மிடமுள்ள கைத்தடியை கீழே எறிந்தார். அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று என்று 20:20ல் திருக்குர்ஆனில் கூறப்படுகிறது. அதாவது இறைவழிகாட்டுதலை மக்கள் முன் எடுத்துரைப்பது ஒரு சிரமமான காரியம் ஆகும். ஒருவர் பாம்பைப் பார்த்து எவ்வாறு பயப்படுவாரோ அவ்வாறே மூஸா நபியும் மக்களின் எதிர்ப்பைக் கண்டு பயந்தார் என்பதே அதன் கருத்தாகும். இப்படியாக இலக்கிய நயத்துடன் உவமான உவமேய வடிவில் கூறப்படும் வாசகங்களுக்கு அதன் உள்ளார்ந்த கருத்துக்களைக் கொடுத்தால் தான் திருக்குர்ஆன் தெளிவாகி விடுகிறது.

இந்த உவமான உவமேய வடிவில் உள்ள வாக்கியங்களுக்கு நேரடிப் பொருள் கொடுத்தால் உண்மை கருத்துக்கள் விளங்காது. நேரானப் பாதையை விட்டுவிட்டு தவறான வழியில் செல்பவர்கள் உவமைவடிவில் சொல்லப்பட்ட வாக்கியங்களின் சொற்களுக்கு நேரடி மொழி பெயர்ப்பை கொடுத்து மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி விடுகிறார்கள். உதாரணத்திற்கு அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தான் (13:2). இதற்கு விளக்கம் அளிக்கையில் “அர்ஷ்” என்பது நாற்காலி என்றும் அதன்மீது அல்லாஹ் அமர்ந்துக் கொண்டிருக்கிறான் என்றும் விளக்கம் அளித்து அல்லாஹ்வை மனித அளவிற்கு கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் “அர்ஷ்” என்பது கட்டுப்படுத்தும் (Centralised controlling system) வல்லமையைக் குறிக்கும் சொல்லாகும். அல்லாஹ் அகிலங்கள் அனைத்தையும் படைத்து தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இயக்கி வருவதாகவே பொருள் கொள்ள முடிகிறது. (பார்க்க 2:255) இப்படியாக உவமான வடிவில் சொல்லப்பட்டதை நேரடியாக மொழி பெயர்த்து, உண்மையில்லாத விஷயங்களை சொல்லி மக்களை திசை திருப்பி விடுகிறார்கள்.

இது தவிர பிரபஞ்சப்படைப்பு மற்றும் அவற்றின் செயலாக்கத்தைப் பற்றி உள்ள வாக்கியங்களும் ஒன்ருக்கொன்று (Synonyms – Similarity in meaning) ஒப்பான கருத்துக்களைத் தரும் வகையில் சொல்லப்பட்டுள்ளன. இவற்றின் முழு உண்மை நிலை அல்லாஹ்வுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் மனிதச் சிந்தனையும், கல்வி ஆய்வுகளும் வளர்ச்சி அடையும் போது, அதன் உண்மை நிலையை படிப்படியாக மனிதனாலும் அறிந்துக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக சூரியன் தன்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. (36:38) பண்டைய காலத்தில் சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்ற எண்ணம் மக்களிடத்தில் இருந்தது. அதற்கு இந்த வாசகம் சான்றாக இருந்து வந்தது. ஆனால் மனிதன் மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வுகளின் படி, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதாகவும், சூரியனும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு தன் குடும்பத்திலுள்ள நவக்கிரகங்களுடன் ஓர் இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் கண்டுபிடித்துள்ளான். இப்போது அந்த வாக்கியத்தின் உண்மை நிலை என்னவென்று தெளிவாகி விட்டது. முதஷாபிஹாத்தாக இருந்த இந்த வாக்கியம் முஹ்கமாத்தாக மாறிவிட்டது. இவ்வாறாக திருக்குர்ஆனின் ஒவ்வொரு வாக்கியமும் தெளிவாகிக் கொண்டே போவது உறுதி என்று (41:53) வாசகம் கூறுகிறது. இவற்றின் முழு ஞானமும் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் மனிதனுக்குக் கிடைக்கும் ஞானம் சொற்பமான அளவில்தான் இருக்கும். (17:85)

3:8

رَبَّنَا لَا تُزِغۡ قُلُوبَنَا بَعۡدَ إِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِن لَّدُنكَ رَحۡمَةًۚ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ٨

3:8. இவ்வாறாக இறைவனுடைய வழிகாட்டுதல்களை அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து அறிந்துக் கொள்பவர்களின் எண்ணங்கள்,”இறைவா! எங்களுக்கு இந்தக் குர்ஆன் மூலமாக நேர்வழி கிடைத்த பின், மனோ இச்சையின் படி செயல்பட்டு அதிலிருந்து விலகி, வழி தவறி செல்லாதவாறு பாதுகாப்பு தருவாயாக! உன் வழிகாட்டுதலின் படியே செயல்பட நீ எங்களுக்கு அருள் புரிவாயாக. நீயே எங்களுக்கு வழிகாட்டும் வல்லமையுடையவன் ஆவாய்” என்பதாக இருக்கும்.

3:9

رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوۡمٖ لَّا رَيۡبَ فِيهِۚ إِنَّ ٱللَّهَ لَا يُخۡلِفُ ٱلۡمِيعَادَ ٩

3:9. மேலும், “இறைவா! உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழும் காலக் கட்டம் நிச்சயமாக வந்தே தீரும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவ்வுலகத்தை தவிர மறு உலகிலும் இந்த ஒருங்கிணைப்பு நடைபெறும். நிச்சயமாக உன் வாக்கு ஒருபோதும் தவறாது” என்பதாக அவர்களின் எண்ணங்கள் இருக்கும்.

3:10

إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـٔٗاۖ وَأُوْلَٰٓئِكَ هُمۡ وَقُودُ ٱلنَّارِ١٠

3:10. இந்த வழிகாட்டுதல்களின் பேருண்மையை நிராகரித்து வாழ்பவர்களின் செல்வங்களும், பிள்ளைகளும் அவர்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் அழிவிலிருந்து அவர்களை ஒருபோதும் பாதுகாப்பு அளிக்காது.. அவர்களுடைய தவறானப் போக்கு குழப்பங்களை அதிகமாக்கி, கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போல் ஆகிவிடும். அதில் அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் சிக்கித் தவிப்பார்கள்.

3:11

كَدَأۡبِ ءَالِ فِرۡعَوۡنَ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡۗ وَٱللَّهُ شَدِيدُ ٱلۡعِقَابِ١١

3:11. இறைவனின் இந்த விதிமுறைக்கு வரலாற்று நிகழ்வுகளே சான்றாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஃபிர்அவுனின் கூட்டத்தாருக்கும், அவர்களுக்கு முன்னிருந்தோருக்கும் நேர்ந்த கதி என்னவென்பதை அவர்கள் கவனித்துப் பார்க்கட்டும். இறைவனின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து, தவறான செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அல்லாஹ் நிர்ணயித்த, “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற நியதிப் படி அவர்கள் அழிவைச் சந்திக்க வேண்டிய தாயிற்று. அவர்களுடைய அழிவு எந்த அளவிற்கு கடுமையாக இருந்தது என்பதை உலகமே பார்த்துக் கொண்டது.

3:12

قُل لِّلَّذِينَ كَفَرُواْ سَتُغۡلَبُونَ وَتُحۡشَرُونَ إِلَىٰ جَهَنَّمَۖ وَبِئۡسَ ٱلۡمِهَادُ ١٢

3:12. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்பட்டு அழிந்தவர்களின் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரையுங்கள். அவர்கள் தம் போக்கை மாற்றிக் கொள்ளட்டும். இல்லாவிடில் தம் வாழ்வில் தோல்வியையே சந்திக்க நேரிடும் என்பதை எச்சரித்து விடுங்கள். மேலும் வேதனை தரும் நரக வாழ்வில் அவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பதையும், அது எப்படிப்பட்ட இழிநிலை என்பதையும் சிந்தித்துப் பார்க்கும்படி கூறுங்கள்.

3:13

قَدۡ كَانَ لَكُمۡ ءَايَةٞ فِي فِئَتَيۡنِ ٱلۡتَقَتَاۖ فِئَةٞ تُقَٰتِلُ فِي سَبِيلِ ٱللَّهِ وَأُخۡرَىٰ كَافِرَةٞ يَرَوۡنَهُم مِّثۡلَيۡهِمۡ رَأۡيَ ٱلۡعَيۡنِۚ

3:13. அண்மையில், “பத்ரு” களத்தில் இரு பிரிவினருக்கிடையே நடந்த மோதலும் ஒரு சான்றாக இருக்கிறது. அல்லாஹ்வின் கொள்கைக் கோட்பாடுகளை உலகில் நிலைநாட்ட ஆதரிக்கும் வீரர்கள் ஒருபக்கம். அதை எதிர்த்து நிற்கும் கூட்டம் மறுபக்கம். எண்ணிக்கையில் பகைவர்களின் படைபலம் அதிகமாக இருந்தது. இருந்தும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர்கள், உயர் நோக்கங்களைக் கொண்டவர்களாக இருந்ததால்,அவர்களிடம் வேகமும் துணிவும் கூடியிருந்தன.

وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصۡرِهِۦ مَن يَشَآءُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ١٣

எனவே எதிரிகளிடம் மோதும்போது, இவர்களிடம் இருமடங்கு பலம் கூடியிருந்ததை இரு பிரிவினரும் கண்டுக் கொண்டனர். அவ்வாறே அவர்கள் அந்தப் போரில் வெற்றியும் பெற்றனர். இவ்வாறாக யார் நேர்வழியில் நிலைத்து நின்று, அதற்காக துணிவுடன் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி உதவிகள் கிடைப்பது நிச்சயம். சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் இதில் திடமான படிப்பினை கிடைக்கும்.

3:14

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ ٱلشَّهَوَٰتِ مِنَ ٱلنِّسَآءِ وَٱلۡبَنِينَ وَٱلۡقَنَٰطِيرِ ٱلۡمُقَنطَرَةِ مِنَ ٱلذَّهَبِ وَٱلۡفِضَّةِ وَٱلۡخَيۡلِ ٱلۡمُسَوَّمَةِ وَٱلۡأَنۡعَٰمِ وَٱلۡحَرۡثِۗ ذَٰلِكَ مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَٱللَّهُ عِندَهُۥ حُسۡنُ ٱلۡمَـَٔابِ١٤

3:14. மேற்சொன்ன இரு கூட்டத்தாருக்கும் இடையே நடந்த மோதலுக்கு என்ன காரணம் என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். பொதுவாக மனிதனுக்கு, தான் ஈட்டிய செல்வத்தின் மீது அளவுகடந்த ஈர்ப்பு ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக தங்கம், வெள்ளி போன்ற செல்வக் குவியல்கள், மேலும் பிரத்யேகமாக வளர்க்கும் குதிரைகள், ஆடு, மாடு போன்ற கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள பற்றுதல் மனிதனைக் கவர்ந்து விடுகின்றன. இப்படி இருப்பது இயல்பானதே. ஆனால் அவற்றையே மனித வாழ்வின் இறுதி இலக்கு என்று எண்ணிக் கொள்வதே தவறான கொள்கையாகும். இவையெல்லாம் இந்த உலகில் மனித வாழ்விற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளே ஆகும். அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி வாழ்வதால் இதை விட பன்மடங்கு சிறப்பான வாழ்க்கை கிடைக்கும் என்பதை இவர்கள் அறிய மாட்டார்கள்.

3:15

۞ قُلۡ أَؤُنَبِّئُكُم بِخَيۡرٖ مِّن ذَٰلِكُمۡۖ لِلَّذِينَ ٱتَّقَوۡاْ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ

3:15. இப்படியாக தனிப்பட்ட முறையில் தற்காலிக சொகுசு வாழ்வையே நோக்கமாகக் கொண்டு வாழ்பவர்களிடம், “இதைவிட சிறப்பான வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லட்டுமா? என்றைக்கும் வற்றாத ஜீவநதி போன்ற தாராளமான பொருளாதார வசதிகள் கொண்ட சமுதாயம்.

فِيهَا وَأَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞ وَرِضۡوَٰنٞ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ ١٥

மேலும் அதில் தூய உள்ளமும் உயர் பண்புகளும் கொண்ட உற்ற தோழர்கள். அனைவரும் இறைவனுடைய சட்டதிட்டங்களை மட்டும் பின்பற்றி நடக்கும் அழகான எண்ணங்களும் சமூக அமைப்பும். இப்படிப் பட்ட சந்தோஷமான - சுவனத்திற்கு ஒப்பான வாழ்க்கை. இவை எல்லாம் இறைவனுடைய வழிகாட்டுதலின்படி ஆற்றல்களுடன் உழைப்பவர்களுக்கே கிடைக்கும்”என்று அவர்களுக்கு விளக்கிக் கூறுங்கள்.

3:16

ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ١٦

3:16. இறைவனுடைய வழிகாட்டுதலையே தம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்படுபவர்கள், “இறைவா! இந்தச் சமூக அமைப்பிற்கு எதிராக செயல்படுபவர்களால் ஏற்படும் தாக்கங்களிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக. அதனால் ஏற்படும் சீர்கேடுகளிலிருந்து எங்களை காப்பாற்றி, சமூக மேம்பாட்டிற்காகப் பாடுபட எங்களுக்கு வழிவகுப்பாயாக” என்று தம் எண்ணங்களை இறைவன் முன் வைப்பார்கள்.

3:17

ٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰدِقِينَ وَٱلۡقَٰنِتِينَ وَٱلۡمُنفِقِينَ وَٱلۡمُسۡتَغۡفِرِينَ بِٱلۡأَسۡحَارِ١٧

3:17. இத்தகையவர்களே இரவு பகலாக தம் இலட்சியத்தில் உறுதியாக நிலைத்திருந்து உழைப்பவர்கள் ஆவார்கள். இறைவழிகாட்டுதலை நடை முறைப்படுத்தி அவற்றை உண்மைப்படுத்திக் காட்டுபவர்கள். எப்போதும் இறைவனுடைய வழிகாட்டுதலையே கருத்தில் கொண்டு அதன்படியே நடப்பவர்கள். தம் உழைப்பில் கிடைத்த உபரிச் செல்வங்களை சமுதாய மேம்பாட்டிற்காகப் பயன்படுத்துபவர்கள். பகைவர்களின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்பு தேடிக் கொள்பவர் ஆவார்கள்.

ஆனால் சொகுசாக வாழ செல்வங்களை குவிப்பதையே நோக்கமாகக் கொண்டவர்கள் இதைப் பறக்கணிப்பார்கள். இவையே சமுதாயத்தில் மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும். அகிலங்கள் அனைத்தும், ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே கட்டுப்பட்டு செயல்படுகின்றன என்ற அடிப்படையாக வைத்து இந்த அத்தியாயம் ஆரம்பமானது.

3:18

شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَأُوْلُواْ ٱلۡعِلۡمِ قَآئِمَۢا بِٱلۡقِسۡطِۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ١٨

3:18. ஆக அகிலங்களின் செயல்பாடுகளும், அவற்றை செயல்படவைக்க அல்லாஹ் படைத்த பிரபஞ்ச இயற்கை சக்திகளாகிய மலக்குகளும் அல்லாஹ்வின் கட்டளைக்கு உட்பட்டு ஒரே சீராக அழகிய முறையில் செயல்படுவதே அல்லாஹ்வின் அளவற்ற வல்லமைக்கு சான்றுகளாக இருக்கின்றன. அதே போல் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு சமச்சீரான சமூக அமைப்பை ஏற்படுத்தும் போது, கல்வியில் தேர்ச்சிப் பெற்ற மேதைகளும் அல்லாஹ்வின் மேலாண்மைக்கு சாட்சியாளர்களாக ஆகிவிடுகிறார்கள். இந்த சாட்சிகள் எல்லாம், அனைத்தையும் மிகைத்தவனும், ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்த வழிகாட்டுதலுக்கு ஈடு இணையாக வேறு எந்த வழிமுறையும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக விளங்கும்.

இத்தகைய வழிமுறைக்கு அல்லாஹ் வைத்த பெயர்தான் “இஸ்லாமிய மார்க்கம்” என்பதாகும். இது மட்டுமே மனித வாழ்வியலுக்கு தலைசிறந்த வழிகாட்டுதலாகும்.

3:19

إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَٰمُۗ

3:19. இப்படி ஒரு தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்குவதே அல்லாஹ் கூறும் இஸ்லாமிய மார்க்கத்தின் நோக்கமாகும். அகிலங்களின் அனைத்துப் படைப்பு களுக்காகவும், மனித இனத்திற்காகவும் சட்ட திட்டங்களை உருவாக்கிய ஏக இறைவன் ஏற்றுக் கொண்ட மார்க்கமும் இதுவே ஆகும்.

وَمَا ٱخۡتَلَفَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۗ وَمَن يَكۡفُرۡ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ١٩

இப்படிப்பட்ட வழிகாட்டுதல்களை அறிவிப்பது புதிதான ஒன்றல்ல. இதற்கு முன்சென்ற எல்லா இறைத் தூதர்களும் இதே போல் மக்களை வழிநடத்திச் சென்றார்கள். ஆனால் தூதரின் மறைவுக்குப் பின் அவரைப் பின்பற்றியவர்கள், காலப் போக்கில் தங்களிடையே ஏற்பட்ட போட்டி, பொறாமை மற்றும் மனோ இச்சையின் காரணமாக மாறுபட்டுக் கொண்டனர். அல்லாஹ் நிர்ணயித்த “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற நியதிப் படி, அவர்கள் தம் செயலுக்கு ஏற்ப பலன்களை பெற்றுக் கொண்டனர். இதுவே மனிதர்களிடையே காலம் காலமாக நடந்து வந்த உண்மை வரலாறாகும்.

3:20

فَإِنۡ حَآجُّوكَ فَقُلۡ أَسۡلَمۡتُ وَجۡهِيَ لِلَّهِ وَمَنِ ٱتَّبَعَنِۗ وَقُل لِّلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡأُمِّيِّـۧنَ ءَأَسۡلَمۡتُمۡۚ

3:20. இத்தகைய தூய மார்க்கத்தை இப்போது எதிர்ப்பவர்களின் நிலைமையும் இதுவே ஆகும். இறைவழி காட்டுதலை எடுத்துரைப்பவரே! மார்க்க சம்பந்தமாக இனியும் அவர்கள் தர்க்கம் செய்தால், அவர்களிடம், “நான் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படுபவனாகவே இருக்கின்றேன்” என்றும், “என்னைப் பின்பற்றுபவர்களும் அவ்வாறே செயல்படுகிறார்கள்” என்றும் அறிவித்து விடுங்கள். வேதமுடையவர்களிடமும் இறைவழிகாட்டுதல் பெறாதவர்களிடமும், “நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படுகிறீர்களா?” என்று கேளுங்கள்.

فَإِنۡ أَسۡلَمُواْ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا عَلَيۡكَ ٱلۡبَلَٰغُۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ ٢٠

அப்படி அவர்களும் அடிபணிந்து வந்தால், அவர்கள் நேர்வழியினை நிச்சயமாகப் பெறுவார்கள். மாறாக அவர்கள் அவற்றைப் புறக்கணித்து விட்டால், அதற்கு நீர் பொறுப்பாளி அல்ல. நேர்வழியினை எடுத்துச் சொல்வதுதான் உம் மீதுள்ள கடமை. அவற்றை ஏற்று நடப்பதும், நிராகரிப்பதும் அவரவர் விருப்பத்திற்குள்ளான விஷயமாகும். (18:29) ஆக எது எப்படி இருந்தாலும் ஒவ்வொருடைய செயலையும் அல்லாஹ் நிர்ணயித்த “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே வரும்.

3:21

إِنَّ ٱلَّذِينَ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيۡرِ حَقّٖ وَيَقۡتُلُونَ ٱلَّذِينَ يَأۡمُرُونَ بِٱلۡقِسۡطِ مِنَ ٱلنَّاسِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ٢١

3:21. அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை ஏற்க மறுப்பதுடன், சிலர் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு/சமூகஅமைப்பு செயல்படாதவாறு இடையூறுகளை ஏற்படுத்தியும் வருகிறார்கள். மேலும் இறைத்தூதர்கள் மற்றும் சமூகப் பணியில் தம்மை அர்ப்பணிக்க முன்வருபவர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கவே சதி செய்து வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை எச்சரித்து விடுங்கள். அவர்களுடைய சூழ்ச்சிகளெல்லாம் பலனளிக்காது. இறுதியில் அவர்கள் பெரும் அழிவினை சந்திப்பார்கள் என்று எச்சரித்து விடுங்கள்.

3:22

أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ ٢٢

3:22. இத்தகையவர்கள் செய்து வரும் செயல்கள் யாவும் தற்காலிக வாழ்விலும், வருங்கால நிலையான வாழ்விலும் எவ்வித பலனும் அளிக்காது. அவையே அவர்களுடைய அழிவுக்கு காரணிகளாகவும் அமைந்து விடும். இறுதியில் அவர்களுக்கு உதவி புரிபவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.

3:23

أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يُدۡعَوۡنَ إِلَىٰ كِتَٰبِ ٱللَّهِ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٞ مِّنۡهُمۡ وَهُم مُّعۡرِضُونَ ٢٣

3:23. வேதத்தின் ஒரு பகுதி மட்டும் (சமய நூல்கள்) அளிக்கப்பட்டவர்களை நீங்கள் கவனித்தீர்களா? தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படியே தீர்த்துக் கொள்ளும்படி அவர்களுக்கு கட்டளை இடப்பட்டிருந்தது. ஆனால் அவர்களிலுள்ள மதகுருமார்கள் அதைப் புறக்கணித்து மக்களை திசை திருப்பி விட்டனர்.

3:24

ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامٗا مَّعۡدُودَٰتٖۖ وَغَرَّهُمۡ فِي دِينِهِم مَّا كَانُواْ يَفۡتَرُونَ٢٤

3:24. இவ்வாறு அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்பட அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது? “நாங்கள் நரகத்தில் தள்ளப்பட்டாலும், சில காலம்தான் இருக்க நேரிடும். அதன் பின் நாம் சுவர்க்கத்திற்குச் சென்று விடுவோம்” என்று பொய்யான கற்பனைகளை மக்களிடம் சொல்லி வருவதால், இறை வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட தைரியம் வந்துவிட்டதா? மார்க்கத்தில் அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வருவதெல்லாம் இறுதியில் ஏமாற்றத்தையே தரும்.

3:25

فَكَيۡفَ إِذَا جَمَعۡنَٰهُمۡ لِيَوۡمٖ لَّا رَيۡبَ فِيهِ وَوُفِّيَتۡ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ٢٥

3:25. அவர்கள் செய்துவரும் செயல்களெல்லாம் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டத்தின் பிடியிலிருந்து ஒரு போதும் தப்பமுடியாது. அதே சமயம் அவர்கள் அநியாயமும் செய்யப்பட மாட்டார்கள். அதாவது நல்லதோ கெட்டதோ அவரவர்களின் செயலுக்கேற்ற பலன்களையே பெற்றுக் கொள்வார்கள். அதில் யாரும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். இதில் யாரும் தலையிடவும் முடியாது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

3:26

قُلِ ٱللَّهُمَّ مَٰلِكَ ٱلۡمُلۡكِ تُؤۡتِي ٱلۡمُلۡكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلۡمُلۡكَ مِمَّن تَشَآءُ

3:26. “அல்லாஹ்வே! அகிலங்கள் அனைத்தும் உன் ஆதிக்கத்திற்கு உட்பட்டே செயல்படுகின்றன. அதே போல் மனித விஷயத்திலும் நீ நிர்ணயித்த விதிமுறைகளின் படியே நடைபெறுகின்றன. அதன்படி மனிதனுக்கு ஆட்சி அதிகாரம் கிடைப்பதும், (பார்க்க 24:55, 21:105) ஆட்சியை இழந்து விடுவதும், (பார்க்க 8:53,13:11) அவரவர் திறமையும் தகுதியும் பொறுத்தே அமைகின்றன. இவை யாவும் நீ வகுத்துத் தந்த சட்ட விதிமுறைகளின் படியே நடைபெறுகின்றன.

وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُۖ بِيَدِكَ ٱلۡخَيۡرُۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ٢٦

மேலும் மனிதனுக்கு கிடைக்கும் கண்ணியமான வாழ்வும், இழிவான வாழ்வும் இதே அடிப்படையில் தான் ஏற்படுகின்றன. இவை எல்லாம் மனிதனின் தகுதிக்கும் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்ப கிடைக்கின்றன. ஆனால் உன் புறத்திலிருந்து கிடைப்பதோ நன்மைக்கான வழிகாட்டுதல்களே ஆகும். நிச்சயமாக நீ எல்லா விஷயங்களிலும் ஆற்றல் மிக்கவனாக இருக்கின்றாய்” இந்த உண்மையை மக்களிடம் கூறுவீர்களாக.

3:27

تُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَتُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِۖ وَتُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَتُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّۖ وَتَرۡزُقُ مَن تَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ ٢٧

3:27. அல்லாஹ்வின் ஆதிக்கத்திற்கு உட்பட்டே அனைத்தும் நடைபெறுகின்றன என்பதற்கு பிரபஞ்ச செயல்பாடுகளே (System) ஆதாரமாக விளங்குகின்றன. இருள் சூழ்ந்துக்கொள்ளும் இரவு, வெளிச்சத்தைக் கொண்டு பளிச்சிடுவதும், பளிச்சிடும் பகல் இருள் சூழந்து கொள்வதும், உயிரினங்கள் அனைத்திற்கும் வாழ்வும் மரணமும் ஏற்படுவதும் அல்லாஹ் விதித்துள்ள சட்ட விதிமுறைகளின் படியே நடைபெறுகின்றன. இவற்றை கவனத்தில் கொண்டு முறைப்படி திறமையுடன் உழைப்பவர்களுக்கு பன்மடங்கு வாழ்வாதாரங்களை கிடைக்கச் செய்கின்றான்.

3:28

لَّا يَتَّخِذِ ٱلۡمُؤۡمِنُونَ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۖ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَلَيۡسَ مِنَ ٱللَّهِ فِي شَيۡءٍ

3:28. இறைவழிகாட்டுதலை ஏற்று சிறப்பான சமுதாயத்தை உருவாக்க பாடுபடுபவர்கள், அந்த அமைப்பின் பகைவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வது முறையாகாது. அப்படி அவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது இறை ஆட்சியமைப்போடு உள்ள தொடர்பில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விடும். உங்களுடைய பாதுகாப்பு கருதி அவர்களோடு சுமுகமாக வாழ்வது என்பது இயல்பு.

إِلَّآ أَن تَتَّقُواْ مِنۡهُمۡ تُقَىٰةٗۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفۡسَهُۥۗ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ٢٨

மற்றபடி நீங்கள் தற்காப்பு விஷயத்தைக் கவனத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்க பாடுபடவேண்டும். உங்களுடைய இறுதி இலக்கும் இதுவே ஆகும்.

3:29

قُلۡ إِن تُخۡفُواْ مَا فِي صُدُورِكُمۡ أَوۡ تُبۡدُوهُ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَيَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ٢٩

3:29. இதையும் மீறி அவர்களோடு உறவு வைத்துக்கொள்ள நினைப்பவர்கள், ஒரு விஷயத்தை நன்கு தெரிந்துக் கொள்ளட்டும். அவர்களோடு மறை முகமாக உறவை வைத்துக் கொண்டாலும், வெளிப்படையாக வைத்துக் கொண்டாலும் அல்லாஹ்வை பொறுத்தவரை இரண்டும் சமமானதே. அல்லாஹ்விடம் எதுவும் மறைக்க முடியாது. நீங்கள் செய்வது மட்டுமின்றி வானங்களிலும் பூமியிலும் நடப்பவை யாவும் அவனுடைய ஞானத்திற்கு வெளியே செல்லவே இயலாது.

ஏனெனில் அவன் படைத்த அனைத்து படைப்புகளுமே அவனுடைய சட்ட விதிமுறைக்கு உட்பட்டே செயல்படுகின்றன.

3:30

يَوۡمَ تَجِدُ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ مِنۡ خَيۡرٖ مُّحۡضَرٗا وَمَا عَمِلَتۡ مِن سُوٓءٖ تَوَدُّ لَوۡ أَنَّ بَيۡنَهَا وَبَيۡنَهُۥٓ أَمَدَۢا بَعِيدٗاۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفۡسَهُۥۗ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ٣٠

3:30. எனவே அல்லாஹ்வின் விதிமுறைகளின் படியே அவரவர் செய்து வரும் நன்மையான செயல்களோ, அல்லது தீமையான செயல்களோ அதற்கேற்ற பலன்களை அதற்குரிய காலக் கட்டத்தில் பெற்றுக்கொள்வார். தான் செய்த தீமையின் விளைவுகள் தமக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று அவன் ஆயிரம்தான் விரும்பினாலும் அது ஒருபோதும் நடக்காது. ஏனெனில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள நடைமுறை சட்ட திட்டங்கள் யாருக்கும் அடிபணியாது. அல்லாஹ் அனைவர் மீதும் அளவு கடந்த கருணை உள்ளவன் என்பதால் அவனிடமிருந்து இந்த எச்சரிக்கை செய்யப்படுகிறது.

3:31

قُلۡ إِن كُنتُمۡ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِي يُحۡبِبۡكُمُ ٱللَّهُ وَيَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ٣١

3:31. சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! நீர் அவர்களிடம், “நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்விடம் உள்ள தொடர்பு நீடிக்கவேண்டும் என்று விரும்பினால், அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள். மேலும் அதன் அடிப்படையில் நான் ஏற்படுத்தி வரும் ஆட்சியமைப்புச் சட்டங்களுக்கும் (By Laws) அடிபணிந்து செயல்படுங்கள். அப்போது தான் அல்லாஹ்வின் நேசம் உங்களுக்குக் கிடைத்து வரும். நிச்சயமாக இந்த ஆட்சியமைப்பு கருணையோடு அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டு உள்ளது” என்று கூறுவீராக.

3:32

قُلۡ أَطِيعُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَۖ فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡكَٰفِرِينَ٣٢

3:32. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள். மேலும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஆட்சியமைப்பின் நடைமுறைச் சட்டங்களுக்கும் அடிபணியுங்கள். இவ்விரண்டில் எதைப் புறக்கணித்தாலும் நிராகரிப்பவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். எனவே இறைவழி காட்டுதலின் படி நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு எதிராகச் செயல் படுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

3:33

۞ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰٓ ءَادَمَ وَنُوحٗا وَءَالَ إِبۡرَٰهِيمَ وَءَالَ عِمۡرَٰنَ عَلَى ٱلۡعَٰلَمِينَ٣٣

3:33. இவ்வாறு சிறப்பாக வாழ்ந்து காட்டியவர்கள் பட்டியலில் ஆதிகால மனிதனின் ஆரம்பக் கால நாகரிக வாழ்க்கை முறை – அதைத் தொடர்ந்து நூஹ், இப்ராஹீம் சந்ததியர்கள், அவருடைய சந்ததியர்களின் ஒரு கிளையான மூஸா, ஹாரூன் மற்றும் இம்ரானின் குடும்பத்தார் - ஆகியோர் அழகிய ஆட்சியமைப்பை ஏற்படுத்தி அக்காலத்தில் வாழ்ந்த மற்ற சமுதாயங்களை விட எல்லா வளங்களுடனும் சிறப்பாக வாழ்ந்தார்கள்.

3:34

ذُرِّيَّةَۢ بَعۡضُهَا مِنۢ بَعۡضٖۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ٣٤

3:34. அவர்கள் அனைவரும் ஒருவர் மற்றவரின் சந்ததியர்கள் ஆவார்கள். யாவற்றையும் கேட்பவனும் நன்கறிபவனுமாகிய அல்லாஹ்வின் வழி காட்டுதலின்படி வாழ்ந்தவர்கள் ஆவார்கள்.

பனீ இஸ்ராயீல் சமூகத்தவர்களுள் வந்த நபிமார்களின் தொடரில் இறுதியாக ஈஸா நபியின் வாழ்க்கை வரலாறு வருகிறது. யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அவருடைய பிறப்பு மற்றும் மரணத்தைப் பற்றி யூகங்களின் அடிப்படையில் பல கதைகளை உருவாக்கி வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் பரப்பி இருக்கிறார்கள். அதில் அவருடைய வாழ்க்கைப் பற்றியும் விதவிதமாகக் கூறி வருகிறார்கள். அவரது தாயாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த கட்டுக் கதைகளை எல்லாம் கவனித்துப் பார்க்கும் போது, அவர் அல்லாஹ்வின் கட்டளைகளின் படி எந்த சீர்திருத்தங்களையும் செய்ததாகத் தெரிவதில்லை. அவர் ஏதோ ஒரு வானுலக தேவமகன். ஆன்மிக பாடங்களை கற்றுத் தந்தவர் போல் சித்தரிக்கப்படுகிறார். எனவே அவரைப் பற்றிய தவறான கருத்துகளைப் போக்க அல்லாஹ் என்ன கூறுகிறான் என்பதைக் கவனியுங்கள். அவருடைய வாழ்க்கை வரலாறு இவ்வாறு ஆரம்பமாகிறது.

3:35

إِذۡ قَالَتِ ٱمۡرَأَتُ عِمۡرَٰنَ رَبِّ إِنِّي نَذَرۡتُ لَكَ مَا فِي بَطۡنِي مُحَرَّرٗا فَتَقَبَّلۡ مِنِّيٓۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ٣٥

3:35. இம்ரானின் சந்ததியரில் ஒரு பெண்மணி, தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையை உலக வாழ்வைத் துறந்து, இறைவனின் பாதையில் முற்றிலும் வழிபட இறை இல்லத்திற்கே அர்ப்பணம் செய்யப் போவதாக உறுதி கொண்டிருந்தார்.* தன்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளும் படி இறைவனிடம் வேண்டியும் வந்தார். “இறைவா! நிச்சயமாக நீ அனைத்தையும் கேட்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்றார்.

அதாவது அக்காலத்தில் துறவிகளின் மடமாக செயல்பட்டு வந்த ஹைக்கலெ ஸுலைமானி என்கிற ஆசிரமத்தில் தன் குழந்தையை சிறு வயதிலேயே விட்டுவிட எண்ணினார்.

3:36

فَلَمَّا وَضَعَتۡهَا قَالَتۡ رَبِّ إِنِّي وَضَعۡتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا وَضَعَتۡ

3:36. தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும் என்றும், தன் வாழ்நாள் முழுவதும் அந்த ஆசிரமத்தின் சேவகனாக பணியாற்றுவான் என்றும் எண்ணியிருந்தார். ஆனால் அவருக்குப் பிறந்ததோ ஒரு பெண் குழந்தை. அவருக்குப் பிறந்த குழந்தையைப் பற்றியும் அக்குழந்தை வளர்ந்து அவளுடைய ஆற்றல் எவ்வாறு இருக்கும் என்பதும் அல்லாஹ்வுக்குத் தெரியும்.

وَلَيۡسَ ٱلذَّكَرُ كَٱلۡأُنثَىٰۖ وَإِنِّي سَمَّيۡتُهَا مَرۡيَمَ وَإِنِّيٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ٣٦

அக்குழந்தை மற்ற பெண்களைப் போல சாதாரண பெண்ணாக இருக்க மாட்டாள் என்பதும் அல்லாஹ்வுக்குத் தெரியும். ஆனால் அவளுடைய எதிர்காலத்தைப் பற்றி அப்பெண் மணிக்குத் தெரியாது. அவள் தன்னுடைய குழந்தைக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளதாகவும் அவளை ஆசிரமத்தில் தொண்டாற்ற அர்ப்பணிப் பதாகவும் கூறினார். அவளையும் அவளுக்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்தால், அந்தக் குழந்தைகளையும் தீயவர்களின் விஷமத்தனத்தை விட்டு பாதுகாப்பாக வைக்கும் படியும் இறைவனிடம் வேண்டினார்.

3:37

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٖ وَأَنۢبَتَهَا نَبَاتًا حَسَنٗا وَكَفَّلَهَا زَكَرِيَّاۖ

3:37. அவ்வாறே அவருடைய வேண்டுதலின் படி, அச்சிறுமி மர்யம் ஆசிரமத்தில் அழகிய முறையில் அர்ப்பணிக்கப்பட்டாள். மேலும் அவளை பாதுகாப்பாக வளர்த்து வர, ஜகரிய்யா நபி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

كُلَّمَا دَخَلَ عَلَيۡهَا زَكَرِيَّا ٱلۡمِحۡرَابَ وَجَدَ عِندَهَا رِزۡقٗاۖ قَالَ يَٰمَرۡيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَاۖ قَالَتۡ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ إِنَّ ٱللَّهَ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٍ ٣٧

ஜகரிய்யா நபி அந்த ஆசிரமத்திற்குப் போகும் போதெல்லாம், அவளிடம் உணவு வகைகள் இருப்பதைப் பார்த்து, அவை எங்கிருந்து வந்தன என்று வியந்து கேட்கும் போது, அல்லாஹ்விடம் இருந்து வந்தவை என அவள் அடக்கமாகப் பதில் சொல்லி விடுவாள். இப்படியாக எந்தச் சிரமுமின்றி சிறப்பாக வளர்ந்து வந்தாள். அல்லாஹ்வின் நாட்டப்படி செயல்படுவோருக்கு வசதி வாய்ப்புக்கள் தாராளமாக கிடைத்து விடுகின்றன.

அதாவது, “ஆலெ இம்ரான்” என்ற பெயரும் புகழும் பெற்ற வம்சத்தைச் சேர்ந்த (3:33) ஒரு சிறுமி துறவறத்தை மேற்கொண்டதால், அவருடைய பெயரும் புகழும் பரவின. எனவே அவளைப் பார்ப்பதற்கு அந்த ஆசிரமத்திற்கு வருபவர்கள், அவள் தங்கியிருக்கும் இடத்திற்கு வருவார்கள். அப்போது விதவித மான உணவுப் பொருட்களை அன்பளிப்பாகக் கொண்டுவந்து தருவது வழக்கமாக இருந்தது. அவற்றைப் பார்த்து அவை எங்கிருந்து வந்தன என்று கேட்டதற்கு அல்லாஹ்விடம் இருந்து வந்தன என்று அச்சிறுமி மர்யம் கூறிவிடுவாள்.

3:38

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُۥۖ قَالَ رَبِّ هَبۡ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةٗ طَيِّبَةًۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ٣٨

3:38. ஜகரிய்யா நபிக்கு அதுவரையில் குழந்தைச் செல்வம் இல்லாமல் இருந்தது. மர்யமைப் போல ஒரு குழந்தை தனக்கும் வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் தோன்றியது. அவருடைய இந்த ஆசை, “இறைவா! எனக்கு ஆற்றல்மிக்க பிள்ளையை கொடுத்தருள்வாயாக. நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை கேட்பவனாக இருக்கின்றாய்”என்று வார்த்தைகளாக உதிர்ந்தன.

அவருடைய பிரார்த்தனையின் விவரத்தை 19:2-6 பார்க்கவும்

3:39

فَنَادَتۡهُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَهُوَ قَآئِمٞ يُصَلِّي فِي ٱلۡمِحۡرَابِ أَنَّ ٱللَّهَ يُبَشِّرُكَ بِيَحۡيَىٰ مُصَدِّقَۢا بِكَلِمَةٖ مِّنَ ٱللَّهِ وَسَيِّدٗا وَحَصُورٗا وَنَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ٣٩

3:39. ஜகரிய்யா நபி தம் இருப்பிடத்தில் தம் கடமைகளை ஆற்றி வந்த போது, அவரை நோக்கி,”அல்லாஹ் உனக்கு ஒரு குழந்தைப் பாக்கியத்தை அளிக்கப் போகிறான். அவனுக்கு யஹ்யா என்று பெயரிட்டுள்ளான். அவன் அல்லாஹ்வின் கோட்பாடுகளை உண்மைப்படுத்திக் காட்டுபவனாக விளங்குவான். மேலும் அவன் ஒரு பெருங் கூட்டத்திற்குக் கண்ணியமிக்க தலைவனாகவும், ஒழுக்க மாண்புகளைப் பேணி நடப்பவனாகவும், மக்களை வழிநடத்திச் செல்பவனாக வும் இருப்பான்” என்று இறைச் செய்தி வந்தது.

ஜகரிய்யா நபி இதை கேட்டதும் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும் தன் முதுமையை எண்ணி, இந்த வயதில் தனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும் என்ற மனச் சஞ்சலத்தில் இருந்தார். எனவே அவர்,

3:40

قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَقَدۡ بَلَغَنِيَ ٱلۡكِبَرُ وَٱمۡرَأَتِي عَاقِرٞۖ

3:40. “இறைவா! நான் முதுமையை அடைந்துவிட்டேன். மேலும் என் மனைவியும் மலடாக இருக்கின்றாள். எனவே மர்யம் என் பராமரிப்பில் தத்தெடுத்த குழந்தை கிடைத்தது போல ஒரு குழந்தை கிடைக்குமா? இல்லை முறைப்படி பிறக்குமா?” என வினவினார்.

قَالَ كَذَٰلِكَ ٱللَّهُ يَفۡعَلُ مَا يَشَآءُ٤٠

அதற்கு, குழந்தைகள் பிறக்க எல்லோருக்கும் அல்லாஹ் எவ்வாறு விதிமுறைகளை நிர்ணயித்துள்ளானோ, “அதன்படியே ஆகும்” என்று பதில் வந்தது.

3:41

قَالَ رَبِّ ٱجۡعَل لِّيٓ ءَايَةٗۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَةَ أَيَّامٍ إِلَّا رَمۡزٗاۗ وَٱذۡكُر رَّبَّكَ كَثِيرٗا وَسَبِّحۡ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِبۡكَٰرِ٤١

3:41. இது குறித்து, தான் என்ன செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுக் கூறும்படி இறைவனிடம் ஜகரிய்யா நபி கேட்டுக் கொண்டதற்கு, “நீ மக்களுக்குப் போதிப்பதை மூன்று நாட்களுக்கு நிறுத்திவிட்டு, அந்தக் குழந்தை பிறப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பற்றி கவனம் செலுத்தி, அதற்கான முயற்சியை மேற்கொள். மற்றபடி காலை முதல் மாலை வரையிலுள்ள மற்ற அலுவல்களை முறைப்படி கவனித்து வா” என்று பதில் வந்தது.

அவ்வாறே அவருடைய மனைவியிடத்தில் இருந்த மலட்டுத்தனம் நீங்க சிகிச்சை செய்தபின், அவர்களுக்கு குழந்தை பிறந்தது. (பார்க்க 21:90) இப்படியாக தன் குழந்தையையும் ஆசிரமத்திலிருந்த மர்யமையும் அவர் நன்றாக பாதுகாத்து வந்தார். ஆண்டுகள் பல உருண்டோட மர்யமும் பருவ மங்கை ஆனார். அவர் ஆசிரமத்தில் இருந்த மற்ற கன்னி ஸ்திரிகளோடு (Nuns) வாழ்ந்து வந்தார். ஆனால் அங்கு மற்ற கன்னி ஸ்திரிகளுடன் மடாதிபதிகள் மற்றும் மதகுருமார்கள் முறைதவறி நடப்பதைப் பற்றி சிறுக சிறுக அவருக்கு தெரிய வந்தது. அவர்களுடைய பார்வை மர்யம் மீதும் விழாமல் இல்லை.

ஜகரிய்யா நபி மர்யமை வளர்த்து வந்ததோடு, தவ்ராத்தின் வழிகாட்டுதல்களையும் தெளிவாக கற்றுக் கொடுத்து வந்தார். எனவே மர்யம் மிகவும் பரிசுத்தமானவராக வளர்ந்து வந்தார். அங்கு நடந்து வந்த முறைகேடுகளைப் பற்றி அறிந்த போது, அதை வெறுத்தார். ஏனெனில் துறவறத்து விதிமுறைகளின் படி தாம்பத்திய உறவுகளுக்கே இடமிருப்பதில்லை. தகாத உறவுகளுக்கு ஏது இடம்? எனவே அங்கு மர்யமும் பயந்த நிலையில் வாழலானார். அந்த காலக் கட்டத்தில் மர்யமுக்கு ஜகரிய்யா நபி மூலமாக இறைவனிடமிருந்து ஒரு செய்தி வந்தது.

3:42

وَإِذۡ قَالَتِ ٱلۡمَلَٰٓئِكَةُ يَٰمَرۡيَمُ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰكِ وَطَهَّرَكِ وَٱصۡطَفَىٰكِ عَلَىٰ نِسَآءِ ٱلۡعَٰلَمِينَ٤٢

3:42. “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உன்னை உயர்நிலைக்கு எடுத்துச் செல்வான். அதாவது நீ பயப்படுவதுபோல் அவர்களுடைய தவறான ஆசைகளின் வலையில் சிக்கமாட்டாய். நீ பரிசுத்தமாகவே இருக்க அவன் பாதுகாப்பான். மேலும் உலகிலுள்ள மற்ற சாதாரண பெண்களைப் போல் நீ இல்லை. அவர்களை விட நீ பல வகையில் மேலோங்கியவளாக விளங்குவாய்” என்று அந்த செய்திக் குறிப்பு கூறிற்று.

3:43

يَٰمَرۡيَمُ ٱقۡنُتِي لِرَبِّكِ وَٱسۡجُدِي وَٱرۡكَعِي مَعَ ٱلرَّٰكِعِينَ٤٣

3:43. “மர்யமே! நீ தைரியமாக இரு. ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடான செயல்களை விட்டு விலகி இரு. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி செயல் பட்டு வருவதில் உறுதியாக இரு. நீ தனித்திருந்து வாழாமல், அங்கு நற்காரியங்களைச் செய்பவர்களோடு சேர்ந்து நீயும் பணியாற்றி வா” என்று அச்செய்திக் குறிப்பு கூறிற்று.

ஜகரிய்யா நபியின் பராமரிப்பிலிருந்து விடுவித்து விட்டு, மர்யமை தம்மில் ஒருவருடைய பொறுப்பில் கொண்டுவர வேண்டும் என்பதில் அந்த ஆசிரம மடாதிபதிகளும் குருமார்களும் தீவிரமாக இருந்தனர். அந்த விஷயத்தில் அவர்களுக்குள் போட்டியும் நிலவி வந்தது.

3:44

ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهِ إِلَيۡكَۚ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ يُلۡقُونَ أَقۡلَٰمَهُمۡ أَيُّهُمۡ يَكۡفُلُ مَرۡيَمَ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ يَخۡتَصِمُونَ٤٤

3:44. எனவே மர்யம் யார் பொறுப்பில் இருக்கவேண்டும் என்பதைக் கண்டறிய குலுக்குச்சீட்டு போட்டு பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தனர். நடந்து போன இந்த உண்மை விஷயங்களை எல்லாம் மக்கள் மறந்து விட்டனர். இப்போது யாருக்கும் எந்த உண்மையும் தெரியாது. நபியே! அந்த சமயம் நீயும் அங்கு இருந்ததில்லை. அங்கு நடந்த உண்மை விவரங்களை அல்லாஹ் உனக்கு வஹீ மூலமாகத் தெரியப்படுத்துகிறான்.

உண்மை நிலை தெரியாமல் மக்கள் மர்யமைப் பற்றி விதவிதமான கட்டுக் கதைகளைக் கூறி வருகின்றனர். (பார்க்க 4:156) அவற்றை நீக்கி உண்மை விஷயத்தை எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும். அதன்பின் மர்யம் யூஸூஃப் (Joseph) நஜ்ஜார் என்ற ஒரு தச்சர் வம்சத்தை சேர்ந்த ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அவருடன் மர்யம் திருமணம் செய்து கொண்டதாகவும் பைபிள்கள் கூறுகின்றன. அவர் திருமணம் செய்து கொண்டாலும் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்பது துறவறத்தின் விதிமுறையாகும். ஆனால் அந்த ஆசிரமத்தில் பெண் துறவிகளிடம் (Nuns) மதகுருமார்களும் மடாதிபதிகளும் தகாத முறையில் நடந்து கொள்வதைக் கவனித்த மர்யம், அவர்களுக்கு எதிராகப் போர்க் கொடி தொடுத்தார். எனவே அவருக்கு எதிராக எதிர்ப்புகள் வலுக்கவே அங்கு தொடர்ந்து நீடித்தால் தன் உயிருக்கும் கற்புக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடும் என அஞ்சி அங்கிருந்து இரகசியமாக வெளியேறி விட்டார். (19:16)

அவ்வாறு அந்த ஆசிரமத்தை விட்டு வெளியேறியதால், மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, அவரை தேட ஆரம்பித்தனர். எனவே அவர் அதற்கு அஞ்சி நசீரியா என்ற ஊருக்குச் சென்று மறைவாக வாழலானார். (பார்க்க 19:16-17) ஆசிரமத்தில் தங்கி தான் துறவறத்தை தொடர முடியும் என்பதல்ல. உலகில் எங்கிருந்தாலும் இல்லறத்தில் ஈடுபடாமல் பரிசுத்தமாக இருக்க முடியும் என்று மர்யம் திடமாக கருதியதும் அதற்கு ஒரு காரணமாகும். அவ்வாறு வாழ்ந்து வந்த இக்கட்டான சமயத்தில்தான் அவருக்கு ஒரு மகன் பிறக்கப் போகும் செய்தி அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது.

3:45

إِذۡ قَالَتِ ٱلۡمَلَٰٓئِكَةُ يَٰمَرۡيَمُ إِنَّ ٱللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٖ مِّنۡهُ ٱسۡمُهُ ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ وَجِيهٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمِنَ ٱلۡمُقَرَّبِينَ ٤٥

3:45. “மர்யமே! உனக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்ற நற்செய்தியை அல்லாஹ் அனுப்பியுள்ளான். அக்குழந்தையின் பெயர் மஸீஹ் மர்யமின் குமாரர் ஈஸா என்பதாக இருக்கும். உனக்குப் பிறக்கப் போகும் அக்குழந்தை இவ்வுலகிலும் மறுவுலகிலும் மிகவும் கண்ணியம் மிக்கவராகவும், இறைவனுக்கு நெருக்க மானவராகவும் இருப்பார்” என்று அச்செய்தியை கொண்டுவந்தவர் கூறினார்.

3:46

وَيُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗا وَمِنَ ٱلصَّٰلِحِينَ ٤٦

3:46. மேலும் அவர், “மர்யமே! உனக்குப் பிறக்கப்போகும் அக்குழந்தை இளமைப் பருவத்திலும் முதுமையிலும் மக்கள் மத்தியில் சிறந்த போதகனாக வருவான். எல்லா ஆற்றல்களுடன் கூடிய சிறந்த செயல் வீரனாகவும் இருப்பான்” என்று அச்செய்தியைக் கொண்டுவந்தவர் கூறினார்.

அதாவது ஒரு கன்னிஸ்திரி ஆசிரமத்தின் விதிமுறைகளை மீறி குழந்தையைப் பெற்றெடுத்துக் கொண்டால், அக்குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற மர்யமின் பயத்தை நீக்குவதாக இச்செய்தி அமைகிறது. துறவறத்தை மேற்கொள்ளும் ஒரு கன்னிஸ்திரி இல்லறத்தில் ஈடுபடுவதை கற்பனை கூட செய்ய முடியாது. விஷயம் இவ்வாறிருக்க ஒரு குழந்தையின் நற்செய்தி, அதுவும் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் தந்தது. இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள அவரது மனம் ஒப்பவில்லை. எனவே அவர்,

3:47

قَالَتۡ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي وَلَدٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞۖ

3:47. “அடக் கடவுளே! என்னை எந்த ஆடவரும் தீண்டுவதற்கு இல்லை என்றிருக்க, எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்?” “மேலும் நான் ஒருபோதும் முறைதவறியும் நடக்கவில்லையே!” (19:20) என்று வியந்து கேட்டார்.

قَالَ كَذَٰلِكِ ٱللَّهُ يَخۡلُقُ مَا يَشَآءُۚ

அதற்கு அந்த செய்தியைக் கொண்டு வந்தவர், குழந்தை பிறப்பதற்கு அல்லாஹ் எல்லோருக்கும் எவ்வாறு விதிமுறைகளை நிர்ணயித்துள்ளானோ, (30:30) “அவ்வாறே பிறக்கும்” என்று கூறினார்.

إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ٤٧

அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் படி தனக்கு கட்டளை இடப்பட்டிருப்பதை உணர்ந்தார். அவ்வாறே அந்தக் கட்டளையும் நிறைவேறியது.

மர்யமிடம் இருந்த மனச் சஞ்சலத்தைப் போக்க, பிறக்கப் போகும் அக்குழந்தையைப் பற்றி மேற்கொண்டு விவரங்களை அந்தச் செய்தியைக் கொண்டு வந்தவர் விளக்கினார்.

3:48

وَيُعَلِّمُهُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ ٤٨

3:48. அவர், “மர்யமே! உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை சாதாரண குழந்தை அல்ல. அக்குழந்தை பெரியவனானதும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தவ்ராத் மற்றும் இன்ஜீல் உடைய ஞானம் முழு அளவில் கற்று சிறப்பாக விளங்குவார்” என்றார்.

3:49

وَرَسُولًا إِلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَنِّي قَدۡ جِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ

3:49. அவர், பனீஇஸ்ராயீல் சமூகத்தவர்க்கு இறைத்தூதராக வருவார். நடைபிணங்களாக வாழும் தம் சமூகத்தவர்களை ஜீவனுள்ள சமுதாயமாக மாற்றி அமைக்க இறைவன் புறத்திலிருந்து நற்செய்திகளைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறுவார்.

أَنِّيٓ أَخۡلُقُ لَكُم مِّنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِ ٱللَّهِۖ

மேலும் அவர் மக்களிடம், “இறைவனின் வழிகாட்டுதலைக் கொண்டு உங்கள் அனைவரையும் புத்துயிர் பெற்று சிறப்பாக வாழ வழி செய்வேன். களிமண்ணாகப் புதைந்து கிடக்கும் உங்கள் சிந்தனை மற்றும் ஆற்றல்களை வளர்த்து, வானில் பறக்கும் சுதந்திரப் பறவைகளைப் போல் உயர் நிலைக்குக் கொண்டு செல்வேன். உங்களுடைய நற்செயல்களைக் கொண்டு உங்கள் வாழ்வை வளமாக்குவேன்” என்பார்.

وَأُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ وَأُحۡيِ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِ ٱللَّهِۖ

மேலும் அவர், “நீங்கள் கண்ணிருந்தும் குருடர்களாக வாழ்ந்து வருகிறீர்கள். அதனால் சமுதாயமே அருவருக்கத் தக்க குஷ்டத்தைப் போல் சீர்கெட்டுவிட்டது. எனவே இறைவழிகாட்டு தலைக் கொண்டு உங்கள் அனைவரையும் “நேர்வழி” என்னும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவேன்” என்பார். சுருங்கச் சொன்னால், “உங்களின் தீய செயல்களால் வாழ்வின் இழிநிலை என்ற மரணத்தின் பால் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். அதிலிருந்து உங்களை மீட்டு புத்துயிர் பெறச் செய்வேன்” என்பார்.

وَأُنَبِّئُكُم بِمَا تَأۡكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٤٩

“சட்டவிரோதமாகச் செயல்படும் பதுக்கல் பேர்வழிகளைப் (Hoardings) பற்றியும் அதனால் சமுதாயத்தில் ஏற்படும் சீர்கேடுகளைப் பற்றியும் உங்களிடம் எடுத்துரைக்கின்றேன்.மேலும் இறைவனின் வழிகாட்டுதலை ஏற்று நடந்தால் நிச்சயமாக உங்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்பதை உணர்வீர்கள்” என்பார்.

3:50

وَمُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيَّ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَلِأُحِلَّ لَكُم بَعۡضَ ٱلَّذِي حُرِّمَ عَلَيۡكُمۡۚ وَجِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ٥٠

3:50. மேலும் அவர் இஸ்ரவேலர்களிடம், “எனக்கு வஹீ மூலமாகக் கிடைத்துள்ள வழிகாட்டுதல்கள் ஏற்கனவே உங்களிடமுள்ள தவ்ராத்தில் கூறப்பட்டவையே. அவற்றை உண்மைப்படுத்தி உங்களை வழிநடத்திச் செல்லவே வந்துள்ளேன். நீங்களே உருவாக்கி வைத்துள்ள தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களை நீக்கிவிடவே வந்துள்ளேன். ஆக இறைவனிடமிருந்து உங்களுக்கான வாழ்க்கை நெறிமுறைகளை கொண்டு வந்துள்ளேன். அவற்றைப் பின்பற்றுங்கள். அதனடிப்டையில் நான் உருவாக்கும் சமூக அமைப்பு சட்டங்களுக்கு (By-Laws) அடிபணியுங்கள்” என்பார்.

3:51

إِنَّ ٱللَّهَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ٥١

3:51. “நான் உருவாக்கி வரும் சமூக அமைப்பு, உங்களையும் என்னையும் படைத்துப் பரிபாலிப்பவனாகிய இறைவன் வகுத்துத் தந்துள்ள கொள்கை கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே அதற்கு முற்றிலும் அடிபணிந்து வாழுங்கள். அதுவே உங்கள் அனைவரையும் நேரானப் பாதைக்கு அழைத்துச் செல்லும்” என்பார்

“இப்படிப்பட்ட உயர் பண்புகளையும் பேராற்றல்களையும் கொண்டு விளங்கப் போகும் குழந்தையைப் பெற்றெடுக்க தயக்கம் காட்டுகிறாயா? இறைவனின் மாபெரும் செயல்திட்டத்தை நிறைவேற்ற இறைவன் விதியாக்காத துறவித்தனத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டங்களின் படி (சுன்னத்தல்லாஹ்) இல்லற வாழ்க்கையை மேற்கொள்” என்று மர்யமிடம் இறைச் செய்தியை கொண்டுவந்தவர் கூறுவதாகப் புலனாகிறது. அவ்வாறே அவரும் முறைப்படி குழந்தையைப் பெற்றெடுத்தார். அதுமட்டுமின்றி ஈஸா நபிக்கு ஒரு தம்பியும் இரண்டு தங்கைகளும் இருந்தனர் என்றும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. மர்யம் திருமணம் செய்துக் கொண்டு இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தார் என்றும் குறிப்புகள் கிடைக்கின்றன. எனவே ஈஸா நபி தந்ததையின்றி பிறந்தார் என்ற கூற்றிற்கு இடமே இல்லை. திருக்குர்ஆனில் எல்லா நபிமார்களின் தாய் தந்தையரின் பெயர்கள் இடம் பெறவுமில்லை.

ஈஸா இப்னு மர்யமா – அதாவது மர்யமின் குமாரர் ஈஸா என்று பெயர் வந்ததற்குக் காரணம் உலகில் நிலவிவந்த “துறவித்தனம்” என்ற தவறான கொள்கையை மர்யம் வேரறுத்துக் காட்டிய புரட்சிகரமான பெண்மணி ஆவார். ஆசிரமம் என்ற பெயரில் நடக்கும் முறைகேடுகளுக்குப் பலியாகாமல் தன் கற்பை பாதுகாதுக் கொண்டு தன்னந் தனியாக எதிர்ப்பது சாதாரண விஷயமல்ல. ஆசிரமத்தைச் சார்ந்தவர்களால் சிறிது காலத்திற்கு மர்யம் அவச்சொல்லுக்கு ஆளானாலும், (பார்க்க 4:156) காலப் போக்கில் அவருடைய புரட்சிகர செயலும், அவர் தன் மகன் ஈஸாவை வளர்த்ததும் அவர் கற்றிருந்த தவ்ராத்தின் போதனைகளை ஈஸாவுக்கும் கற்றுத் தந்து பெரும் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதிலும் ஆணிவேராகத் திகழந்தார். ஆக அவர் உலக வரலாற்றில் தலைசிறந்த பெண்மணி என்ற முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றார் (66:12). எனவே ஈஸா “மர்யமின் குமாரர் ஈஸா” என்ற பெயரைப் பெற்றார்.

அதன்படி அந்தக் குழந்தை பிறந்து வளர்ந்து வாலிப வயதை அடைந்த போது, அவருக்கு தவ்ராத் (Old Testaments) மற்றும் இன்ஜீல் (New Testament) என்கிற பைபிளின் ஞானம் முழுஅளவில் கிடைத்தது. அதன்படி ஒரு சமுதாயத்தை உருவாக்கிட மக்களுடைய ஆதரவை திரட்ட, இறை வழிகாட்டுதலின் பலன்களைப் பற்றி மக்களிடம் போதித்தார். அவருடைய போதனைகள் மக்களிடையே பரவியது. ஆனால் இந்தக் கொள்கைகள் அங்கிருந்த அரசியல் தலைவர்களுக்கும் யூதர்களில் இருந்த மதகுருமார்களுக்கும் எதிராக இருந்தன. இந்தப் போதனைக்கு எதிர்ப்புகள் வளரவே

3:52

۞ فَلَمَّآ أَحَسَّ عِيسَىٰ مِنۡهُمُ ٱلۡكُفۡرَ قَالَ مَنۡ أَنصَارِيٓ إِلَى ٱللَّهِۖ قَالَ ٱلۡحَوَارِيُّونَ نَحۡنُ أَنصَارُ ٱللَّهِ ءَامَنَّا بِٱللَّهِ وَٱشۡهَدۡ بِأَنَّا مُسۡلِمُونَ ٥٢

3:52. தம் சமுதாயத்திலுள்ள அனைவரும் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதை உணர்ந்தார். எனவே, “அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு உருவாக எனக்கு துணை நிற்பவர்கள் யார்?” என்று அழைப்பு விடுத்தார். அதற்கு அவரை முழு அளவில் ஏற்றுக் கொண்டவர்கள், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு ஏற்படுத்திட துணை நிற்பதாகவும்,அல்லாஹ்வின் வழிகாட்டுதலை முற்றிலும் ஏற்று அதன்படி செயலாற்ற போவதாகவும் கூறி, சிலர் அவரிடம் இணைந்தனர்.

3:53

رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلۡتَ وَٱتَّبَعۡنَا ٱلرَّسُولَ فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّٰهِدِينَ٥٣

3:53. அவ்வாறு வந்து இணைந்தவர்கள், தம்மைப் படைத்து பரிபாலிப் பவனாகிய இறைவன் வகுத்துத் தந்துள்ள சட்ட திட்டங்களை முற்றிலும் ஏற்றுக் கொள்வதாகவும் அதன் அடிப்படையில் வழிநடத்திச் செல்ல வந்துள்ள இறைத்தூதரின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதாகவும் உறுதியளித்தனர். இறைவனின் வழிகாட்டுதலை உண்மைப்படுத்திக் காட்டியவர்கள் பட்டியலில் தம்மையும் இணைத்துக் கொள்ளும்படி இறைவனிடம் பிரார்த்தித்தனர்.

இப்படியாக அந்தச் சமுதாயம் இரண்டாகப் பிரிந்தது. அதில் ஒன்று மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியானப் பாதையை ஏற்று நடப்பவர்கள், மற்றொன்று அதை எதிர்ப்பவர்கள். ஈஸா நபியை எதிர்த்து வந்த தலைவர்களும் மதகுருமார்களும் அவருக்கெதிராக விதவிதமான சூழ்ச்சிகளைச் செய்து வந்தனர். இந்த மார்க்க பிரச்சாரங்களை விட்டுவிட அவரிடம் தர்க்கமும் செய்து பார்த்தனர் (19:28-33).இவை எல்லாம் பலன் அளிக்காததால்

3:54

وَمَكَرُواْ وَمَكَرَ ٱللَّهُۖ وَٱللَّهُ خَيۡرُ ٱلۡمَٰكِرِينَ ٥٤

3:54. அவரைக் கொன்றுவிட திட்டமிட்டனர். ஆனால் அதிலிருந்து தப்பிச் செல்ல அல்லாஹ்வின் ஏற்பாடுகளில் சிறந்த வழிகள் பல இருந்தன.

அவரை சிறைப் பிடித்து சிலுலையில் ஏற்றி, கொடூரமான முறையில் கொன்று விடுவது என்று பகைவர்கள் திட்டமிட்டு இருந்தார்கள். அது நிறைவேறாமல் போயிற்று. அவர்களுடைய சதித் திட்டத்தை அல்லாஹ் ஈஸா நபிக்கு வெளிப்படுத்தி விட்டான். எனவே அவரும் அந்தச் சதியிலிருந்து தப்பித்துச் சென்றார். அவர் ஹிஜ்ரத் செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். (பார்க்க – 23:50)

3:55

إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَىٰٓ إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ ٱلَّذِينَ كَفَرُواْ

3:55. அல்லாஹ், “ஈஸாவே! அவர்களுடைய சதி திட்டங்களுக்கு நீ பலியாக மாட்டாய். உனக்கு நாம் நிர்ணயித்துள்ள சட்ட விதிமுறைகளின் படி இயற்கை யான மரணமே ஏற்படும். உனக்கு உயர்வும் கண்ணியமும் கிடைக்க நம் புறத்திலிருந்து வழிகள் பிறக்கும். உனக்கு எதிராக உன்னைப் பற்றி அவர்கள் விதவிதமான அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அவற்றை எல்லாம் போக்கி உன்னை ஓர் உயர் நிலைக்குக் கொண்டு செல்வேன்.

وَجَاعِلُ ٱلَّذِينَ ٱتَّبَعُوكَ فَوۡقَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۖ ثُمَّ إِلَيَّ مَرۡجِعُكُمۡ فَأَحۡكُمُ بَيۡنَكُمۡ فِيمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ٥٥

தற்சமயம் உன்னை ஏற்றுக் கொண்டவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். உன்னைப் பின்பற்றுவதில் அவர்கள் எதுவரையில் நிலைத்து இருக்கிறார்களோ அது வரையில் எதிர் தரப்பினரை விட மேலோங்கியவர்களாக வரச் செய்வேன். இது விஷயமாக ஒருவரை யொருவர் தர்க்கித்துக் கொண்டு இருப்பதில் பலனில்லை. அவரவர் செயல்களின் இறுதி முடிவுகள் என்பதெல் லாம், நாம் நிர்ணயித்துள்ள சட்ட விதிமுறைகளின் படியே நடைபெறும். இதில் யாருடைய விருப்பு வெறுப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை என்பதை நினைவில் கொள்ளுங் கள்” என்று அறிவித்தான்.

3:56

فَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَأُعَذِّبُهُمۡ عَذَابٗا شَدِيدٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ٥٦

3:56. யார் அல்லாஹ் வகுத்துத் தந்துள்ள ஒழுங்குமுறை சட்டங்களை நிராகரித்து, தம் மனம் போன போக்கில் சுயநலத்துடன் வாழ்கிறார்களோ, அவர்கள் இறுதியில் இவ்வுலகிலும் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்விலும் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள். அப்போது அவர்களை அதிலிருந்து மீட்போர் எவரும் இருக்க மாட்டார்கள் என்றும்;

3:57

وَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمۡ أُجُورَهُمۡۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ٥٧

3:57. மாறாக தனி நபரோ அல்லது சமுதாயமோ, எவர் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை ஏற்று ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி, அதற்காக உழைத்து வருகிறார்களோ, அவர்களுக்கு நற்பலன்கள் கிடைத்த வண்ணம் இருக்கும். அதில் சிறிதளவும் குறை இருக்காது. உண்மை என்னவென்றால் உலகில் அநியாயமாக அக்கிரம செயல்களில் ஈடுபடுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்றும் அச்செய்தியில் சொல்லப்பட்டு இருந்தது.

3:58

ذَٰلِكَ نَتۡلُوهُ عَلَيۡكَ مِنَ ٱلۡأٓيَٰتِ وَٱلذِّكۡرِ ٱلۡحَكِيمِ٥٨

3:58. இவையே ஈஸா நபியின் உண்மை வரலாறும், ஞானமிக்க அறிவுரைகளும் ஆகும். இவை வஹீ மூலமாக நபிக்கு அருளுகிறோம்.

எனவே ஈஸா நபி மற்ற ஏனைய நபிமார்களைப் போன்றே (5:75) இவ்வுலகில் பிறந்து, வளர்ந்து, இறைவழிகாட்டுதலைப் பெற்று, மக்களுக்கு அவற்றைப் போதித்து, தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்கி காட்டிய சீர்திருத்த வாதியே ஆவார் (61:14). அதன்பின் அவர் இயற்கை மரணம் எய்தினார் (5:117). நபிமார்கள் அனைவரும் மனிதர்களே அன்றி வேறில்லை. (21:7) அதே போன்று தான் இவரும்.

ஆனால் கிறிஸ்தவர்களைப் பாருங்கள். அவரை தேவகுமாரன் என்றும் (2:116), அவர் தந்தையின்றி பிறந்தவர் என்றும், அவர் ஒரு மலக்கு என்றும் (17:95) கூறி வருகிறார்கள். மனிதர்கள் செய்யும் பாவங்களை மன்னிக்கும் இரட்சகர் என்றும் கூறுகிறார்கள். இவையெல்லாம் கற்பனைக் கதைகளே. இவர்களின் இந்த கூற்றிற்கு ஈஸா நபி பொறுப்பு ஏற்கமாட்டார். (5:117)

3:59

إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ ٱللَّهِ كَمَثَلِ ءَادَمَۖ خَلَقَهُۥ مِن تُرَابٖ ثُمَّ قَالَ لَهُۥ كُن فَيَكُونُ٥٩

3:59. ஆக அல்லாஹ்வைப் பொறுத்தவரையில், ஈஸா நபியின் பிறப்பு இறப்பு என்பதெல்லாம் மற்ற மனிதர்களைப் போன்றதே ஆகும். அவன் நிர்ணயித்த சட்ட விதிமுறைகளின் படியே அவருடைய பிறப்பின் ஆரம்பமும் மற்ற மனிதர்களைப் போலவே (பார்க்க 22:5) மண்ணின் சத்திலிருந்து (ஆணின் உடலில் விந்து) உருவாகி, தாயின் வயிற்றில் கருவுற்று, (19:22) பிறந்தவரே ஆவார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அக்கட்டளையும் அவ்வாறே நிறைவேறியது. (பார்க்க 3:47)

3:60

ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُن مِّنَ ٱلۡمُمۡتَرِينَ ٦٠

3:60. இதுவே ஈஸா நபி விஷயமாக இறைவனிடமிருந்து வந்த உண்மை வரலாறாகும். இதுபற்றிய விவாதத்திற்கு இனி இடமில்லை.

3:61

فَمَنۡ حَآجَّكَ فِيهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ فَقُلۡ تَعَالَوۡاْ نَدۡعُ أَبۡنَآءَنَا وَأَبۡنَآءَكُمۡ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمۡ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمۡ ثُمَّ نَبۡتَهِلۡ فَنَجۡعَل لَّعۡنَتَ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰذِبِينَ ٦١

3:61. இந்த அளவிற்கு தெளிவாக அறிவுப்பூர்வமான ஆதாரங்களை அவர்கள் முன் சமர்ப்பித்த பின்பும், அவர்கள் இது விஷயமாக சச்சரவு செய்ய நாடினால், அவர்களிடம், “இது குறித்து இனியும் நான் உங்களிடம் தர்க்கம் செய்யத் தயாராக இல்லை. எனவே நீங்கள் உங்களைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் அழைத்துக் கொள்ளுங்கள். நாங்களும் இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட ஆண்களையும் பெண்களையும் அழைத்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் வழக்கப் படி உங்கள் விருப்பம் போல செயல்பட்டு வாருங்கள். நாமும் இறை வழிகாட்டுதலின் படி செயல்பட்டு வருகிறோம். இறுதியில் யார் வாழ்வின் சுபிட்சங்களை இழந்து தவிக்கப் போகிறார்கள் என்பதையும் பார்த்துக் கொள்ளலாம்” என்று அறிவித்து விடுங்கள்.

3:62

إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡقَصَصُ ٱلۡحَقُّۚ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ٦٢

3:62. இந்த அரைகூவலை வெளிப்படையாகவே அறிவித்துவிடுங்கள். ஏனெனில் பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் என்பதெல்லாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அந்த அதிகாரத்தில் பங்குபெறுவோர் வேறு எவரும் இல்லை. எனவே வேறு எவரையும் அல்லாஹ்வுக்கு இணையாக வைத்து பேசுவதில் நியாயமில்லை. மேலும் இறைவனுடைய செயல் திட்டங்கள் யாவும், எல்லாவற்றையும் மிகைத்து நிற்கும் தெளிவான ஞானத்தின் அடிப்படையில் உள்ளவை ஆகும். இதில் மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லை.

3:63

فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِٱلۡمُفۡسِدِينَ ٦٣

3:63. இந்த வெளிப்படையான அறிவிப்புக்குப் பின்பும் அவர்கள் குழப்பங்களை ஏற்படுத்துவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர்களைப் பற்றிய உண்மை அல்லாஹ்வுக்குத் தெரியும். அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்.

3:64

قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ تَعَالَوۡاْ إِلَىٰ كَلِمَةٖ سَوَآءِۭ بَيۡنَنَا وَبَيۡنَكُمۡ أَلَّا نَعۡبُدَ إِلَّا ٱللَّهَ وَلَا نُشۡرِكَ بِهِۦ شَيۡـٔٗا وَلَا يَتَّخِذَ بَعۡضُنَا بَعۡضًا أَرۡبَابٗا مِّن دُونِ ٱللَّهِۚ

3:64. எனவே, “தேவையற்ற சின்ன சின்ன விஷயங்களுக்காக நீங்கள் நம்மிடம் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். அவற்றை விட்டுவிட்டு பொதுப்படையான விஷயங்களின் பக்கம் வாருங்கள். அதாவது நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருடைய கட்டளைக்கும் அடிபணிந்து செயலாற்ற மாட்டோம். அல்லாஹ்வை விட்டுவிட்டு வேறு எவரையும் அதிகாரம் செலுத்தும் இறைவனாக எடுத்துக்கொள்ள மாட்டோம்” என்று வேதக்காரர்களான யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிட மும் அழைப்பு விடுங்கள்.

فَإِن تَوَلَّوۡاْ فَقُولُواْ ٱشۡهَدُواْ بِأَنَّا مُسۡلِمُونَ٦٤

இந்த அழைப்பை ஏற்க மறுத்தால், தம் போக்கில் அவர்களை விட்டுவிடுங்கள். “நாம் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மட்டும் அடிபணிந்து, ஒட்டு மொத்த சமூக நலனை நோக்கமாகக் கொண்டு செயல்படுபவர்களாக இருக்கிறோம் என்பதை நீங்களே கண்கூடாகப் பார்த்து வருகிறீர்கள்” என்று கூறிவிடுங்கள்.

3:65

يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تُحَآجُّونَ فِيٓ إِبۡرَٰهِيمَ وَمَآ أُنزِلَتِ ٱلتَّوۡرَىٰةُ وَٱلۡإِنجِيلُ إِلَّا مِنۢ بَعۡدِهِۦٓۚ أَفَلَا تَعۡقِلُونَ ٦٥

3:65. “அது போகட்டும். குறைந்தது வரலாற்று உண்மைகளையாவது நன்கு ஆராய்ந்து அறிந்துக் கொள்கிறீர்களா என்றால் அதுவுமில்லை. தேவையில்லாமல் இப்ராஹீம் நபி யூதரா கிறிஸ்தவரா என்ற தர்க்கத்தில் மூழ்கி இருக்கிறீர்கள். அவர் எப்படி யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருக்க முடியும்? இந்தப் பிரிவுகளெல்லாம் அவருடைய மறைவுக்குப் பின் தோன்றியவை ஆயிற்றே. மேலும் தவ்ராத்தும் இன்ஜீலும் பிற்காலத்தில் அருளப்பட்டவையே. இதையும் நீங்கள் அறியாதவர்களாக இருக்கிறீர்களே” என்று அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.

3:66

هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ حَٰجَجۡتُمۡ فِيمَا لَكُم بِهِۦ عِلۡمٞ فَلِمَ تُحَآجُّونَ فِيمَا لَيۡسَ لَكُم بِهِۦ عِلۡمٞۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ٦٦

3:66. “இப்ராஹீம் நபியைப் பற்றி நீங்கள் தர்க்கம் செய்து வருகிறீர்கள். ஆனால் அவர் படைத்த சாதனைகளைப் பற்றிய எந்த விவரமும் உங்களுக்குத் தெரியாது. அப்படிப்பட்ட நிலையில் உங்களிடம் எவ்வாறு நாம் விவாதிப்பது? அதைப் பற்றிய முழு ஞானமும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்களிடம் இல்லை” என்று சொல்லி விடுங்கள்.

3:67

مَا كَانَ إِبۡرَٰهِيمُ يَهُودِيّٗا وَلَا نَصۡرَانِيّٗا وَلَٰكِن كَانَ حَنِيفٗا مُّسۡلِمٗا وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ٦٧

3:67. இப்ராஹீம் நபி யூதராகவோ, கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. இவர்களாகவே இப்படிப்பட்ட தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆனால் அவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து உலகில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட அரும்பாடுபட்டவர் ஆவார். அவர் ஒருபோதும் மார்க்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தவுமில்லை. அல்லாஹ்வுக்கு மாற்றமாக செயல்பட்டதும் இல்லை.

3:68

إِنَّ أَوۡلَى ٱلنَّاسِ بِإِبۡرَٰهِيمَ لَلَّذِينَ ٱتَّبَعُوهُ وَهَٰذَا ٱلنَّبِيُّ وَٱلَّذِينَ ءَامَنُواْۗ وَٱللَّهُ وَلِيُّ ٱلۡمُؤۡمِنِينَ٦٨

3:68. மக்களில் யார் அவருடைய சொல்லுக்கு மதிப்பு கொடுத்து, அவரைப் பின்பற்றி வருகிறார்களோ, அவர்கள்தாம் அவருக்கு நெருக்கமானவர்கள் ஆவார்கள். இப்போது அவர் கொண்டு வந்த அதே ஓரிறைக் கொள்கையை இந்த இறைத் தூதரும் கொண்டு வந்துள்ளார். எனவே இவரும் அவருக்கு நெருக்கமானவர் ஆகின்றார். யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை ஏற்று அதன்படி செயலாற்றுகிறார்களோ, அவர்களுக்கே அல்லாஹ்வின் உதவியும் நெருக்கமும் கிடைக்கும்.

3:69

وَدَّت طَّآئِفَةٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَوۡ يُضِلُّونَكُمۡ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ٦٩

3:69. வேதமுடையோர்களில் உள்ள மதகுருமார்கள் உங்களையும் வழிகெடுக்க முயல்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களையே அன்றி உங்களை வழிகெடுக்க முடியாது. இந்த உண்மையை அவர்கள் புரிந்துக் கொள்வதில்லை.

3:70

يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَأَنتُمۡ تَشۡهَدُونَ ٧٠

3:70. வேதமுடையோர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுப்பதற்கு என்ன காரணம்? இவை யாவும் உங்களுக்குத் தெரிந்த உண்மைகள் தானே. அவ்வாறு தெரிந்திருந்தும் ஏன் நிராகரிக்கிறீர்கள்?

3:71

يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَلۡبِسُونَ ٱلۡحَقَّ بِٱلۡبَٰطِلِ وَتَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَأَنتُمۡ تَعۡلَمُونَ٧١

3:71. மனித குலத்தின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியானப் பாதையைக் காட்டும் மார்க்கத்தில் உண்மைக்குப் புறம்பான விஷயங்களை ஏன் கலக்குகிறீர்கள்? மேலும் நீங்கள் அறிந்துக்கொண்டே இந்த உண்மைகளை ஏன் மறைக்கிறீர்கள்?

இது மாபெரும் குற்றமல்லவா? மேலும் எக்காலத்திலும் நிரூபணம் ஆகக்கூடிய உண்மைகளில் அவநம்பிக்கை ஏற்படும்படி செய்து விடுகிறீர்களே! இவற்றை எல்லாம் தெரிந்துக் கொண்டே இவ்வாறு ஏன் செய்கிறீர்கள்? இதன் உள்நோக்கம் தான் என்ன?

3:72

وَقَالَت طَّآئِفَةٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ ءَامِنُواْ بِٱلَّذِيٓ أُنزِلَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَجۡهَ ٱلنَّهَارِ وَٱكۡفُرُوٓاْ ءَاخِرَهُۥ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ٧٢

3:72. வேதக்காரர்களிலுள்ள மதகுருமார்கள் தம் சமூகத்தவர்களிடம், “அல்லாஹ் விடமிருந்து அருளப்படுகின்ற வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதாக காலையில் சொல்லி, மூஃமின்களோடு சேர்ந்திருந்து பிறகு மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு, அதை ஏற்க மறுப்பதாக மாலையில் அறிவித்து விடுங்கள். இதனால் அவர்களில் சிலர் உங்களோடு சேர்ந்து விடக் கூடும்” என்று சொல்லி வருகிறார்கள். இதுவே அவர்களின் உள் நோக்கமாகும்.

3:73

وَلَا تُؤۡمِنُوٓاْ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمۡ قُلۡ إِنَّ ٱلۡهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤۡتَىٰٓ أَحَدٞ مِّثۡلَ مَآ أُوتِيتُمۡ

3:73. மேலும், அவர்கள் தம் சமூகத்தவர்களிடம், அவர்களின் வழிமுறைகளைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்கின்றனர். எனவே எந்த வழி காட்டுதல் அல்லாஹ்விடமிருந்து அருளப்படுகின்றதோ, அதுவே நேரான பாதையாக இருக்க முடியும் என்று கூறிவிடுங்கள். மேலும் உங்களுக்கு கொடுக்கப்பட்டது போல இன்னொருவருக்கும் வழிகாட்டுதல் அருளப்படுவதா என்றும், தாங்கள் வழிபடும் இறைவன் முன் அவர்களுடைய வாதம் மிகைத்து விடுவதா என்றும் தங்களுக்குள் வஞ்சனையுடன் பேசிக் கொள்கிறார்கள்.

أَوۡ يُحَآجُّوكُمۡ عِندَ رَبِّكُمۡۗ قُلۡ إِنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ٧٣

இறைத்தூதர்கள் தேர்வு விஷயத்திலும், “இறை வழிகாட்டுதலுக்காக தேர்வு செய்வது என்பதெல்லாம் அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் சம்பந்தப் பட்டவை ஆகும். அந்த திட்டத்தின் படி யார் அதற்குத் தகுதியானவரோ அவரைத் தான் அவன் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் விசாலமான ஞானத்தின் அடிப்படையைக் கொண்டதாகும் என்பதை அவர்களுக்கு விளக்கி சொல்லுங்கள்.

அவர்களிடம் இவ்வாறு கூறிவிடுங்கள்: “இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்படுவதன் நோக்கம், அவற்றை மக்களிடம் எடுத்துரைத்து, அவர்களை நல்வழிப்படுத்தி, சீர்த்திருத்தி, சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும். இது ஒரு சாதாரணப் பணியல்ல. அதற்காக சொல்லாற்றல், மனவலிமை,ஞானம், பொறுமை, தைரியம் என எல்லா வகையிலும் தகுதியானவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் மூலமாகத் தான் வழிகாட்டுதல்கள் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டன. இன்றைக்கும் அப்படிப்பட்ட தகுதி உடையவர் கள் தாம் இந்தக் குர்ஆனில் பதிவு செய்யபட்ட வழிகாட்டுதல்களை மக்களிடம் எடுத்துரைத்து, நபிமார்கள் செய்து காட்டியது போல் சீர்த்திருத்தங்களைக் கொண்டுவர முடியும்”

3:74

يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۗ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ٧٤

3:74. இறைவழிகாட்டுதல் பணிக்காக யாரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத் தால், சிறப்பாகச் செயல் படுத்துவார் என்பது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே அத்தகைய தகுதி உடையவரையே தேர்ந்தெடுத்து அவர் மூலம் இறைவழிகாட்டுதல்கள் அருளப்பட்டன. இதுவே அல்லாஹ்வின் மகத்தான கிருபை ஆகும்.

3:75

۞ وَمِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مَنۡ إِن تَأۡمَنۡهُ بِقِنطَارٖ يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ وَمِنۡهُم مَّنۡ إِن تَأۡمَنۡهُ بِدِينَارٖ لَّا يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ إِلَّا مَا دُمۡتَ عَلَيۡهِ قَآئِمٗاۗ

3:75. வேதமுடையவர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு பொற்குவியலையே ஒப்படைத்தாலும் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு உரியவர்களிடம் திருப்பி ஒப்படைத்து விடுவார்கள். இன்னும், இதற்கு மாற்றமாக சிலர் இருக்கிறார்கள். அவர்களை நம்பி எதை ஒப்படைத்தாலும் அதை திருப்பித் தரும்படி, மிரட்டிக் கேட்டாலொழிய திருப்பி கொடுக்கவே மாட்டார்கள்.

ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لَيۡسَ عَلَيۡنَا فِي ٱلۡأُمِّيِّـۧنَ سَبِيلٞ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ ٧٥

இதற்குக் காரணம் வேத அறிவுரைகளை பின்பற்றாததே ஆகும். ஏழை எளிய பாமர மக்களிடம் எதை அபகரித்துக் கொண்டாலும், அதை தட்டிக் கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் இருக்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால் இறைவனே இதற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் சொல்லி வருகிறார்கள். ஆனால் இது அல்லாஹ்வின் பெயரில் இட்டுக்கட்டிச் சொல்லப் படும் பொய்யான தகவலாகும்.

3:76

بَلَىٰۚ مَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ وَٱتَّقَىٰ فَإِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ ٧٦

3:76. உண்மை நிலை அதுவல்ல. யார் அல்லாஹ்வுக்கு அஞ்சி, தம் வாக்குறுதி களையும் கடமைகளையும் சிறப்பாக நிறைவேற்றி, இறை வழிகாட்டுதலைப் பேணி நடக்கிறார்களோ, அவர்கள் மட்டுமே அல்லாஹ்வுக்கு நேசமானவர்களாக ஆகிவிட முடியும்.

3:77

إِنَّ ٱلَّذِينَ يَشۡتَرُونَ بِعَهۡدِ ٱللَّهِ وَأَيۡمَٰنِهِمۡ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ لَا خَلَٰقَ لَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ وَلَا يَنظُرُ إِلَيۡهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ٧٧

3:77. அல்லாஹ்விடம் செய்துகொண்ட வாக்குறுதி பற்றி ஏற்கனவே 2:83இல் தெளிவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருந்தும் யார் இந்த வாக்குறுதிகளையும், சத்தியப் பிரமாணங்களையும் அற்ப ஆதாயங்களுக்காக புறந்தள்ளி விடுகிறார்களோ, அவர்களுக்கு குறுகிய கால பலன்கள் கிடைத்திடலாம். ஆனால் வருங்கால நிலையான வாழ்வில் அவர்களுக்கு எவ்வித நற்பாக்கியமும் கிடைக்காது. அந்த காலக் கட்டங்களில் அவர்களின் நிலைமையைப் பார்த்து, அதிலிருந்து அவர்களை காப்பாற்றுவது என்ற பேச்சிற்கே இடமிருக்காது. அவர்களுடைய முன்னேற்றமும் அல்லாஹ்வின் நியதிப்படி தடைபட்டுப் போகும். நாளுக்கு நாள் அவர்களுடைய நிலைமை மோசமடைந்து, அழிவு என்னும் பாழ்குழியில் சிக்கித் தவிக்க நேரிடும்.

3:78

وَإِنَّ مِنۡهُمۡ لَفَرِيقٗا يَلۡوُۥنَ أَلۡسِنَتَهُم بِٱلۡكِتَٰبِ لِتَحۡسَبُوهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَمَا هُوَ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَقُولُونَ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِ وَمَا هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ٧٨

3:78. அவர்களிலுள்ள சில மதகுருமார்கள், தம் பேச்சுத் திறமையால் மக்களிடம் அல்லாஹ் சொல்லாதவற்றை எல்லாம் இறைக்கட்டளைப் போலவே எடுத்துரைக்கிறார்கள். இவ்வாறாக மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட வழிமுறைகள், காலப் போக்கில் இறைச் சட்டங்களாக மாறிவிடுகின்றன. உண்மை அறியாத மக்களும் அவற்றை இறைக் கட்டளைகள் தான் என எண்ணி அவற்றையே கடைப்பிடித்து வருகிறார்கள். யாராவது இது விஷயமாக மத குருமார்களிடம் கேட்டால், அவை யாவும் அல்லாஹ்விடம் இருந்து வந்தவையே என்று தைரியமாக பதில் அளித்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில் அவை அல்லாஹ்விடம இருந்து வந்த கட்டளைகளாக இருப்பதில்லை. இந்த உண்மையை அவர்கள் அறிந்துக் கொண்டே அல்லாஹ்வின் பெயரில் இட்டுக்கட்டிச் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மட்டுமே அடிபணிந்து செயல்பட வேண்டும் என்பது மார்க்கத்தின் அடிப்படை கோட்பாடாகும். இவர்களுடைய போக்கு இந்த அடிப்படையையே தகர்த்து விடுகிறது. அதாவது அடிபணிய வைக்கும் அதிகாரம் எந்தத் தனி மனிதனுக்கும் அளிக்கப்படவில்லை. அந்த அதிகாரங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கே உரியதாகும்.

3:79

مَا كَانَ لِبَشَرٍ أَن يُؤۡتِيَهُ ٱللَّهُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُواْ عِبَادٗا لِّي مِن دُونِ ٱللَّهِ

3:79. எனவே எந்த மனிதராக இருந்தாலும், வேத ஞானம், ஆட்சி அதிகாரம், நபித்துவம் ஆகிய அனைத்துமே கிடைத்திருந்தாலும் சரியே, அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவதை விட்டுவிட்டு தன் கட்டளைக்கு இணங்கி செயல்பட அவர் மக்களிடம் கூற இயலாது.

وَلَٰكِن كُونُواْ رَبَّٰنِيِّـۧنَ بِمَا كُنتُمۡ تُعَلِّمُونَ ٱلۡكِتَٰبَ وَبِمَا كُنتُمۡ تَدۡرُسُونَ٧٩

மாறாக அவர் மக்களிடம், இந்த வேதத்தின் மூலமாக அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து செயல்படும் படியும், அதன் அடிப்படையில் உருவாக்கப்படும் ஆட்சி அமைப்புக்கு துணை நின்று சிறந்த செயல்வீரர்களாக விளங்கும்படியுமே அறிவுரை செய்து வருவார்.

சிந்தனையாளர்களே! இப்போது இந்தக் குர்ஆன் அருளப்பட்ட இறைத் தூதரான முஹம்மது நபிஸல் நம்மிடையே இல்லை. ஆனால் அவர் மூலமாக அருளப்பட்ட இறைவேதமான குர்ஆன் நம்மிடையே உள்ளது. இதன் போதனைகளை மட்டும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். வேறு சித்தாந்தங்களை இத்துடன் இணைத்துச் சொல்வது சரியல்ல.(6:89)

3:80

وَلَا يَأۡمُرَكُمۡ أَن تَتَّخِذُواْ ٱلۡمَلَٰٓئِكَةَ وَٱلنَّبِيِّـۧنَ أَرۡبَابًاۚ أَيَأۡمُرُكُم بِٱلۡكُفۡرِ بَعۡدَ إِذۡ أَنتُم مُّسۡلِمُونَ٨٠

3:80. அது மட்டுமின்றி பிரபஞ்ச இயற்கை சக்திகளாகிய மலக்குகளையும், இறைத் தூதர்களையும் இறைவனாக ஆக்கிக்கொள்ள மக்களிடம் இறைத்தூதர் ஒரு போதும் சொல்லமாட்டார். இறைவனுக்குக் கட்டுபட்டு வாழ்வதற்குப் பதிலாக மூடநம்பிக்கையில் மூழ்கிவிட கட்டளை இடமாட்டார். இறைவனுடைய கட்டளைகளுக்கு மட்டுமே அடிபணிந்து செயல்படுபவர்களாக நீங்கள் ஆகிவிட்ட பின்னர், இறைவனுக்கு எதிரான கொள்கையைப் பின்பற்ற அவர் எவ்வாறு கட்டளையிடுவார்?

இறை வழிகாட்டுதல்கள் என்பது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக வந்த வழிமுறையே ஆகும். அந்தந்த காலக் கட்டங்களில் வந்த ஒவ்வொரு இறைத்தூதரும், இறைச் சட்டங்களையும் அதன் நோக்கங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துரைத்து, அதன் அடிப்படையில் சமுதாய அமைப்பை உருவாக்கப் பாடுபட்டனர். பின்னர், தன் வாழ்நாள் முடியும் தருவாயில் சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தலைமை வகிப்பவர்களிடம், மார்க்கத்தை கட்டிக்காப்பாற்றி வரும்படி அறிவுறுத்தி அவர்களிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்வதும் மரபாக இருந்து வந்தது. (33:7) அது மட்டுமின்றி வருங்காலத்தில் -

3:81

وَإِذۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلنَّبِيِّـۧنَ لَمَآ ءَاتَيۡتُكُم مِّن كِتَٰبٖ وَحِكۡمَةٖ ثُمَّ جَآءَكُمۡ رَسُولٞ مُّصَدِّقٞ لِّمَا مَعَكُمۡ لَتُؤۡمِنُنَّ بِهِۦ وَلَتَنصُرُنَّهُۥۚ

3:81. சமுதாயம் வழிதவறி சென்றுவிட்ட நிலையில், மீண்டும் இறைவழி காட்டுதல் கொடுக்கப்பட்டு இந்த மார்க்கத்தை உண்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதர் வரும் போது, போட்டி பொறாமையோடு எதிர்த்து நிற்காமல் அவரை ஆதரித்து துணைபுரியும் படி வேதஞானம் பெற்றவர்களிடம் நபிமார்கள் உறுதிமொழி வாங்கிக் கொள்வதும் வழக்கமாக இருந்து வந்தது.

قَالَ ءَأَقۡرَرۡتُمۡ وَأَخَذۡتُمۡ عَلَىٰ ذَٰلِكُمۡ إِصۡرِيۖ قَالُوٓاْ أَقۡرَرۡنَاۚ قَالَ فَٱشۡهَدُواْ وَأَنَا۠ مَعَكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ٨١

இந்த உறுதிமொழி எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், அவர்கள் அனைவரையும் அழைத்து, இந்த உறுதிமொழியை கட்டிக் காப்பாற்றுவீர்களா என்று அந்த நபி கேட்பார். அவர்களும் அதைக் காப்பாற்றுவதாக உறுதிமொழி அளித்து விடுவார்கள். இந்த உறுதிமொழிக்கு அல்லாஹ்வும் சாட்சியாக இருப்பதாக அவர்களிடம் சொல்வார். அதாவது அவர்கள் எந்த அளவிற்கு அதை பேணி நடக்கிறார்கள் என்பதை அல்லாஹ் கண்காணித்து வருவதாகச் சொல்வார்.

இதே போன்று முஹம்மது நபிஸல் அவர்களும் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து ஸஹாபா பெருமக்களிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டார். ஹஜ்ஜதுல் விதாவில் முஹம்மது நபிஸல் அவர்கள் சொற் பொழிவாற்றிய போது, அங்கு கூடியிருந்த அனைத்து ஸஹாபாக்களிடமும், நான் இறை வழிகாட்டுதலை மெய்ப்படுத்தியதற்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருக்கிறீர்களா என்று கேட்டபோது, அவ்வாறே சாட்சியாக இருப்பதாக அனைவரும் பதிலளித்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

நபித்துவத் தொடர் முற்று பெற்றுவிட்ட நிலையில் (33:40) உலகம் இயங்கி வரும் காலம்வரை அல்லாஹ்விடம் இருந்து வழிகாட்டுதல்கள் நேரடியாக எந்த மனிதருக்கும் வராது என்றிருக்க (42:51), குர்ஆனின் போதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து, உலக மக்கள் அனைவரும் பயன்பெற பாடுபடுவோம் என்று அல்லாஹ்விடம் உறுதி மொழி அளித்ததற்கு இணங்க (3:187) அனைவரும் செயல்படுவோமாக.

3:82

فَمَن تَوَلَّىٰ بَعۡدَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ٨٢

3:82. எனவே இதற்குப் பின்னரும் எவரேனும் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து செய்த சத்தியத்திற்கு மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் வழிதவறிச் செல்பவர்கள் ஆகிறார்கள்.

இதுதான் காலம் காலமாக நடந்து வந்த உண்மை விஷயங்களாகும். இறைவழிகாட்டுதல்கள் இப்போது இந்தக் குர்ஆன் மூலமாக முழுமை பெற்றுவிட்டது (5:3) முஹம்மது நபிக்குப்பின், தானும் ஒரு நபி என அறிவித்துக் கொண்டவர்கள் பலர். அவர்களால் எவ்வித புதுமையான கொள்கை கோட்பாடுகளையும் கொண்டு வரவே முடியவில்லை. இந்த குர்ஆனை மட்டுமே பின்பற்றி செயல்படும் படி நபிக்கும் கட்டளை இடப்பட்டுள்ளது (6:106) ஆனால் மக்களோ இதற்கு மாற்றமான வழி முறைகளைப் பின்பற்றவே நாடுகின்றனர். அது எப்படி சரியாகும்?

3:83

أَفَغَيۡرَ دِينِ ٱللَّهِ يَبۡغُونَ وَلَهُۥٓ أَسۡلَمَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ طَوۡعٗا وَكَرۡهٗا وَإِلَيۡهِ يُرۡجَعُونَ٨٣

3:83. உண்மை என்னவென்றால், அகிலங்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் யாவும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே சிரம்பணிந்து செயல்படுகின்றன. மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்றவாறு விரும்பத் தக்க பலன்களையும் விரும்பத் தகாத விளைவுகளையும் ஏற்படுத்தும் படியாக வடிவமைத்து படைக் கப்பட்டுள்ளன.* எனவே மனித செயல்கள் யாவும் அல்லாஹ் நிர்ணயித்த விளைவுகள் என்ற இலக்கை நோக்கியே செல்லும் போது, அல்லாஹ்வுக்கு மாற்றமான மார்க்கத்தையா அவர்கள் தேடுகிறார்கள்?

அதாவது மனிதனின் நற்செயல்களுக்கு விரும்பத்தக்க பலன்களையும், தீய செயல்களுக்கு விரும்பத் தகாத விளைவுகளையும் ஏற்படும் படியாக பிரபஞ்ச இயற்கைச் சக்திகள் செயல்பட்டு வருகின்றன.

3:84

قُلۡ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ عَلَيۡنَا وَمَآ أُنزِلَ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَمَآ أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ

3:84. எனவே, “இறை வழிகாட்டுதல்களை நாம் முழு மனதுடன் ஏற்று செயல்படுகிறோம்” என்று அவர்களிடம் சொல்லி விடுங்கள். “இந்த குர்ஆன் மூலம் அருளப்படுகின்ற வழிகாட்டுதலும் ஏற்கனவே பல நபிமார்கள் மூலமாக அருளப்பட்டதும் ஒரே அடிப்படையைக் கொண்ட தாகும். குறிப்பாக இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யாஃகூப் மற்றும் அவர்களுடைய சந்ததியர்களுக்கு அருளப்பட்டதும், மேலும் மூஸா மற்றும் ஈஸா நபிக்கு அருளப்பட்டதும் இதே அடிப்படையைக் கொண்டவை ஆகும் (2:136). இதை நாம் மனதார ஏற்றுக் கொள்கிறோம்.

وَٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ٨٤

மேலும் அவர்கள் மூலமாக வந்த மார்க்க கோட்பாடுகளையும், நபிமார்கள் விஷயத்திலும் அவர்களில் எவரையும் பிரித்து நாம் வேற்றுமை பாராட்டுவதில்லை. நாம் அனைவரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டுமே அடிபணிந்து, மக்கள் நலனை பேணிக் காக்கும் செயல்வீரர்களாகிய “முஸ்லிம்கள்” ஆவோம் என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள்.

அனைத்து தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்கும் ஆட்சிமுறையே “இஸ்லாம்” என்பதாகும். இதேபோல் உலகிலுள்ள எல்லா தரப்பு மக்களுக்காகவும் இப்படிப்பட்ட ஆட்சியமைப்பை உருவாக்கி சிறப்பாகச் செயல்பட மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆக

3:85

وَمَن يَبۡتَغِ غَيۡرَ ٱلۡإِسۡلَٰمِ دِينٗا فَلَن يُقۡبَلَ مِنۡهُ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ٨٥

3:85. தனி நபரோ அல்லது சமுதாயமோ, அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்கும் “இஸ்லாம்” மார்க்கத்திற்கு மாற்றமாக வேறு எந்த வழிமுறையைப் பின்பற்ற விரும்பினாலும், அது இவ்வுலகில் நிரந்தரமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதையும் மீறி செயல்படுவோர் வருங்காலத்தில் பெரும் நஷ்டத்தில் தான் இருப்பார்கள்.

இதை அடுத்து அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட பின் அதற்கு மாற்றமாக செயல்படுபவர்களைப் பற்றியது.

3:86

كَيۡفَ يَهۡدِي ٱللَّهُ قَوۡمٗا كَفَرُواْ بَعۡدَ إِيمَٰنِهِمۡ وَشَهِدُوٓاْ أَنَّ ٱلرَّسُولَ حَقّٞ وَجَآءَهُمُ ٱلۡبَيِّنَٰتُۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ٨٦

3:86. இறைவழிகாட்டுதலின் படி இறைத்தூதர் மூலமாக சிறந்த ஆட்சியமைப்பை ஏற்படுத்தி, அதன் பலன்களை கண்கூடாகப் பார்த்து அறிந்துக்கொண்ட பின், அவற்றிற்கு மாற்றமாக ஒரு சமுதாயம் செயல்படு மானால், அது நேர்வழியை மீண்டும் எப்படி பெற முடியும்? அது வளம் மிக்க நாடாக எப்படி உருவாகமுடியும்? காரணம் அநியாயக்காரக் கூட்டத்திற்கு அல்லாஹ்வின் நேர் வழி ஒருபோதும் கிடைக்காதே.

3:87

أُوْلَٰٓئِكَ جَزَآؤُهُمۡ أَنَّ عَلَيۡهِمۡ لَعۡنَةَ ٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ٨٧

3:87.நினைவில் கொள்ளுங்கள். இவர்களுடைய இப்படிப்பட்ட போக்குகளினால், அந்த சமுதாயம் அல்லாஹ்வின் அருட்கொடைகளையும், பிரபஞ்சத்திலுள்ள இயற்கை சக்திகளின் மூலமாகக் கிடைக்கக் கூடிய பலன்களையும் இழந்து, ஒட்டு மொத்த மக்களின் நிலைமையும் மோசமாகி, அந்த சமுதாயமே பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். இதுவே அவர்களுக்குக் கிடைக்கின்ற கூலியாகும்.

3:88

خَٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنظَرُونَ٨٨

3:88. இந்த இழிவும் துயரமும் தொடர்ந்து நீடிக்கும். அதுவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லுமே அன்றி குறையாது. அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக ஏற்படும் இந்த விளைவுகள், குறித்த நேரத்தில் அவர்கள் முன் வந்து நிற்கும்.

3:89

إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ وَأَصۡلَحُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ٨٩

3:89. இத்தகைய இழிவான நிலையிலிருந்தும் துயரங்களிலிருந்தும் மீண்டு வெளிவர வழிமுறைகள் இருக்கின்றதா என்றால் நிச்சயம் உண்டு. அவர்கள் இதுவரையில் கடைப்பிடித்து வந்த தவறான வழிமுறைகளை விட்டு விட்டு, இறைவனின் வழிகாட்டுதலின் படி சமூக சீர்கேடுகளை நீக்கி, சமூக மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி முறையாக உழைத்தும் வரவேண்டும். அப்போது தான் அல்லாஹ்வின் நியதிப்படி இவர்களுடைய வாழ்வில் மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படும்.

3:90

إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بَعۡدَ إِيمَٰنِهِمۡ ثُمَّ ٱزۡدَادُواْ كُفۡرٗا لَّن تُقۡبَلَ تَوۡبَتُهُمۡ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلضَّآلُّونَ٩٠

3:90. மாறாக எவர்கள் உதட்டளவில் பாவமன்னிப்பு கோரிவிட்டு, இறை வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டு தம் பாவச் செயல்களை அதிகரித்துக் கொண்டார்களோ, அவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடையாது. எனவே அத்தகைய சமுதாயத்தவர்கள் தாம் முற்றிலும் வழிகெட்டவர்கள் ஆவார்கள்.

மேலும், இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். மனம் திருந்தி நேரானப் பாதையின் பக்கம் வரக்கூடிய வாய்ப்பு இந்த உலகில் வாழும் வரை தான் கிடைக்கும். திருந்துவதற்கான இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தாமல

3:91

إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمۡ كُفَّارٞ فَلَن يُقۡبَلَ مِنۡ أَحَدِهِم مِّلۡءُ ٱلۡأَرۡضِ ذَهَبٗا وَلَوِ ٱفۡتَدَىٰ بِهِۦٓۗ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ ٩١

3:91. எவர் தீய செயல்களில் நிலைத்திருந்து அந்த நிலையிலேயே மரணமடைந்து, மறுமையில் சுவன வாழ்வு கிடைக்க வேண்டும் என்று ஆயிரம்தான் விரும்பினாலும் ஒருபோதும் கிடைக்காது. அப்போது உலகிலுள்ள செல்வங்கள்

அனைத்தையும் கொண்டுவந்து கொட்டினாலும், அவர்களுடைய பாவங்களுக்கு ஈடாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அத்தகையவர்களுக்கு நோவினை தரும் வேதனைகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. மேலும் அவர்களை அதிலிருந்து மீட்க உதவி செய்வோர் எவரையும் காண மாட்டார்கள்.

பகுதி - 4

3:92

لَن تَنَالُواْ ٱلۡبِرَّ حَتَّىٰ تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَۚ وَمَا تُنفِقُواْ مِن شَيۡءٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ٩٢

3:92. எனவே இந்த உலக வாழ்விலும் மறுமையிலும் சுபிட்சமாக வாழ வழி என்ன என்பதே உங்கள் முன் உள்ள கேள்வியாகும். உங்கள் வாழ்வில் உயர்வும் கண்ணியமும் கிடைக்க வேண்டும் என்றால் உங்களுக்குப் பிரியமான செல்வங்களிலிருந்து, உங்கள் தேவைக்குப் போக (2:219) மிகுதியானவற்றை சமுதாய மெம்பாட்டிற்காக செலவழிக்க முன்வரவேண்டும். இதைத் தவிர வேறு எந்த வழிமுறையைக் கடைப்பிடித்தாலும் சுபிட்சமான வாழ்வுக்கு வழி கிடைக்காது. ஆக நீங்கள் எதை செய்தாலும், அது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்தப் பொதுவான கொள்கை கோட்பாட்டிற்குப் பின், மீண்டும் பனீஇஸ்ராயீல் சமூகத்தவரின் ஆட்சேபனைகளைப் பற்றிய விஷயத்திற்கு வாருங்கள். முன்சென்ற நபிமார்கள் மூலமாக வந்த மார்க்கத்தையே இந்த இறைத்தூதரும் கொண்டு வருகிறார் (2:106) என்ற வாதம் உண்மையானதாக இருந்தால், தவ்ராத்தில் விலக்கப்பட்ட உணவு வகைகளை ஆகுமானவை என்று இவர் எவ்வாறு அறிவிக்கலாம் என்று ஆட்சேபிக்கிறார்கள்.

3:93

۞ كُلُّ ٱلطَّعَامِ كَانَ حِلّٗا لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسۡرَٰٓءِيلُ عَلَىٰ نَفۡسِهِۦ مِن قَبۡلِ أَن تُنَزَّلَ ٱلتَّوۡرَىٰةُۚ قُلۡ فَأۡتُواْ بِٱلتَّوۡرَىٰةِ فَٱتۡلُوهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٩٣

3:93.நீங்கள் அவர்களிடம், “உணவு விவகாரங்களில் நடந்த உண்மை என்னவென்றால், தவ்ராத் அருளப்படுவதற்கு முன் யாகூப் சந்ததியினர் சிலவற்றை, தமக்குத் தாமே விலக்கிக் கொண்டிருந்தனர். இவற்றை அல்லாஹ் விலக்கவில்லை. சில உணவுப் பொருட்களைப் பனீஇஸ்ரயீல் சமூகத்தவர்க்கு தனிப்பட்ட முறையில் தண்டனையாக விலக்கப்பட்டன. (6:146) (4:160) அவற்றையும் நிரந்தரமாக விலக்கமுடியாது. இது விஷயமாக தவ்ராத்திலும் குறிப்பு வந்துள்ளது. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அதை கொண்டுவந்து படித்துக் காட்டுங்கள். விஷயம் தெளிவாகிவிடும்” என்று சொல்லிவிடுங்கள்.

3:94

فَمَنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ٩٤

3:94. நினைவில் கொள்ளுங்கள். இந்த அளவிற்கு உண்மைகள் தெளிவான பின்பும், எவரேனும் பொய்யை அல்லாஹ் சொன்னதாக இட்டுக்கட்டிக் கூறினால், அவர்கள் அக்கிரமக்காரர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

3:95

قُلۡ صَدَقَ ٱللَّهُۗ فَٱتَّبِعُواْ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ٩٥

3:95. அல்லாஹ்விடமிருந்து அருளப்படுகின்ற செய்திகளே முற்றிலும் உண்மையாக இருக்கமுடியும் என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள். தேவையற்ற விவாதங்களை விட்டுவிட்டு, நேர்வழியில் சென்ற இப்ராஹீம் நபியின் மார்க்கத்தையே பின்பற்றிச் செயல்படும் படி அவர்களிடம் சொல்லிவிடுங்கள். இறைவனின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு எந்த வழிமுறையையும் சுயமாக அவர் ஒருபோதும் கொண்டு வந்ததில்லை என்பதை சொல்லிவிடுங்கள்.

மேலும் தலைமைச் செயலகமாக ஏற்கனவே பைத்துல் முஃகத்தஸ் இருக்கும் நிலையில், அதற்குப் பதிலாக கஅபா என்ற இடத்தை தலைமைச் செயலகமாக ஏற்படுத்தியதன் அவசியம் என்ன என்பதும் அவர்களுடைய ஆட்சேபனைகளில் ஒன்றாகும். (2:142)

3:96

إِنَّ أَوَّلَ بَيۡتٖ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكٗا وَهُدٗى لِّلۡعَٰلَمِينَ٩٦

3:96. நிச்சயமாக உலக மக்கள் அனைவரின் நல்வாழ்விற்காக உலகில் முதன் முதலாக நிறுவப்பட்ட செயலகம் தான் மக்கா நகரில் உள்ள கஅபா என்பதை அவர்களுக்கு கூறிவிடுங்கள். இந்த செயலகம் உலக மக்கள் அனைவரின் குறைகளை நீக்கி, நேர்வழி காட்டும் கலங்கரை விளக்காகத் திகழ்கிறது.

ஆனால் அவர்களோ பைத்துல் முஃகத்தஸை, தமக்காக தனிப்பட்ட செயலகமாக ஏற்படுத்திக் கொண்டார்கள். எனவே உலக மக்களின் நலனைக் கருதி மீண்டும் இந்த செயலகத்தை புதுப்பிக்கிறோம் என்று சொல்லி விடுங்கள். மேலும் கஅபா என்பது “முதல் வீடு” என்ற தலைமையகம் தான் ஆகும்.

3:97

فِيهِ ءَايَٰتُۢ بَيِّنَٰتٞ مَّقَامُ إِبۡرَٰهِيمَۖ وَمَن دَخَلَهُۥ كَانَ ءَامِنٗاۗ

3:97. இதே அடிப்படையில் உலக மக்கள் அனைவரின் பாதுகாப்பைக் கருதி இப்ராஹீம் நபி இந்த செயலகத்தை நிறுவினார். உலகின் எந்தப் பகுதியிலிருந்து இங்கே வந்தாலும் அவர்களுடைய பிரச்சனைகள் தீர்ந்து மனநிறைவோடு திரும்பிச் செல்ல வேண்டும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கொண்ட செயலகமாக இது திகழ வேண்டும் என்பதே இப்ராஹீம் நபியின் நிலைப் பாடாகும்.

وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلۡبَيۡتِ مَنِ ٱسۡتَطَاعَ إِلَيۡهِ سَبِيلٗاۚ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنِ ٱلۡعَٰلَمِينَ ٩٧

எனவே உயர்பதவி மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள், அக்கூட்டத்தில் பங்கெடுத்து, உலக மக்களின் நன்மைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் எவ்வளவு அழகான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல் படுத்தப்படுகின்றன என்பதை கண் கூடாகப் பார்த்து அறிந்துக் கொள்வார்கள். (22:28). இதற்கு மாற்றமாக செயல் பட்டால் அல்லாஹ்வுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

3:98

قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا تَعۡمَلُونَ٩٨

3:98. வேதமுடையவர்களே! அல்லாஹ்விடமிருந்து இந்த அளவிற்கு பயனுள்ள சட்டதிட்டங்கள் வந்திருந்தும், அவற்றை ஏற்று நடக்க மறுப்பதற்குக் காரணம் என்ன? “மனித செயலுக்கேற்ற பின் விளைவுகள்” என்ற அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டம் உங்களுடைய ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. எனவே உங்களு டைய செயல்களின் விளைவுகளிலிருந்து நீங்கள் தப்பிக்கவே முடியாது.

3:99

قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنۡ ءَامَنَ تَبۡغُونَهَا عِوَجٗا وَأَنتُمۡ شُهَدَآءُۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ٩٩

3:99. சரி. அல்லாஹ்வின் நலத் திட்டங்களில் இணைந்து செயல்பட உங்களுக்கு விருப்பமில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள். ஆனால் இதற்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மத்தியில் தடைகளை ஏற்படுத்துவது நியாயமாகுமா? அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆட்சியமைப்பு நலத் திட்டங்களே மிகச் சரியானவை என்று தெரிந்திருந்தும், அவற்றில் குழப்பங்களை ஏற்படுத்தலாமா? நீங்கள் செய்வதெல்லாம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இல்லையே!

3:100

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تُطِيعُواْ فَرِيقٗا مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ يَرُدُّوكُم بَعۡدَ إِيمَٰنِكُمۡ كَٰفِرِينَ ١٠٠

3:100. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் வேதமுடையவர்கள் சிலரின் தவறான பேச்சைக் கேட்டு வழிதவறிச் சென்றுவிடாத படி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் உங்களையும் வழிகெடுத்து விடுவார்கள்.

3:101

وَكَيۡفَ تَكۡفُرُونَ وَأَنتُمۡ تُتۡلَىٰ عَلَيۡكُمۡ ءَايَٰتُ ٱللَّهِ وَفِيكُمۡ رَسُولُهُۥۗ وَمَن يَعۡتَصِم بِٱللَّهِ فَقَدۡ هُدِيَ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ١٠١

3:101. அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! அல்லாஹ்வின் அறிவுரைகளும் அதை நடைமுறைபடுத்தும் ஆட்சியமைப்பு சட்டங்களும் உங்களிடையே இருக்கும் நிலையில், நீங்கள் அவற்றிற்கு மாற்றமாகச் செயல்படுவது நியாயமா? நினைவில் கொள்ளுங்கள். ஒரு சமுதாயம் எதுவரையில் இறை வேதத்தையும் (Celestial Guidelines) அதனடிப்படையில் ஏற்படுத்தப்படும் ஆட்சியமைப்பு சட்டங்களையும் (By-Laws govoerning the state based on Allah’s Guildelines) திடமாகப் பின்பற்றி வருமோ, அதுவரையில் அது நிச்சயமாக நேர்வழியில் இருக்கும். இவ்விரண்டில் எதை விட்டுவிட்டாலும் அது வழிதவறிச் சென்றுவிடும்.

3:102

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ١٠٢

3:102. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாகச் செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி, இறைவழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டிய முறையில் பின்பற்றுங்கள். மேலும் இறைவழிகாட்டுதலை உங்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்றிச் செயல்படுங்கள். நீங்கள் மரணித்தாலும், இறைக் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களாகவே மரணியுங்கள்.

3:103

وَٱعۡتَصِمُواْ بِحَبۡلِ ٱللَّهِ جَمِيعٗا وَلَا تَفَرَّقُواْۚ

3:103. எனவே நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சியமைப்பு/சமூக அமைப்பு கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த துணை புரியுங்கள். இதில் கருத்து வேறுபாட்டிற்கோ பிரிவினைக்கோ ஒருபோதும் இடம் அளிக்காதீர்கள்.

وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ كُنتُمۡ أَعۡدَآءٗ فَأَلَّفَ بَيۡنَ قُلُوبِكُمۡ فَأَصۡبَحۡتُم بِنِعۡمَتِهِۦٓ إِخۡوَٰنٗا

இதற்கு முன் நீங்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து, ஒருவருக் கொருவர் குரோத மனப்பான்மையுடன் பகைவர்களாகவே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்த வழிகாட்டுதலைக் கொண்டு உங்களிடையே இருந்து வந்த விரோதமும் குரோதமும் நீங்கி, சகோதரத்துவமும் பாசப் பிணைப்பும் ஏற்பட்டது. (8:63) இது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்.

وَكُنتُمۡ عَلَىٰ شَفَا حُفۡرَةٖ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنۡهَاۗ

இதற்குமுன் நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். உங்களை அதிலிருந்து அல்லாஹ் வின் வழிகாட்டுதல்தானே காப்பாற்றியது!

كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ١٠٣

இவ்வாறாக நீங்கள் தெளிவு பெறும் பொருட்டு அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், அதன் நற்பலன்களையும் தெளிவாக்குகிறோம்.

3:104

وَلۡتَكُن مِّنكُمۡ أُمَّةٞ يَدۡعُونَ إِلَى ٱلۡخَيۡرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ١٠٤

3:104. இப்படியாக திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்படி செயல்படுவதோடு, உலக மக்கள் அனைவரையும் அதன் பக்கம் அழைப்புவிடும் கூட்டத்தாராக இருந்து வருவது மிகமிக அவசியம். திருக்குர்ஆன் எதை செய்ய அறிவுறுத்துகிறதோ அதன்படி செயலாற்ற வைப்பதும், எவற்றை தடை விதிக்கிறதோ அவற்றிலிருந்து மக்களை தடுப்பதும் இவர்களுடைய தலையாய பணிகளாக இருக்க வேண்டும். இவ்வாறாக ஏற்பாடுகளை வழிவகுத்து நடைமுறைப்படுத்திச் செல்லும் சமுதாயங்களே வாழ்வின் உயர் இலக்கை அடைவதில் வெற்றி பெறும். (23:1)

நன்மையின் பக்கம் அழைப்பு விடுபவர்களை, திருக்குர்ஆனின் ஆசிரியர்கள் அல்லது பேராசிரியர்கள் என்போம். இவர்களே சமுதாயத்தை நிலையாகக் கட்டிக்காத்து வழிநடத்திச் செல்லும் “மெஹ்திக்கள்” ஆவர். மக்களை திருத்தும் பணியை மேற்கொள்வது அவர்களுடைய பொறுப்பாகும். (பார்க்க 7:164) அவற்றைப் புரிந்து அதன்படி செயல் புரிவது மக்களின் கடமையாகும். மேலும் நீதித்துறையும் காவல்துறையும் சமுதாயத்தில் நடைபெறும் தீiமையை தடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளும்.

3:105

وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ تَفَرَّقُواْ وَٱخۡتَلَفُواْ مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡبَيِّنَٰتُۚ وَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ عَظِيمٞ١٠٥

3:105. நினைவில் கொள்ளுங்கள். தெளிவான ஆதாரப்பூர்வமான இறைவழி காட்டுதல் வந்த பின்னரும், தங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்திக் கொண்டு மாறுபட்டுப் போனவர்களைப் போன்று நீங்களும் பிரிந்து விடாதீர்கள். இது பெருங் குற்றமாகும். எனவே இவ்வாறு பரிவினை ஏற்படுத்துபவர்கள் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள். அதாவது சமுதாயங்களின் இழிவும் அழிவும் இத்தகைய பிரிவினையைக் கொண்டே ஏற்படுகின்றன.

இதை கவனத்தில் கொண்டு மக்களுக்குப் போதிக்கப்படும் அறிவுரைகளிலும் பிள்ளைகளுக்கு கற்றுத் தரப்படும் பாடப் புத்தகங்களிலும் மாறுபட்ட கருத்துக்கள் எதுவும் இல்லாதவாறு ஆட்சியமைப்பு கவனித்துக் கொள்ள வேண்டும். ஓர் இறைவன், ஓரு தூதர், ஓர் ஆட்சியமைப்பு, ஒன்றே குலம் என்ற அடிப்படையில் சமுதாயம் செயல்படுமானால் அது சுவனத்திற்கு ஒப்பான சமுதாயமாகத் திகழும் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்குமா?

3:106

يَوۡمَ تَبۡيَضُّ وُجُوهٞ وَتَسۡوَدُّ وُجُوهٞۚ فَأَمَّا ٱلَّذِينَ ٱسۡوَدَّتۡ وُجُوهُهُمۡ أَكَفَرۡتُم بَعۡدَ إِيمَٰنِكُمۡ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ١٠٦

3:106. மேற்சொன்ன இருவகையினரில், இறைவழிகாட்டுதலின் படி அழகிய சமூக அமைப்பை ஏற்படுத்தி ஒன்றுபட்டு வாழ்பவர்கள். இவர்களின் வாழ்வில் முன்னேற்றமும் சந்தோஷங்களும் ஏற்பட்டு முகமலர்ச்சியுடன் காணப்படுவார் கள். மற்றொரு வகையினர் தங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்திக் கொண்டு தம் மனோ இச்சைப்படி வாழ்பவர்கள். எந்தச் சமுதாயம் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி பெற்றபின் அதன் படி செயல்படாமல் தவறான வழிக்கே திரும்பி விடுமோ, அவர்களின் முகங்கள் அச்சத்தாலும் கவலையாலும் கருத்துப் போய் விடும்*. நேர்வழி பெற்றபின் அல்லாஹ்வின் அறிவுரைக்கு எதிராகச் செயல்பட்டு பிரிவினை ஏற்படுத்திக் கொள்பவர்களுக்கு இதுவே தண்டனையாகும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் அவர்கள் மேலோட் டமாக கண்ணியவான்களைப் போல் தோற்றமளித்தாலும் மன வேதனைகள் அவர்களை வாட்டி வதைக்கும்.

3:107

وَأَمَّا ٱلَّذِينَ ٱبۡيَضَّتۡ وُجُوهُهُمۡ فَفِي رَحۡمَةِ ٱللَّهِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ١٠٧

3:107. இறைவழிகாட்டுதலின்படி தொடர்ந்து செயல்பட்டு ஒளிமயமான வாழ்வை அமைத்துக் கொள்ளும் சமுதாயம், அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றுக் கொண்டே இருக்கும். அவர்களுக்கு நிலையான சந்தோஷங்களும் கிடைத்து வரும்.

3:108

تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۗ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلۡمٗا لِّلۡعَٰلَمِينَ ١٠٨

3:108. இதுவே சமுதாயங்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியின் உண்மையான காரண காரணிகளாகும். நீங்கள் தெளிவு பெறும் பொருட்டு இவை உங்களுக்கு அறிவிக்கப்படுகின்றன. ஆக அல்லாஹ்வின் புறத்திலிருந்து உலகில் எப்போதும் எவ்வித அநீதியும் யாருக்கும் ஏற்படாது.

3:109

وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ١٠٩

3:109. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றவே செயல்படுகின்றன. அதானல் உங்களுடைய ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள சட்ட விதிமுறைகளின் படியே “அதனதன் பிரதிப்பலன்கள்” என்ற இலக்கை நோக்கியே செல்லும்.

பிரபஞ்சம் அனைத்திலும் இறைக் கட்டளைகளே நடைமுறையில் உள்ளன. இதில் மற்ற படைப்புகள் இயல்பாகவே அல்லாஹ்வின் கட்டளைப் படி செயல்பட்டு வருகின்றன. ஆனால் மனித உலகில் இறைக் கட்டளைகளை சிந்தித்து நடைமுறைப்படுத்த ஜமாஅத் என்னும் கூட்டு அமைப்பு அவசியமாகிறது.

3:110

كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ أُخۡرِجَتۡ لِلنَّاسِ تَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَتَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَتُؤۡمِنُونَ بِٱللَّهِۗ

3:110. இதற்காகவே மூஃமின்களாகிய உங்களை தோற்றுவித்து, உங்களிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. இதைக் கொண்டு உலக மக்கள் அனைவரின் நலனைக் கருதி, சிறப்பாக செயல்பட வேண்டும். எனவே இந்தக் குர்ஆன் எவற்றை நன்மையானவை என்று கோடிட்டு காட்டுகிறதோ, அதன் படி செயல்படுவதும், எவற்றை தவறானவை என்று குறிப்பிடுகின்றதோ அவற்றை தடுத்துக் கொள்வதும் உங்களின் முக்கிய கடமையாகும். அப்போது தான் உலக மக்கள் அனைவரையும், நன்மையின் பக்கம் அழைப்பதற்கும், தீமையை விட்டுத் தடுப்பதற்கும் தகுதி உடையவர்களாக ஆவீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்கு உண்மையான அர்த்தமும் ஆகும்.

وَلَوۡ ءَامَنَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ لَكَانَ خَيۡرٗا لَّهُمۚ مِّنۡهُمُ ٱلۡمُؤۡمِنُونَ وَأَكۡثَرُهُمُ ٱلۡفَٰسِقُونَ١١٠

உங்களுடன் வாழும் வேதமுடையவர்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல் பட்டால், அவர்களுக்கும் நன்மைகள் கிடைக்கும். ஆனால் அவர்களில் சிலரைத் தவிர, பெரும்பாலோர் இதை ஏற்க மறுப்பதோடு, மாற்று வழிமுறைகளையே பின்பற்றி வருகின்றனர்.

3:111

لَن يَضُرُّوكُمۡ إِلَّآ أَذٗىۖ وَإِن يُقَٰتِلُوكُمۡ يُوَلُّوكُمُ ٱلۡأَدۡبَارَ ثُمَّ لَا يُنصَرُونَ١١١

3:111. இத்தகையோருடைய எதிர்ப்புகளால் உங்களுக்கு சிறிதளவு தொல்லைகள் தான் ஏற்படுமே அன்றி, பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. ஒருவேளை அவர்கள் போரிடவே வந்தாலும், புறமுதுகு காட்டி ஓடிவிடுவார்கள். மேலும் இத்தகையவர்களுக்கு மக்களின் ஆதரவும் கிடைக்காது.

3:112

ضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلذِّلَّةُ أَيۡنَ مَا ثُقِفُوٓاْ إِلَّا بِحَبۡلٖ مِّنَ ٱللَّهِ وَحَبۡلٖ مِّنَ ٱلنَّاسِ وَبَآءُو بِغَضَبٖ مِّنَ ٱللَّهِ وَضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلۡمَسۡكَنَةُۚ

3:112. இவர்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்பதையும் நீங்களே பார்ப்பீர்கள். உலகில் நிம்மதியாக வாழ அவர்களுக்கு எங்கும் இடம் கிடைக்காது. ஏதோ வேதமுடையவர்கள் என்ற அடிப்படையிலோ அல்லது மற்ற சமூகத்தவர்களிடம் சமரச ஒப்பந்தத்தின் பேரிலோ (Refugees) இவர்களுக்கு புகலிடம் கிடைக்கலாம். மற்றபடி அல்லாஹ் நிர்ணயித்துள்ள நியதிப்படி வேதனைகள் அவர்களைப் பின்தொடர்ந்த வண்ணம் இருக்கும். அத்துடன் அவர்களுக்கு ஏழ்மையும் அவலமும் ஏற்பட்டு, தவித்துக் கொண்டு இருப்பார்கள்.

ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانُواْ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ١١٢

இதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்ததோடு, அதற்கு எதிராகவும் செயல்பட்டு வந்தது தான். இவர்களுடைய தகாத செயல்கள் எந்த அளவிற்கு மோசமாக இருந்தன என்றால் இறைத் தூதர்களையே கொலை செய்யும் அளவுக்கு வெறியுடன் இருந்தார்கள்.

3:113

۞ لَيۡسُواْ سَوَآءٗۗ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ أُمَّةٞ قَآئِمَةٞ يَتۡلُونَ ءَايَٰتِ ٱللَّهِ ءَانَآءَ ٱلَّيۡلِ وَهُمۡ يَسۡجُدُونَ١١٣

3:113. ஆனால் வேதமுடையவர்கள் அனைவருமே இப்படித் தான் இருக்கிறார்கள் என்பதல்ல. இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் அவர்களுள் சிலரிடம் இருக்கத் தான் செய்கிறது. அவர்கள் அல்லும் பகலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நினைவு கூர்ந்து, அதற்கு முற்றிலும் சிரம் பணிந்து முழுஅளவில் செயல்படவும் செய்கிறார்கள்.

3:114

يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَيُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِۖ وَأُوْلَٰٓئِكَ مِنَ ٱلصَّٰلِحِينَ١١٤

3:114. இதுவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்றுக் கொண்டதற்கு உண்மையான அர்த்தமாகும். இந்த குர்ஆன் எவற்றை நன்மையான செயல்கள் என்று கோடிட்டு காட்டுகிறதோ, அவற்றின் பக்கம் மக்களை அழைப்பதும், எவற்றை தீமையானவை என்று அறிவிக்கின்றதோ, அவற்றை விட்டு தடுப்பதும், மக்கள் அனைவரின் நன்மையைக் கருதி செயல்படுவதில் முன்னிலை வகிப்பதும் மூஃமின்களின் முக்கிய பணிகளாகும். இத்தகைய ஆற்றல்மிக்க நற்செயல்கள் புரிபவர்களே “ஸாலிஹீன்கள்” எனப்படுவர்.

3:115

وَمَا يَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَلَن يُكۡفَرُوهُۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلۡمُتَّقِينَ ١١٥

3:115. இவ்வாறாக நன்மையான செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் நற்செயல்கள் புறக்கணிக்கப்பட மாட்டாது. இறைவழிகாட்டுதலின் வரம்புக்குள் இருந்துக் கொண்டு யாரெல்லாம் நற்செயல்கள் புரிகிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் இறைவனிடத்தில் நற்பலன்கள் நிச்சயம் உண்டு. ஆக யார் உள்ளச்சப்பாடுடன் செயல்படுகிறார்கள் என்பது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.

இதற்கு மாறாக அல்லாஹ்வின் அறிவுரைகளை ஏற்க மறுத்து, மாற்று வழிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள் காலப்போக்கில் சுயநலவாதிகளாக ஆகிவிடுவார்கள். அவர்களுடைய சுயநலம், தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்று அவர்களுக்காக சொத்து செல்வத்தைக் குவித்துக் கொள்ளுதல் என்ற அளவில் தான் இருக்கும்.

3:116

إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـٔٗاۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ١١٦

3:116. எனவே இறைவனுடைய வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுபவர்கள், தம் அழிவினை தாமே தேடிக் கொள்கிறார்கள். அந்த அழிவுகள் ஏற்படும் போது, அவர்களுடைய செல்வங்களோ பிள்ளைகளோ அதிலிருந்து காப்பாற்ற முடியாது. இப்படியாக இவர்களுடைய தற்காலிக வாழ்வும், வருங்கால நிலையான வாழ்வும் துயர் மிக்கதாய் ஆகிவிடுகிறது. அதிலிருந்து மீள்வதற்கு எந்த வழிமுறையும் இருக்காது.

3:117

مَثَلُ مَا يُنفِقُونَ فِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا كَمَثَلِ رِيحٖ فِيهَا صِرٌّ أَصَابَتۡ حَرۡثَ قَوۡمٖ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ فَأَهۡلَكَتۡهُۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِنۡ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ١١٧

3:117. இத்தகையவர்களுக்கு ஓர் உதாரணம் கூறலாம். மனதிற்கு இதமாக இருக்கும் குளிர் காற்று, அதுவே பனிப் புயலாக மாறி விளைச்சலை தாக்கும் போது, பெரும் வேதனை ஏற்படுகிறது. ஏனெனில் அந்தப் புயலிலிருந்து காப்பாற்றிக் கொள்ள எந்த முன்னேற்பாட்டையும் செய்து வைக்கவில்லை. இப்படியாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்களே அன்றி அல்லாஹ் யாரையும் தீங்கிழைப்பதில்லை.

அதாவது எந்த ஒரு முன்யோசனையும் செய்யாமல், சொகுசு வாழ்விற்காக செல்வத்தை குவித்து, செலவழிப்பதால் தற்காலிக சந்தோஷங்கள் மட்டும் கிடைத்து வரும். அதனால் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, கலகம் கலவரம் என புயலாக மாறி அழிவு ஏற்படும் போது, அதிலிருந்து மீள எந்த வழிமுறையும் இருக்காது. இப்படியாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்களே அன்றி அல்லாஹ் ஒருபோதும் தீங்கிழைப்பதில்லை.

இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. உலக மக்களுள் மொழி, நாடு, இனம், நிறம் என்ற அடிப்படையில் பிரிவினை ஏற்படுவதில்லை. ஆனால் கொள்கை கோட்பாடுகள் என்ற அடிப்படையில் தான் பிரிவினையும் பகைமையும் ஏற்படுகின்றன. இறைவழிகாட்டுதலை ஏற்று செயல்படுபவர்கள் ஒரு பக்கம். அவற்றை ஏற்க மறுத்து எதிராகச் செயல்படுபவர்கள் மறுபக்கம். இவை இரண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட முடியாது.

3:118

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ بِطَانَةٗ مِّن دُونِكُمۡ لَا يَأۡلُونَكُمۡ خَبَالٗا وَدُّواْ مَا عَنِتُّمۡ قَدۡ بَدَتِ ٱلۡبَغۡضَآءُ مِنۡ أَفۡوَٰهِهِمۡ وَمَا تُخۡفِي صُدُورُهُمۡ أَكۡبَرُۚ قَدۡ بَيَّنَّا لَكُمُ ٱلۡأٓيَٰتِۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ ١١٨

3:118. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! உங்களிடையே உள்ள பகைவர்களை ஆட்சியமைப்பு துறைகளில் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்கள் அனைவருக்கும் தீங்கிழைப்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். ஏதாவது ஒருவகையில் நீங்கள் துயரத்தில் சிக்கி தவிக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். உங்கள் மேலுள்ள கடுமையான வெறுப்பு அவர்களுடைய பேச்சிலிருந்தே வெளிப்படுகிறது. அவர்களுடைய உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதோ இதைவிட பன்மடங்கு அதிகமாகும். நீங்கள் அனைவரும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்பதற்காக, இது போன்ற உண்மை விஷயங்களை இவ்வேதம் அறிவிக்கின்றது.

3:119

هَٰٓأَنتُمۡ أُوْلَآءِ تُحِبُّونَهُمۡ وَلَا يُحِبُّونَكُمۡ وَتُؤۡمِنُونَ بِٱلۡكِتَٰبِ كُلِّهِۦ

3:119. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் எதிர் தரப்பினர் அனைவரையும் தம் உற்ற நண்பர்கள் என எண்ணிக்கொள்ளாதீர்கள். நீங்கள் அவர்களை தோழர்களாய் கருதினாலும், அவர்களுள் பலர் உங்களை நண்பர்களாக கருதுவதில்லை. நீங்கள் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட வழிகாட்டுதலை முழுமையாக மனதார ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது, இறைவேதத்தை ஏற்றுக்கொள்வதாக உதட்டளவில் கூறுகிறார்கள்.

وَإِذَا لَقُوكُمۡ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ عَضُّواْ عَلَيۡكُمُ ٱلۡأَنَامِلَ مِنَ ٱلۡغَيۡظِۚ قُلۡ مُوتُواْ بِغَيۡظِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ١١٩

எனினும் அவர்கள் தனித்திருக்கும் போது, உங்கள் மேலுள்ள ஆத்திரத்தால் தம் விரல் நகங்களைக் கடித்துக் கொள்கிறார்கள். அந்த அளவிற்கு உங்கள் மேல் அவர்களுக்கு வெறுப்பு உள்ளது. அவர்களிடம், “ஆத்திரக் கடுப்பிலேயே நீங்கள் அனைவரும் அழிந்து போக வேண்டியதுதான்” என்று சொல்லி விடுங்கள். அவரவர் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதும் வெளிப்படுத்துவதும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.

3:120

إِن تَمۡسَسۡكُمۡ حَسَنَةٞ تَسُؤۡهُمۡ وَإِن تُصِبۡكُمۡ سَيِّئَةٞ يَفۡرَحُواْ بِهَاۖ وَإِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ لَا يَضُرُّكُمۡ كَيۡدُهُمۡ شَيۡـًٔاۗ

3:120. அவர்களுடைய மனோநிலை எவ்வாறு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்படுமானால், அவர்களுக்கு மன வருத்தம் ஏற்படுகிறது. உங்களுக்கு ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் இதைப் பொருட்படுத்தாதீர்கள். நீங்கள் அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். உங்கள் நலத் திட்டங்களில் நிலைத்திருந்து, தொடர்ந்து செயலாற்றுங்கள். இறை வழிகாட்டுதல்களை சிறப்பாகப் பேணி செயலாற்றுங்கள். அவர்களுடைய சதித் திட்டங்களும் சூழ்ச்சிகளும் வெகு நாட்களுக்கு நீடிக்காது. அவர்களால் உங்களுக்கு அதிக அளவில் தீங்கிழைக்கவும் முடியாது.

إِنَّ ٱللَّهَ بِمَا يَعۡمَلُونَ مُحِيطٞ١٢٠

அல்லாஹ் நிர்ணயித்துள்ள, “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற சட்டம் அனைவரையும் சூழ்ந்து வரும். அதன் படியே எல்லாமே நிகழ்ந்து வரும். எனவே அவர்களுடைய தீய செயல்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்க முடியாது.

ஒரு செயல்திட்டத்தில் நிலைத்திருந்து முயல்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? நிலைகுலைந்து போவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதற்கு “உஹது” போர்க் களத்தில் நடந்த நிகழ்ச்சியே ஒரு சான்று.

3:121

وَإِذۡ غَدَوۡتَ مِنۡ أَهۡلِكَ تُبَوِّئُ ٱلۡمُؤۡمِنِينَ مَقَٰعِدَ لِلۡقِتَالِۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ١٢١

3:121. இறைத்தூதரே! நீ விடியற் காலையில் உன் வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்று, போர் முனையில் படை வீரர்களாகிய மூஃமின்கள் செய்ய வேண்டிய கடமைகளை எடுத்துரைத்து, அவரவர் இருக்க வேண்டிய இடத்தையும் குறித்துக் கொடுத்தீர். ஆனால் அவர்களில் சிலருடைய சிந்தனை வேறு விதமாக இருந்தது. இந்த விஷயம் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.

3:122

إِذۡ هَمَّت طَّآئِفَتَانِ مِنكُمۡ أَن تَفۡشَلَا وَٱللَّهُ وَلِيُّهُمَاۗ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ١٢٢

3:122. அந்த போர்க் களத்தில் மோதல்கள் கடுமையாக இருந்த போது, உங்கள் படையினரின் ஒரு பிரிவினர் தைரியத்தை இழந்து பயத்தில் ஓடிவிட எண்ணினர். இத்தனைக்கும் அல்லாஹ்வின் நியதிப் படி இறைத்தூதர் செய்திருந்த போர் ஏற்பாடுகள் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தன. அல்லாஹ்வின் இந்த ஏற்பாடுகள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு, வீரர்கள் அனைவரும் செயல்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் மனதில் இருந்த பயத்தினால், போர் முனையில் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் தடுமாறிப் போய் விட்டன. அதனால் ஏற்பட்ட விளைவு என்னவென்பதை நீங்களே கண்கூடாகப் பார்த்துக் கொண்டீர்கள். (பார்க்க 3:152&153)

3:123

وَلَقَدۡ نَصَرَكُمُ ٱللَّهُ بِبَدۡرٖ وَأَنتُمۡ أَذِلَّةٞۖ فَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ١٢٣

3:123. இதற்கு முன் நடந்த போரில், எதிர் அணியினரை விட ஆயுத பலம் குறைவாக இருந்தும், அல்லாஹ்வின் உதவி எவ்வாறு வந்தது என்பதை பார்த்துக் கொண்டீர்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை முழுமையாகப் பேணி, படைத் தளபதியின் கட்டளைக்கு உட்பட்டு செயல்பட்டதால் தான், அந்தப் போரில் வெற்றியை காண முடிந்தது. இப்போதும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி செயலாற்றுங்கள். இதனால் நீங்கள் நன்றி விசுவாசத்துடன் செயல்படுபவர்களாக ஆகி விடலாம்.

3:124

إِذۡ تَقُولُ لِلۡمُؤۡمِنِينَ أَلَن يَكۡفِيَكُمۡ أَن يُمِدَّكُمۡ رَبُّكُم بِثَلَٰثَةِ ءَالَٰفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُنزَلِينَ١٢٤

3:124. இறைத்தூதரே! “உஹது” போரின் சமயம் போர் வீரர்களாகிய மூஃமின்களிடம், “உங்கள் இறைவன் மூவாயிரம் பகைவர்களை எதிர்க்கும் வகையில் மனவலிமை பலத்தைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா? (எதிரணியினர்களின் படையினர் மூவாயிரம் பேர் இருந்தனர்)” என்று தைரியமூட்டி ஊக்கமூட்டினீர். இந்த ஊக்கச் செய்தி அவர்கள் மனதில் மன வலிமையையும் தைரியத்தையும் கொடுத்தது. அதனால் பயமின்றி துணிச்சலுடன் போரிட்டு வெற்றி பெற்றார்கள்.

3:125

بَلَىٰٓۚ إِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ وَيَأۡتُوكُم مِّن فَوۡرِهِمۡ هَٰذَا يُمۡدِدۡكُمۡ رَبُّكُم بِخَمۡسَةِ ءَالَٰفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُسَوِّمِينَ ١٢٥

3:125. ஆம். எதிரணியினர் முழு பலத்துடன் தாக்கினாலும், நீங்கள் தைரியத்தை இழக்காமல் நிலைத்திருந்து தக்க பதிலடி கொடுங்கள். பகைவர்களின் படையினர் ஐயாயிரமாக இருந்தாலும் தைரியத்தை இழந்து விடாதீர்கள். நீங்கள் எப்போதும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றி உங்கள் செயல் திட்டத்தில் உறுதிப்பாடுடனும் தொடர் முயற்சியுடனும் செயல்பட்டால் ஐயாயிரம் மலக்குகளுக்கு ஈடான பலம் பெற்று பகைவர்கள் மீது வெற்றி காண முடியும்.

3:126

وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشۡرَىٰ لَكُمۡ وَلِتَطۡمَئِنَّ قُلُوبُكُم بِهِۦۗ

3:126. “மலக்குகளின்” உதவி பக்கபலமாக இருக்கும் என்ற படைத் தளபதி நபியின் பேச்சு, போர் வீரர்களின் உள்ளத்தில் தைரியத்தையும் வேகத்தையும் பொங்கி எழச் செய்வதே ஆகும். ஏனெனில் தாம் வெற்றி பெறுவோம் என்ற மன உறுதியுடன் முழு வேகத்தில் போரிட இந்த ஊக்கமும் செயல் வேகமுமே துணைபுரியும்.

وَمَا ٱلنَّصۡرُ إِلَّا مِنۡ عِندِ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ١٢٦

உண்மையிலேயே உதவி கிடைப்பது என்பது அல்லாஹ்வின் நியதிப்படி இறைத்தூதர் உருவாக்கியுள்ள போர் ஏற்பாடுகள் மூலமாகத்தான். (பார்க்க – 8:60, 9:41&21:80). பிரபஞ்சம் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆளும் வல்லமையுடைய அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிலை நிறுத்தப்பட்ட சட்டமும் இதுவே ஆகும்.

3:127

لِيَقۡطَعَ طَرَفٗا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَوۡ يَكۡبِتَهُمۡ فَيَنقَلِبُواْ خَآئِبِينَ ١٢٧

3:127. அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு எதிராகப் போரில் பங்கெடுத்தவர் களின் படைத் தலைவர்களை அழித்து, எஞ்சியவர்களை சிறைபிடித்து சிறுமைப்படுத்தி தோல்வியுறச் செய்வதே இப்போரின் நோக்கமாகும்.

மேலும் சிறை பிடிக்கப்பட்டவர்கள் விஷயத்தில் தண்டனை அளிப்பதா அல்லது விடுதலை செய்வதா என்ற கேள்வி எழுகிறது.

3:128

لَيۡسَ لَكَ مِنَ ٱلۡأَمۡرِ شَيۡءٌ أَوۡ يَتُوبَ عَلَيۡهِمۡ أَوۡ يُعَذِّبَهُمۡ فَإِنَّهُمۡ ظَٰلِمُونَ١٢٨

3:128. இவ்விஷயத்தில் நபியே! நீயோ அல்லது உன்னைச் சார்ந்தவரோ தனிப்பட்ட முறையில் தீர்மானிக்க முடியாது. இது ஆட்சியமைப்பு முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும். எனவே போர்க் கைதிகளைத் தண்டிப்பதும் விட்டுவிடுவதும் இறையாட்சியின் கீழ் செயல்படும் நீதிமன்றம் (Marshal) மூலம் அல்லாஹ் விதித்த சட்டப்படி தீர்மானிக்கப்படும்.

3:129

وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ يَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ١٢٩

3:129. வானங்களிலும் பூமியிலுமுள்ள எல்லாப் படைப்புகளும் அல்லாஹ்வின் செயல் திட்டத்தை நிறைவேற்றவே சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதே போல் மனித உலகிலும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் சட்ட விதிமுறைகளே செயல்படுகின்றன. எனவே மனித சமுதாயம் ஆபத்துகளை நீக்கி பாதுகாப்பான வாழ்வைப் பெறுவதும், சீரழிந்து அழிவுகளைச் சந்திப்பதும் அந்த சட்ட விதிமுறைகளின் படியே நிகழ்ந்து வரும். நிச்சயமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பான வாழ்வு கிடைக்க வேண்டும் என்ற அiடிப்படையைக் கொண்டு தான் இந்த வழிகாட்டுதல்கள் அருளப்படுகின்றன. இது அல்லாஹ்வின் அளவற்ற கருணையை காட்டுகின்றன.

எனவே போர் முனையில் வெற்றி பெற்றுவிட்டதால், தங்கள் பணிகள் முடிந்து விட்டன என்று எண்ணி விடாதீர்கள். இறை வழிகாட்டுதலின் படி அமையவிருக்கும் ஆட்சியமைப்புக்கு தடையாகச் செயல்படும் சக்தியை முறியடிப்பதற்காக எடுத்த நடவடிக்கை தான் இந்தப் போர். உங்களுடைய சமூக அமைப்பு மிகச் சரியான செயல் திட்டத்தின் கீழ் அமைய வேண்டும் என்பதே இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய நோக்கமாகும். (2:217-219) பல விஷயங்கள் இதற்குத் தடையாக நிற்கின்றன.

அவற்றில் ஒன்று வட்டி. ஏற்கனவே 2:275-279 இல் விளக்கியபடி வட்டி என்பது எவ்வித உழைப்பும் இன்றி, வெறும் பண முதலீட்டைக் கொண்டு லாபத்தை ஈட்டிக் கொள்ளும் முறையாகும். அதாவது இதைக் கொண்டு செல்வத்தை இரட்டிப்பாக்கிக் கொள்ளுதல். தனி நபரைப் பொறுத்த வரையில் இது லாபகரமாக இருக்கலாம். ஆனால் நாட்டின் பொருளாதார (National Wealth) வளர்ச்சி என்று பார்க்கும் போது, வட்டி சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். (30:39).

3:130

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَأۡكُلُواْ ٱلرِّبَوٰٓاْ أَضۡعَٰفٗا مُّضَٰعَفَةٗۖ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ١٣٠

3:130. எனவே மூஃமின்களே! வட்டியைக் கொண்டு உங்கள் செல்வங்களை இரட்டிப்பாக்கிக் கொள்ள முடியும் என எண்ணி, அதை தம் வாழ்வாதாரமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். இதை விட்டுவிட்டு அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி செயலாற்றுங்கள். இதனால் உங்கள் இலட்சியத்தில் வெற்றி இலக்கை எளிதில் அடைவீர்கள்.

3:131

وَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِيٓ أُعِدَّتۡ لِلۡكَٰفِرِينَ١٣١

3:131. நீங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், உழைத்து சம்பாதிப்பதை விட்டுவிட்டு பண முதலீட்டைக் கொண்டு பிறர் உழைப்பில் சுகம் காணும் பழக்கத்திற்கு ஆளாகி விடுவீர்கள். இதனால் நாளடைவில் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, பிரச்சனைகள் மிகைத்து வேதனைகள் கொண்ட நரகமாக மாறிவிடும்.

3:132

وَأَطِيعُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ١٣٢

3:132. எனவே நீங்கள் மனோ இச்சையின் படி வாழ்வதை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயலாற்றுங்கள். மேலும் உங்களை வழிநடத்திச் செல்ல இறைத்தூதர் ஏற்படுத்தியுள்ள ஆட்சியமைப்புச் சட்டங்களையும் பின்பற்றுங்கள். இதனால் மனித ஆற்றல்கள் வேகமாக வளர சரியான வழிமுறை கிடைத்து விடும்.

3:133

۞ وَسَارِعُوٓاْ إِلَىٰ مَغۡفِرَةٖ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ أُعِدَّتۡ لِلۡمُتَّقِينَ١٣٣

3:133. வானங்கள் முதல் பூமி வரையிலும் பரந்து விரிந்து கிடக்கும் உங்கள் இறைவனின் பரிபாலன அமைப்பின் கீழ், பாதுகாப்பான வாழ்வு பெற முழு மனதுடன் விரைந்து செயலாற்றுங்கள். இப்படியாக உங்கள் உழைப்பின் பலனாக உருவாகும் சுவனத்திற்கு ஒப்பான வாழ்வில் நுழையுங்கள். இறைச் சட்டங்களை பேணி நடப்பவர்களுக்கு இப்படிப்பட்ட சுவனம் ஆயத்த நிலையில் உள்ளது.

3:134

ٱلَّذِينَ يُنفِقُونَ فِي ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلۡكَٰظِمِينَ ٱلۡغَيۡظَ وَٱلۡعَافِينَ عَنِ ٱلنَّاسِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ١٣٤

3:134. இச்சுவனவாசிகள் பிறர் உழைப்பில் சுகம் அனுபவிப்பதை தவிர்த்து, தாராள நிலையிலும் வறுமை நிலையிலும், பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்து, சமுதாய மேம்பாட் டிற்காக அல்லும் பகலும் பாடுபடுவார்கள். இதற்காக, தாம் உழைத்து சம்பாதித்த செல்வங்களை செலவு செய்வார்கள். இவ்வாறு சமுதாய பணியில் ஈடுபடும் போது, மற்றவர்கள் பரிகசித்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சமுதாய சமச்சீர்நிலை, மனித நேயம் மற்றும் மனித ஒழுக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயலாற்றுவார் கள். இப்படிப்பட்ட நன்மையான செயல்களைக் கொண்டே அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியும்.

3:135

وَٱلَّذِينَ إِذَا فَعَلُواْ فَٰحِشَةً أَوۡ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ ذَكَرُواْ ٱللَّهَ فَٱسۡتَغۡفَرُواْ لِذُنُوبِهِمۡ وَمَن يَغۡفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمۡ يُصِرُّواْ عَلَىٰ مَا فَعَلُواْ وَهُمۡ يَعۡلَمُونَ١٣٥

3:135. இவ்வாறாக சமூகப் பணியில் ஈடுபடும் போது, சில சமயங்களில் தெரிந்தோ தெரியாமலோ முறையற்ற செயல்களில் ஈடுபட்டு அதனால் தமக்கோ, தம்மைச் சார்ந்தவர்களுக்கோ பாதிப்புகள் ஏற்படும். அது தவறு என்பதை உணர்ந்ததும் மனம் வருந்தி அதை உடனே அவர்கள் விட்டு விடுவார்கள். அதோடு அல்லாஹ்வின் சட்டதிட்டத்தின் படி அதற்கு என்ன பரிகாரம் என்பதைக் கண்டறிந்து, தீய விளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, தம்மை திருத்திக் கொண்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். (25:70-71) இப்படியாக தவறான செயல்களால் ஏற்படுகின்ற தீய விளைவுகளிலிருந்து நிவாரணம் பெற வழிவகுத்துக் கொள்வார்கள். ஏனெனில் அல்லாஹ் நிர்ணயித்துள்ள இந்த வழி முறையைத் தவிர, பாதுகாப்பான வாழ்விற்கு வேறு எந்த வழிமுறையும் இல்லை.

3:136

أُوْلَٰٓئِكَ جَزَآؤُهُم مَّغۡفِرَةٞ مِّن رَّبِّهِمۡ وَجَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَنِعۡمَ أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ١٣٦

3:136. இப்படியாக மனந்திருந்தி வாழ முன்வருபவர்களுக்குத் தான் பாதுகாப்பான சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு கிடைக்கும். இத்தகையோர் செய்து வரும் ஆக்கப்பூர்வமான நற்செயல்களால், தாராளமான பொருதார வசதிகள் வற்றாத ஜீவநதி போல் கிடைக்கும். மேலும் நிலையான சந்தோஷங்களைக் கொண்ட சுவனத்திற்கு ஒப்பான வாழ்வும் கிடைக்கும். இந்தச் சுவன வாழ்வு இவ்வுல கிலும், மறுவுலகிலும் தொடரும். இப்படி ஒரு நிலையை அடைவது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள்.

இப்படியாக உலகில் காலம் காலமாக சமுதாய நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர்களும், சுயநலத்தை நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். இவர்களிடையே மோதல்களும் இருந்து வந்தன. அதர்மம் இவ்வுலகில் நிலைத்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் அதர்மம் தலை தூக்கிய போது, அது அழிவையே சந்தித்துக் கொண்டது. காலம் காலமாக இப்படித் தான் நடந்து வந்துள்ளது.

3:137

قَدۡ خَلَتۡ مِن قَبۡلِكُمۡ سُنَنٞ فَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ ١٣٧

3:137. இப்படியாக உலகில் பல சமுதாயங்கள் தோன்றின. பல வாழ்க்கை வழிமுறைகள் தோன்றின. மனித வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள். அல்லது உலகம் முழுவதையும் சுற்றிப் பாருங்கள். தர்மத்தை நிலை நாட்டும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டவர்கள், அழிவைத் தான் சந்தித்துள்ளார்கள் என்ற உண்மை உங்களுக்கு விளங்கி விடும்.

3:138

هَٰذَا بَيَانٞ لِّلنَّاسِ وَهُدٗى وَمَوۡعِظَةٞ لِّلۡمُتَّقِينَ ١٣٨

3:138. எனவே உண்மை விஷயங்களைத் தெளிவாக்கிடவே இந்த வரலாற்றுச் சான்றுகள் தரப்படுகின்றன. இதைக் கொண்டு மக்கள் படிப்பினை பெற்று, தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், அவ்வாறு பாதுகாப்பாக வாழ நாடுவோருக்கு இந்த வலராற்றுச் சான்றுகள் நல்ல அறிவுரைகளாகவும் இருக்கின்றன.

எனவே வாழ்வில் உயர்வும் மதிப்பும் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அல்லாஹ்வின் நிலையான வழிகாட்டுதலை மனதில் பதிய வைத்து செயலாற்றுங்கள். உங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற்று விட்டால், உங்களுள் மந்தமான நிலையோ சோர்வோ ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால், தைரியத்தை இழந்து விரக்தியுடன் அமர்ந்துவிடக் கூடாது. தவறு எங்கே நடந்தது என்பதைக் கண்டறிந்து சரிசெய்ய முயல வேண்டும். (பார்க்க 57:22-23)அல்லாஹ்வின் வழிகாட்டுதலை முழு மனதுடன் பின்பற்றுவதைக் கொண்டே, இத்தகைய மனப்பான்மை உங்களுள் வளரும்.

3:139

وَلَا تَهِنُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ١٣٩

3:139. ஆக நீங்கள் உண்மையிலேயே இறைவழிகாட்டுதலைப் பேணி நடக்கும் மூஃமின்களாக இருந்தால், மனக் கவலை கொள்வதோ தைரியத்தை இழப்பதோ கூடாது. அப்போதுதான் நீங்கள் உயர்நிலையை அடைவீர்கள்.

3:140

إِن يَمۡسَسۡكُمۡ قَرۡحٞ فَقَدۡ مَسَّ ٱلۡقَوۡمَ قَرۡحٞ مِّثۡلُهُۥۚ وَتِلۡكَ ٱلۡأَيَّامُ نُدَاوِلُهَا بَيۡنَ ٱلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَيَتَّخِذَ مِنكُمۡ شُهَدَآءَۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ ١٤٠

3:140. நினைவில் கொள்ளுங்கள். அநியாயத்தை எதிர்த்து போரிடுவது சில சமயங்களில் தவிர்க்க முடியாததாகி விடும். இதில் சில சமயம் உங்களுக்கு காயங்கள் ஏற்படலாம். அதேபோல் எதிர் அணியினருக்கும் ஏற்படும். மனித வரலாற்றின் ஏடுகள் இதையே சான்று பகர்கின்றன. இவை யாவும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, எந்த அளவிற்கு உறுதியுடன் நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பதை அறிந்துக் கொள்ளும் அளவுகோலாக அமைகின்றன. மேலும் செயலளவில் நீங்கள் எந்த அளவிற்குத் தயாராக இருக்கிறீர்கள் என்பதையும் காட்டும். போரில் வெற்றி தோல்வி என்பது இயல்பு. ஆனால் நிலைகுலையாமல் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டால் மட்டுமே அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியும். மாறாக அநியாயக்காரர்களை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.

3:141

وَلِيُمَحِّصَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَيَمۡحَقَ ٱلۡكَٰفِرِينَ١٤١

3:141. இத்தகைய போர்கள் மற்றும் மோதல்களின் நோக்கம், இறைவழி காட்டுதலை ஏற்று செயல்படுபவர்களுள் நிலவி வரும் பொறுப்பற்ற நிலையை நீக்கி, சிறந்த செயல்வீரர்களாக ஆக்குவதற்கே ஆகும். மேலும் இறை வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்பட்டு சமுதாயத்தை சீரழிக்கும் தீய சக்திகளை வலுவிழக்கச் செய்து ஒடுக்கி வைக்கவும் இவை உதவுகின்றன.

3:142

أَمۡ حَسِبۡتُمۡ أَن تَدۡخُلُواْ ٱلۡجَنَّةَ وَلَمَّا يَعۡلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَٰهَدُواْ مِنكُمۡ وَيَعۡلَمَ ٱلصَّٰبِرِينَ١٤٢

3:142. இவ்வுலகில் சமுதாயங்கள் அழிந்து போவதற்கும் சிறப்பாக இருப்பதற்கும் இவையே நிலையான அடிப்படை கோட்பாடுகளாகும். இதை அறிந்துக்கொண்ட பின்னரும், எந்த ஒரு முயற்சியும் உழைப்பும் இல்லாமல் அமர்ந்த இடத்திலேயே இருந்துக் கொண்டு, வாழ்வில் நிலையான சந்தோஷங்களையும் சுவனத்தையும் அடைந்து விடலாம் என்ற கற்பனை யில் மூழ்கி இருக்கின்றீர்களா?

சுவனத்திற்கு ஒப்பான வாழ்வை அடைவதற்கு, உங்களுடைய நற்பண்புகளையும் திறமைகளையும் வீரத்தையும் செயலளவில் வெளிப்படுத்த வேண்டும். இதற்காக அல்லும் பகலும் ஆய்வுகளையும், தொடர் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சமுதாயத்தைச் சீரழிக்கும் தீய சக்திகளை எதிர்த்து போராடியே ஆகவேண்டும். அப்போது தான் நீங்கள் உங்கள் நாட்டை சுவர்க்க பூமியாக மாற்ற முடியும். தர்மத்தை நிலைநாட்ட யார் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்களோ, அவர்களே ஜீவனுள்ள வாழ்வைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். (2:243)

3:143

وَلَقَدۡ كُنتُمۡ تَمَنَّوۡنَ ٱلۡمَوۡتَ مِن قَبۡلِ أَن تَلۡقَوۡهُ فَقَدۡ رَأَيۡتُمُوهُ وَأَنتُمۡ تَنظُرُونَ١٤٣

3:143. இதன் அடிப்படையில் நீங்கள் மரணத்தை சந்திக்க தயாராக இருந்தீர்கள். இப்போது அந்த தருணம் நெருங்கி விட்டது. தீய சக்திகளோடு போரிடும் கட்டாயம் வந்து விட்டது. இதில் உங்கள் மரணத்தை கண்கூடாகப் பார்க்கப் போகிறீர்கள். உண்மையிலேயே தம் பேச்சில் உண்மையாளர்கள் யார் என்பது இப்போது தெரிந்துவிடும்.

போர், உயிர் தியாகம் என்ற பேச்சு எழும்போது, ஒரு விஷயத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். உங்களுடைய வாழ்வு மற்றும் பலத்தின் இரகசியமே, வலிமை மிக்க ஆட்சி நடைபெறுவதைப் பொறுத்தே அடங்கியுள்ளது. எனவே இந்த தியாகங்கள் தனி நபருக்காக என்று இருக்கக் கூடாது. இந்த விஷயத்தில் மற்றவரை விடுங்கள்.

3:144

وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٞ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِ ٱلرُّسُلُۚ

3:144. மனிதரில் மாணிக்கமாகத் திகழும் முஹம்மது நபி அவர்களையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் இறைச் செய்தியை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு தூதராகவே விளங்குகிறார். இதற்கு முன் பல இறைத்தூதர்கள் வந்துள்ளனர். அவர்கள் தம் கடமையை சிறப்பாக ஆற்றிவிட்டு சென்றுள்ளனர். அது போலவே முஹம்மது நபிஸல் அவர்களும் தன் கடமைகளை சிறப்பாகச் நிறைவேற்றவே வந்துள்ளார்.

أَفَإِيْن مَّاتَ أَوۡ قُتِلَ ٱنقَلَبۡتُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡۚ وَمَن يَنقَلِبۡ عَلَىٰ عَقِبَيۡهِ فَلَن يَضُرَّ ٱللَّهَ شَيۡـٔٗاۚ وَسَيَجۡزِي ٱللَّهُ ٱلشَّٰكِرِينَ١٤٤

எனவே நபியின் உயிர் பிரிந்து விட்டாலோ அல்லது அவர் கொல்லப் பட்டாலோ நீங்கள் அவர் காட்டிய மார்க்கத்தை விட்டுவிட்டு, பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பி சென்று விடுவீர்களா? அவ்வாறு சென்றுவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு அல்லாஹ்வுக்கு அல்ல. இப்படி நிலை தடுமாறி திரும்பி செல்பவர்களுக்குத் தான் நஷ்டம். எனவே யார் இறை ஆட்சியமைப்பு நிலைத்திருக்க நன்றி விசுவாசத்துடன் செயல்படுகிறார்களோ, அவர்களுடைய உழைப்பு ஒருபோதும் வீண் போகாது.

எனவே தனிநபர் ஒருவருடைய மரணத்தால், ஆட்சியமைப்புக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அது சிறந்த ஆட்சியாக கருத முடியாது. இப்படிப்பட்ட ஆட்சி இவ்வுலகில் நீடிக்கவும் முடியாது. ஏனெனில் எந்த தனி நபரும் இவ்வுலகில் தொடர்ந்து உயிர் வாழவே முடியாது என்பது அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறை ஆகும். (3:185).

3:145

وَمَا كَانَ لِنَفۡسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِ كِتَٰبٗا مُّؤَجَّلٗاۗ وَمَن يُرِدۡ ثَوَابَ ٱلدُّنۡيَا نُؤۡتِهِۦ مِنۡهَا وَمَن يُرِدۡ ثَوَابَ ٱلۡأٓخِرَةِ نُؤۡتِهِۦ مِنۡهَاۚ وَسَنَجۡزِي ٱلشَّٰكِرِينَ١٤٥

3:145. எனவே மரணம் என்பது அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறையின் படி ஒவ்வொரு நபருக்கும் நிகழக் கூடியதே ஆகும். அதை யாரும் தவிர்க்கவும் முடியாது. அல்லாஹ்வின் நியதிப் படியே ஒவ்வொருவருடைய ஆயுட்காலமும் நிர்ணயமாகிறது. இப்போது இருப்பது ஒவ்வொருவரின் வாழ்வின் நோக்கங் களைப் பற்றியது. இவ்வுலகில் இருவகையான சமுதாயங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒருவகையினர் இவ்வுலக தற்காலிக வாழ்வின் பலன்களை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்பவர்கள். இன்னொரு வகையினர் இவ்வுலக தற்காலிக வாழ்வின் நன்மைகளோடு வருங்கால நிலையான பலன்களையும் கருத்தில் கொண்டு வாழ்பவர்கள். ஆக யார் எப்படிப்பட்ட வாழ்வை விரும்பி செயல்படுகிறார் களோ, அவ்வாறே பலன்களும் கிடைத்திட வேண்டும் என்பது அல்லாஹ் நிர்ணயித்துள்ள சட்டமாகும். (பார்க்க: 2:202, 17:18-20) ஆக இறை வழிகாட்டுதலின் படி நன்றி விசுவாசத்துடன் செயல்படுவோருக்கு அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

மேலும் இதற்காக இந்த போரும் உயிர் இழப்பும் தேவையா என்ற கேள்வி எழுகிறது. ஓட்டுமொத்த சமுதாய மக்களின் நலனை நோக்கமாகக் கொண்டு சிறந்த ஆட்சியமைப்பை ஏற்படுத்துவோர் ஒரு பக்கம், சுயநல நோக்கத்துடன் இதை எதிர்த்து செயல்படுவோர் மறுபக்கம். எனவேதான் மோதல்கள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன.

3:146

وَكَأَيِّن مِّن نَّبِيّٖ قَٰتَلَ مَعَهُۥ رِبِّيُّونَ كَثِيرٞ فَمَا وَهَنُواْ لِمَآ أَصَابَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ وَمَا ضَعُفُواْ وَمَا ٱسۡتَكَانُواْۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلصَّٰبِرِينَ١٤٦

3:146. உலகிற்கு வருகை தந்த எத்தனையோ நபிமார்கள், இத்தகைய கொள்கையை முன்வைத்தே செயல்பட்டனர். இதன் அடிப்படையில் அவர்கள் ஏற்படுத்திய அமைப்பை நிராகரித்து அதற்கு எதிராக செயல்படுபவர்களை ஒடுக்க, நபியை ஆதரித்து மூஃமின்கள் (ரிப்பியூன்கள்) போரிட்டனர். அவர்களுக்கு துன்பங்கள் பல ஏற்பட்ட போதும், தைரியத்தை இழக்காமலும், பலவீனம் அடையாமலும், எதிரிகளுக்குப் பயந்து பணிந்து போகாமலும் செயல்பட்டனர். இப்படிப்பட்ட வீரர்களுக்கே அல்லாஹ்வின் நேசம் என்றைக்கும் கிடைக்கும். இந்த மன உறுதிப்பாடும் விடா முயற்சியும் அல்லாஹ்வுக்குப் பிடித்தமான பண்புகளாகும்.

3:147

وَمَا كَانَ قَوۡلَهُمۡ إِلَّآ أَن قَالُواْ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَإِسۡرَافَنَا فِيٓ أَمۡرِنَا وَثَبِّتۡ أَقۡدَامَنَا وَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ١٤٧

3:147. இப்படிப்பட்ட உயர் பண்புகளைக் கொண்ட “ரிப்பியூன்கள்” களத்தில் முன்னேறிய வண்ணம், தம் மனதில் எழுந்த எண்ணங்கள், “எங்கள் இறைவனே! நாங்கள் ஈடுபட்டிருக்கும் இக்காரியங்களில் தவறுகள் ஏதேனும் ஏற்பட்டாலோ, அறியாமல் வரம்பு மீறி நடந்தாலோ, அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக. எங்கள் நோக்கத்தில் உறுதியாக நிலைத்து நின்று செயல்பட மன உறுதியை ஏற்படுத்துவாயாக. பகைவர்களை முறியடிக்க எங்களுக்குத் துணை புரிவாயாக” என்று வார்த்தைகளாக வெளிவந்தன. இதைத் தவிர வேறெந்த நோக்கமும் அவர்களிடம் இருந்ததில்லை.

3:148

فَـَٔاتَىٰهُمُ ٱللَّهُ ثَوَابَ ٱلدُّنۡيَا وَحُسۡنَ ثَوَابِ ٱلۡأٓخِرَةِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ ١٤٨

3:148. இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான உயர் நோக்கங்களைக் கொண்டு செயல்படும் வீரர்களுக்கே இவ்வுலக தற்காலிக சந்தோஷங்களும் பலன்களும், வருங்கால நிலையான சந்தோஷங்களும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கின்றன. சந்தோஷங்கள் நிறைந்த வாழ்வு மரணத்திற்குப் பின்பும் தொடரும். இவ்வாறு இறைச் சட்டங்களின் படி அழகிய முறையில் செயலாற்றுபவர்களுக்கே அல்லாஹ்வின் நேசம் கிடைக்கிறது.

3:149

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تُطِيعُواْ ٱلَّذِينَ كَفَرُواْ يَرُدُّوكُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ فَتَنقَلِبُواْ خَٰسِرِينَ ١٤٩

3:149. இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களே! இந்தக் கொள்கையை நிராகரித்து இதற்கு மாற்றமாக செயல்படும் எதிரணியினரை ஆதரித்து அவர்களை பின்பற்றி நடந்தால், அவர்கள் உங்களை வழிகெடுத்து பழைய வாழ்க்கை முறைக்கே திருப்பி விடுவார்கள். இதனால் நீங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாவீர்கள்.

3:150

بَلِ ٱللَّهُ مَوۡلَىٰكُمۡۖ وَهُوَ خَيۡرُ ٱلنَّٰصِرِينَ١٥٠

3:150. எனவே நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டும் அடிபணிந்து செயல்படுங்கள். உங்கள் வாழ்வில் துணையாக வருவதும் உதவி புரிவதும் பாதுகாப்பதும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலே ஆகும்.

ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி ஒரு சமுதாயம் முற்றிலும் செயல்படும் போது, அங்கு பயமோ பிரச்சனைகளோ இல்லாத நிம்மதியான சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்ற மாகச் செயல்பட்டால் அங்கு மனித நேயம் சீர்கெட்டு மோசமான சமுதாயமாக மாறிவரும். அங்கு அநியாயமும் அக்கிரமும் தான் தலைதூக்கும். இதனால்

3:151

سَنُلۡقِي فِي قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلرُّعۡبَ بِمَآ أَشۡرَكُواْ بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗاۖ وَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ وَبِئۡسَ مَثۡوَى ٱلظَّٰلِمِينَ١٥١

3:151. இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்படும் சமுதாயத்தில் பயமும் பீதியும் ஏற்பட்டு, நிம்மதியற்ற நிலை ஏற்படும். எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளைக் கடைப்பிடித்தால், அது மூடநம்பிக்கையின் அடிப்படையில் தான் இருக்கும். அவற்றிற்கு எவ்வித ஆதாரமும் இருக்காது. மேலும் அவர்களுடைய செயல்பாடுகளிலும் சயநலம்தான் மிகைத்திருக்கும். இதனால் அத்தகைய சமுதாயங்கள் தீராப் பிரச்சனைகள் நிறைந்து, அது நரகமான வாழ்க்கைக்குத் தள்ளிவிடும்.இப்படி ஒரு அவலநிலை ஏற்படுவது நல்லதா?

இதற்கு உஹது களத்தில் நடந்த சம்பவம் உங்களுக்கு அனுபவப் பாடமாக இருக்கும். நீங்கள் அனைவரும் களத்தில் இருந்தீர்கள். அல்லாஹ்வின் கட்டளைப் படி பகைவர்களை முறியடித்து வெற்றி பெறும் நிலையில் இருந்தீர்கள். இப்படியாக வெற்றி நிச்சயம் என்ற

3:152

وَلَقَدۡ صَدَقَكُمُ ٱللَّهُ وَعۡدَهُۥٓ إِذۡ تَحُسُّونَهُم بِإِذۡنِهِۦۖ حَتَّىٰٓ إِذَا فَشِلۡتُمۡ وَتَنَٰزَعۡتُمۡ فِي ٱلۡأَمۡرِ وَعَصَيۡتُم مِّنۢ بَعۡدِ مَآ أَرَىٰكُم مَّا تُحِبُّونَۚ

3:152. அல்லாஹ்வின் வாக்கும் நிறைவேறும் தருணம் அது. ஆனால் அதே சமயம் உங்களில் ஒரு பிரிவினர் போர் முனையில் நிலைத்திருந்து போரிடாமல், தம் இடத்திலிருந்து விலகி விட்டீர்கள் (3:122). மேலும் படைத் தலைவரான நபியின் உத்தரவையும் மீறிவிட்டீர்கள். போரில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆவல் என்னவோ உங்களிடம் இருந்தது. வெற்றியும் உங்கள் கண்ணெதிரே இருந்தது. இருந்தும் தோற்றுப் போகும் சூழ்நிலை உருவாகி விட்டது.

مِنكُم مَّن يُرِيدُ ٱلدُّنۡيَا وَمِنكُم مَّن يُرِيدُ ٱلۡأٓخِرَةَۚ ثُمَّ صَرَفَكُمۡ عَنۡهُمۡ لِيَبۡتَلِيَكُمۡۖ

இதற்குக் காரணம், உங்களில் சிலர் சுயநலப் போக்குடனும், மற்றும் சிலர் உயர் இலட்சியத்துடனும் இருந்தீர்கள். இதனால் தான் உங்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு, பகைவர்களை விட்டு உங்கள் கவனங்கள் திசை மாறிப் போய்விட்டன. இதனால் பகைவர்களின் தாக்குதலினால் உங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதன்பின் உண்மை நிலவரத்தை நீங்கள் கண்டறிந்து, ஒருங்கிணைந்து மீண்டும் களத்தில் இறங்கினீர்கள். அதைத் தொடர்ந்து அந்தப் போரில் வெற்றியும் பெற்றீர்கள்.

وَلَقَدۡ عَفَا عَنكُمۡۗ وَٱللَّهُ ذُو فَضۡلٍ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ ١٥٢

இப்படியாக உங்களுடைய தவறுகளால் ஏற்படவிருந்த பாதிப்புகள் நீங்கின. ஆக ஒருமுறை தவறிழைத்து விட்டதால், எக்காலத்திற்கும் துன்பத்தி லேயே இருக்க வேண்டும் என்பதல்ல அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டம். தவறை உணர்ந்து உடனே திருத்திக் கொண்டு, நேரான பாதையில் வந்துவிட்டால், அல்லாஹ்வின் அருட்கொடைகள் அனைத்தும் மீண்டும் கிடைத்து வரும்.

3:153

۞ إِذۡ تُصۡعِدُونَ وَلَا تَلۡوُۥنَ عَلَىٰٓ أَحَدٖ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ فِيٓ أُخۡرَىٰكُمۡ فَأَثَٰبَكُمۡ غَمَّۢا بِغَمّٖ

3:153. உஹது களத்தில் உங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்ட சமயம் நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் தலை தெறிக்க ஓடினீர்கள். உங்களோடு இருந்த மற்ற வீரர்களின் நிலைமை என்னவென்பதையும் நினைத்துப் பார்க்கவில்லை. அதுமட்டுமின்றி உங்கள் படைத் தளபதியான இறைத்தூதர் உங்களை அழைத்துக் கொண்டிருந்தும், நீங்கள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. இதனால் உங்களுக்குப் பெருத்த நஷ்டத்தின் மேல் நஷ்டம் ஏற்பட்டு விட்டது.

لِّكَيۡلَا تَحۡزَنُواْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا مَآ أَصَٰبَكُمۡۗ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ١٥٣

இதிலிருந்து நீங்கள் பெற்ற அனுபவப் பாடம் என்ன? போர் போன்ற இக்கட்டான சமயங்களிலும் படைத் தளபதியின் கட்டளைகளை மீறி தன்னிச்சை யாக இடத்தை விட்டு எங்கும் அசையக்கூடாது என்றும், நீங்களே சுயமாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்றும், சேனாதிபதியின் மறு உத்தரவு வரும் வரையில் காத்திருந்து, தமக்கு அளிக்கப்பட்ட பணியை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெளிவாகின. எனினும் நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதையும் அறிந்துக் கொள்ளுங்கள்.

3:154

ثُمَّ أَنزَلَ عَلَيۡكُم مِّنۢ بَعۡدِ ٱلۡغَمِّ أَمَنَةٗ نُّعَاسٗا يَغۡشَىٰ طَآئِفَةٗ مِّنكُمۡۖ وَطَآئِفَةٞ قَدۡ أَهَمَّتۡهُمۡ أَنفُسُهُمۡ يَظُنُّونَ بِٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ ظَنَّ ٱلۡجَٰهِلِيَّةِۖ يَقُولُونَ هَل لَّنَا مِنَ ٱلۡأَمۡرِ مِن شَيۡءٖۗ قُلۡ إِنَّ ٱلۡأَمۡرَ كُلَّهُۥ لِلَّهِۗ يُخۡفُونَ فِيٓ أَنفُسِهِم مَّا لَا يُبۡدُونَ لَكَۖ

3:154. அதன்பின் அந்தப் போரை முன்நின்று நடத்திய நபியின் அழைப்பை ஏற்று நீங்கள் மன உறுதியுடன் மீண்டும் போரிட்டதால், அந்தப் போரில் தோற்றுப் போகும் நிலை மாறி வெற்றி கிடைத்தது. துக்கமும் மன வேதனைகளும் நீங்கி மனநிறைவு ஏற்பட்டு, உங்களால் நிம்மதியாக தூங்கவும் முடிந்தது. எனினும் இந்த மனநிறைவும் நிம்மதியும் உங்களோடு இருந்த நயவஞ்சகர்களுக்கு கிடைக்கவில் லை. காரணம் இறைவனின் நேரடியான உதவி வரும் என்று அறியாமைக் காலத்தில் இருந்த எதிர்பார்ப்பு இருந்தது போல், இப்போதும் அவர்களிடையே நிலவி வந்தது. இதனால் அவர்களுள் சிலர், போர் சம்பந்தமாக முடிவெடுக்கும் உரிமை தமக்கும் இருக்க வேண்டும் என்றனர். ஆனால் போர் என்பது உலக மக்களின் நலனைக் கருதி, இறை ஆட்சியமைப்பில் கூட்டாக எடுக்கப்படும் தீர்மானமாகும். இந்த அதிகாரம் முற்றிலும் அல்லாஹ் காட்டிய வழியில் செயல்படும் ஆட்சி அமைப்பிற்கே உரியதாகும். மேலும் அவர்களுடைய பேச்சு ஒன்றும், உள்ளத்தில் வேறு விதமாகவும் உள்ளது.

يَقُولُونَ لَوۡ كَانَ لَنَا مِنَ ٱلۡأَمۡرِ شَيۡءٞ مَّا قُتِلۡنَا هَٰهُنَاۗ قُل لَّوۡ كُنتُمۡ فِي بُيُوتِكُمۡ لَبَرَزَ ٱلَّذِينَ كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقَتۡلُ إِلَىٰ مَضَاجِعِهِمۡۖ

போரில் ஈடுபடாமல் வீட்டிலேயே தங்கியிருந்தால் இத்தனை உயிர்களை இழக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது என்கின்றனர். அவர்களிடம், “வீட்டிலேயே தங்கிக்கொள்ளும் எண்ணம் உங்களுக்கு இருந்திருந்தால், அதை வெளிப்படை யாகவே தெரியப்படுத்தி இருக்கலாமே. இந்தப் போர் வீரர்களாகிய மூஃமின்கள், உங்களை நம்பியும் இருக்க மாட்டார்களே. நீங்கள் வீட்டிலேயே தங்கி இருந்தாலும், மரணம் உங்களை நெருங்காமல் விட்டுவிடுமா? மூஃமின்களின் கூட்டத்தாரைப் பாருங்கள். போர் அறிவிப்பு வந்ததும், உடனே அவர்கள் தாங்களாகவே போருக்கு ஆயத்தமாகி போர்முனைக்கு வந்து விடுகிறார்கள்” என்று கூறிவிடுங்கள்.

وَلِيَبۡتَلِيَ ٱللَّهُ مَا فِي صُدُورِكُمۡ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ١٥٤

ஆக இந்தப் போரில் கிடைத்த அனுபவம் யாதெனில், யார் மனதில் என்ன மறைந்து நிற்கிறது என்ற உண்மையும் வெளிப்பட்டது தான். முனாஃபிக்குகளிடம் இருந்த இரட்டை வேடப் போக்கும், மூஃமின்களி டம் இருந்த செயல் ஆர்வமும் பளிச்சிட்டன. அனைவரின் மனதில் இருந்த நிலை என்ன என்பது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். (பார்க்க 3:166)

3:155

إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوۡاْ مِنكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ إِنَّمَا ٱسۡتَزَلَّهُمُ ٱلشَّيۡطَٰنُ بِبَعۡضِ مَا كَسَبُواْۖ وَلَقَدۡ عَفَا ٱللَّهُ عَنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ١٥٥

3:155. களத்தில் இரு அணியினரும் சந்தித்தபோது, உங்களில் சிலர் பதற்றத்தால் களத்திலிருந்து பின்வாங்கி ஓட ஆரம்பித்தனர். அவர்களிடம் இருந்த சில பலவீனமே இதற்குக் காரணம். அந்தக் கண நேரத்தில் என்ன செய்வது என்று அறியாது, இத்தகைய சருகல்கள் ஏற்பட்டு விட்டன. போர் சமயங்களில் ஏற்படும் இப்படிப்பட்ட தவறுகளுக்கு, இறைச் சட்டத்தில் மன்னிப்பு உண்டு. இனி அவ்வாறு நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஆக பாதுகாப்பு விஷயங்களில் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் மிகவும் உறுதி மிக்கவையே ஆகும்.

3:156

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَكُونُواْ كَٱلَّذِينَ كَفَرُواْ وَقَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ إِذَا ضَرَبُواْ فِي ٱلۡأَرۡضِ أَوۡ كَانُواْ غُزّٗى لَّوۡ كَانُواْ عِندَنَا مَا مَاتُواْ وَمَا قُتِلُواْ لِيَجۡعَلَ ٱللَّهُ ذَٰلِكَ حَسۡرَةٗ فِي قُلُوبِهِمۡۗ وَٱللَّهُ يُحۡيِۦ وَيُمِيتُۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ١٥٦

3:156. இறை வழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு மாற்றமாகச் செயல்படுபவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். பயணத்திலும் போரிலும் மரணம் அடைந்த மார்க்க சகோதரர்களைப் பற்றி, “நாம் வீட்டில் தங்கியிருப்பது போல் அவர்களும் தங்கியிருந்தால், அவர்களுக்கு மரணம் ஏற்பட்டு இருக்காது அல்லது கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று வெற்றுப் பேச்சு பேசி வருகின்றனர். இத்தகைய பேச்சு அவர்களுடைய ஏக்கத்தையும் கோழைத் தனத்தையும் பிரதிபலிக்கிறது. ஏனெனில் வாழ்வும் மரணமும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படிதான் ஏற்படுகின்றன. எனவே நீங்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதிமுறைக்கு உட்பட்டே விளைவுகள் ஏற்படும். எதுவும் அதன் வரம்புக்கு வெளியே செல்ல இயலாது.

அதாவது போரில் கலந்துக்கொள்ளும் அனைவருமே மரணிப்பதில்லை. அதே போல் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் விபத்துகளில் மாட்டிக் கொள்வதும் இல்லை. எனவே எதிலும் துணிந்து செயல்பட்டால் தான் ஒருவர் தம் இலக்கை அடைய முடியும் என்பது இதிலிருந்து புலனாகிறது. இதனால் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது.

3:157

وَلَئِن قُتِلۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ أَوۡ مُتُّمۡ لَمَغۡفِرَةٞ مِّنَ ٱللَّهِ وَرَحۡمَةٌ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ ١٥٧

3:157. ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் நலனை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இறை ஆட்சியமைப்பை கட்டிக் காக்க வேண்டும். இல்லையேல் சமூக விரோத சக்திகள் தலைதூக்கும். எனவே ஆட்சி அமைப்பைக் கட்டிக் காப்பதில் கொல்லப்பட்டாலோஅல்லது மரணித்து விட்டாலோ, அல்லாஹ்விடம் கிடைக்கும் பாதுகாப்பான வாழ்க்கையும் அருட்கொடைகளும் அவர்கள் சேமித்து வைத்துள்ள செல்வங்களை விட பன்மடங்கு மேலானதாகும்.

3:158

وَلَئِن مُّتُّمۡ أَوۡ قُتِلۡتُمۡ لَإِلَى ٱللَّهِ تُحۡشَرُونَ١٥٨

3:158. ஏனெனில் உங்கள் வாழ்வு இயற்கை மரணத்தாலோ அல்லது கொல்லப்படுவதாலோ முடிந்து விடுவதில்லை. அதன் பின்பும் தொடர்கிறது. அது பல முன்னேற்றப் படித்தரங்களைக் கடந்து அல்லாஹ் நிர்ணயித்துள்ள இலக்கை நோக்கி சென்றடைகிறது.

மேலும் இறை ஆட்சியமைப்பின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படும் காலம் நிச்சயம் வரும். அவ்வாறு செயல்படுபவர்கள், அல்லாஹ்வின் சிறப்பு குணநலன்களில் ஒன்றான அன்பு என்னும் பாசப் பிணைப்பை தம்மளவில் வளர்த்துக் கொள்கிறார்கள். (2:138) இதனால் இந்த அமைப்பை வழிநடத்திச் செல்லும்.

3:159

فَبِمَا رَحۡمَةٖ مِّنَ ٱللَّهِ لِنتَ لَهُمۡۖ وَلَوۡ كُنتَ فَظًّا غَلِيظَ ٱلۡقَلۡبِ لَٱنفَضُّواْ مِنۡ حَوۡلِكَۖ

3:159. இறைத்தூதர் மார்க்க சகோதரர்களிடம், அன்புடன் மென்மையாக நடந்துக் கொள்கிறார். இந்த அமைப்பு சிறப்பாகச் செயல்படுவதற்கு இது மிகவும் அவசியமானதாகும். நபியே! ஒருவேளை நீர் அவர்களுடன் கடுகடுப்புடனும் கடின சித்தமுடனும் நடந்திருந்தால், இந்தப் பணியை நிறைவேற்றும் செயல்வீரர்கள் உம்மை விட்டு விலகிப் போயிருப்பார்கள். எனவே தம் கடமையை அவர்கள் நிறைவேற்றும் போது ஏற்படும் தவறுகளைப் பெரிதுபடுத் தாமல், அவர்கள் திருந்துவதற்கு கூடுமான வரை அவகாசம் அளிப்பீராக. அவர்களுடைய பாதுகாப்பு பற்றியும் கவனத்தில் கொண்டு தவறுகள் நிகழும்போது, அவற்றை நீக்க தக்க வழிமுறைகளை மேற்கொள்வீராக.

فَٱعۡفُ عَنۡهُمۡ وَٱسۡتَغۡفِرۡ لَهُمۡ وَشَاوِرۡهُمۡ فِي ٱلۡأَمۡرِۖ فَإِذَا عَزَمۡتَ فَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَوَكِّلِينَ١٥٩

இதற்காக நீர் அவர்களை அழைத்து கலந்தாலோசித்து தக்க முடிவு எடுப்பீராக. இவ்வாறு இறை வழிகாட்டுதலின் படி முடிவெடுத்த பின், அதில் முழுமையான உறுதியுடன் அனைவரும் நிலைத்திருந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பொறுப்பு ஏற்றுக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றுவோருக்கு அல்லாஹ்வின் நேசம் கிடைக்கும்.

சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தலைவர்கள் இதை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு செயல்படவேண்டும்.

3:160

إِن يَنصُرۡكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمۡۖ وَإِن يَخۡذُلۡكُمۡ فَمَن ذَا ٱلَّذِي يَنصُرُكُم مِّنۢ بَعۡدِهِۦۗ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ١٦٠

3:160. அல்லாஹ்வின் இந்த வழிகாட்டுதலைக் கொண்டு தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் இத்தகையவர்களுக்கு கிடைக்கும். அவர்கள் மீது வேறு யாரும் எந்த அதிகாரமும் செலுத்த முடியாது. யார் அவ்வாறு செயல்பட வில்லையோ, அதன்பின் அவர்களுக்கு உதவி செய்வோர் யார்? இதை என்றென்றைக்கும் நினைவில் கொண்டு முழு உறுதியுடன் செயல்படுவதே முஃமின்களின் தலையாய கடமையாகும்.

3:161

وَمَا كَانَ لِنَبِيٍّ أَن يَغُلَّۚ وَمَن يَغۡلُلۡ يَأۡتِ بِمَا غَلَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ١٦١

3:161. இந்த உண்மையை அறிந்த பின்பும்,இறைத்தூதர் சொன்னதாகச் சொல்லி தவறான தகவல்களைப் பரப்பி, வஞ்சனை செய்யக் கூடாது. இதையும் மீறி அவ்வாறு செய்தால், குர்ஆனிய ஆட்சியமைப்பு முழு அளவில் செயல்படும் காலக் கட்டத்தில், தவறான தகவல்களைப் பற்றிய உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிடும். அவரவர் செய்த தீய செயல்களுக்கு ஏற்ப தண்டனை அளிக்கப்படும். அத்தகைய தண்டனையை அளிப்பதில் யாருக்கும் சிறிதளவும் பாரபட்சம் காட்டப்பட மாட்டாது. அவ்வாறு இங்கு தப்பித்து விட்டாலும் மரணத்திற்குப் பின் தொடரும் வாழ்வில் தப்பிக்கவே முடியாது.

3:162

أَفَمَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَ ٱللَّهِ كَمَنۢ بَآءَ بِسَخَطٖ مِّنَ ٱللَّهِ وَمَأۡوَىٰهُ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ١٦٢

3:162. நினைவில் கொள்ளுங்கள். தவறான தகவல்களால் மக்கள் காலப் போக்கில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டு திசை மாறிச் செயல்பட ஆரம்பித்து விடுவார்கள். அதனால் பிரச்சனைகள் பல ஏற்பட்டு அந்த சமுதாயம் நரக லேதனையின் பக்கம் சென்று விடும். மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படுவோர், தம் சமுதாயத்தை இவ்வாறு நரகமாக்கிக் கொள்ள விரும்பமாட்டார்கள். ஏனெனில் அந்த நரக வாழ்க்கை மனிதனின் எல்லா சமூக நலத் திட்டங்களையும் பாழாக்கிவிடும்.

3:163

هُمۡ دَرَجَٰتٌ عِندَ ٱللَّهِۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ١٦٣

3:163. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி செயல்படுவோரின் உழைப்பிற்கு ஏற்றவாறு பதவியும் உயர்வும் கிடைக்கும். இப்படியாக அந்த சமுதாயம் படிப்படியாக முன்னேறி வளர்ச்சியின் உச்சக் கட்டத்தை அடையும். ஏனெனில் “மனித நற்செயலுக்கு ஏற்ற நற்பலன்கள்” என்ற அல்லாஹ்வின் சட்டம் என்றென்றும் செயல்பட்டு வருகிறது.

3:164

لَقَدۡ مَنَّ ٱللَّهُ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ إِذۡ بَعَثَ فِيهِمۡ رَسُولٗا مِّنۡ أَنفُسِهِمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمۡ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُواْ مِن قَبۡلُ لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ١٦٤

3:164. எனவே அவர்களிலிருந்தே ஒருவரைத் தூதராகத் தேர்ந்தெடுத்து மிகச் சரியான வழிகாட்டுதலை மூஃமின்களுக்கு அருளியிருப்பது அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையாகும் அல்லவா? இறைத்தூதர், இறைவனின் பிரபஞ்ச படைப்புகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதை மக்களுக்கு விளக்குகிறார். அனைவருடைய அறிவாற்றல்களையும் சிறப்பாக வளரச் செய்து, மூட நம்பிக்கைகளிலிருந்து அவர்களைத் தூய்மை ஆக்குகிறார். மேலும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய இறைச் சட்டங்களையும் அவற்றின் நோக்கங்களையும் ஞானத்தையும் கற்றுத் தருகிறார். அதாவது அவற்றைப் பின்பற்றுவதால் ஏற்படும் பலன்கள் - அவற்றிற்கு மாறு செய்வதால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன என்பதை தெளிவாக எடுத்துரைத்து அறிவுப்பூர்வமாகச் செயல்படும்படி எடுத்து ரைக்கிறார். இறைவன் புறத்திலிருந்து இப்படிப்பட்ட ஏற்பாடுகள் இல்லா திருந்தால், இதற்கு முன் மனிதன் வழிகேட்டிலேயே மூழ்கித் தவித்திருந்தது போல், இவர்களும் துயரம் மிக்க வாழ்வில் மூழ்கி இருப்பார்கள்.

3:165

أَوَلَمَّآ أَصَٰبَتۡكُم مُّصِيبَةٞ قَدۡ أَصَبۡتُم مِّثۡلَيۡهَا قُلۡتُمۡ أَنَّىٰ هَٰذَاۖ قُلۡ هُوَ مِنۡ عِندِ أَنفُسِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ١٦٥

3:165. இறை வழிகாட்டுதலின்படி சமூக அமைப்பை ஏற்படுத்த விரும்பினால், பல எதிர்ப்புகளையும் இன்னல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உதாரணமாக உஹது களத்தில் உங்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், உங்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை விட பகைவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு இருமடங்காகும். இவ்வாறிருந்தும் இந்த இழப்பு எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறது. இந்த இழப்பிற்கு நீங்கள்தான் காரணம் என்று அவர்களிடம் கூறிவிடுங்கள். ஏனெனில் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடைய அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டமே உங்களுடைய வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது என்பதையும் விளக்கி விடுங்கள்.

3:166

وَمَآ أَصَٰبَكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ فَبِإِذۡنِ ٱللَّهِ وَلِيَعۡلَمَ ٱلۡمُؤۡمِنِينَ ١٦٦

3:166. அல்லாஹ்வின் இதே விதிமுறையின்படி தான் அந்த போரில் உங்களுக்கு நஷ்டமும் ஏற்பட்டது. அதே சமயம் உங்களுள் இறைக் கட்டளைக்கு கட்டுப்பட்டு செயல்படும் மூஃமின்கள் யார் என்பதையும் அதற்கு மாற்றமாக செயல்படுபவர்கள் யார் என்பதையும் பிரித்தறியும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைத்தது.

3:167

وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ نَافَقُواْۚ وَقِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ قَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أَوِ ٱدۡفَعُواْۖ قَالُواْ لَوۡ نَعۡلَمُ قِتَالٗا لَّٱتَّبَعۡنَٰكُمۡۗ

3:167. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி உருவாக்கிய அமைப்பைக் பாதுகாக்க போருக்கு செல்லும்படி அழைப்பு விடுத்த போது, முனாஃபிக்குகள் சாக்கு போக்கு சொல்லி வராமல் இருந்து விட்டனர். இப்போது போரில் வெற்றி கிடைத்ததாக செய்தி வந்ததும், போரைப் பற்றிய தகவல் எங்களுக்கும் தெரிந்திருந்தால் நாங்களும் போரில் பங்கெடுத்திருப்போம் என்கின்றனர்.

هُمۡ لِلۡكُفۡرِ يَوۡمَئِذٍ أَقۡرَبُ مِنۡهُمۡ لِلۡإِيمَٰنِۚ يَقُولُونَ بِأَفۡوَٰهِهِم مَّا لَيۡسَ فِي قُلُوبِهِمۡۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يَكۡتُمُونَ١٦٧

போருக்கு அழைப்பு விடுத்த சமயம், அவர்கள் அல்லாஹ்வின் மீது இருந்த நம்பிக்கையை விட அதற்கு எதிரான எண்ணங்களே மிகைத்து இருந்தது. அதனால் அவர்கள் போரில் கலந்துக் கொள்ளவில்லை. அவர்கள் பேசுவது உண்மையாக இருந்திருந்தால் போரில் கலந்துக் கொண்டிருக்க வேண்டியது தானே. இப்போது அவர்களுடைய பேச்சு வேறு விதமாய் இருக்கிறதே. ஆக அவர்களுடைய பேச்சு, உள்ளத்தில ஒன்று வெளியில் ஒன்றாக உள்ளது. அவர்கள் உள்ளங்களில் ஊடுருவிச் செல்லும் எண்ணங்கள் அல்லாஹ்வுக்கு தெரியாமல் போகுமா?

3:168

ٱلَّذِينَ قَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ وَقَعَدُواْ لَوۡ أَطَاعُونَا مَا قُتِلُواْۗ

3:168. இந்த முனாஃபிக்குகள் போருக்குச் செல்வது ஒருபுறம் இருக்கட்டும். வீட்டில் அமர்ந்த படியே போரில் உயிர் நீத்த தம் சகோதரர்களைப் பற்றி என்ன பேசினார்கள் என்று தெரியுமா? எங்களைப் போன்று அவர்களும் போரில் கலந்துக் கொள்ளாமல் இருந்திருந்தால், அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்றனர். அதாவது அவர்கள் வீணாக தம் உயிர்களை போக்கிக் கொண்டதாகச் சொன்னார்கள். போரில் கலந்து கொண்டவர்கள், மாபெரும் இலட்சியத்திற்காக போரிட்டனர்.

قُلۡ فَٱدۡرَءُواْ عَنۡ أَنفُسِكُمُ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ١٦٨

ஆனால் இவர்களோ வெற்றுப் பேச்சு பேசி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் காலம் காலமாக உயிருடன் இருக்கப் போகிறார்களா என்ன? இவர்களுக்கு மரணமே வராதா? அப்படி மரணம் நெருங்கும் போது, அதை தடுத்துக் கொள்ளட்டும்! பார்த்துக் கொள்ளலாம்”என்று அவர்களிடம் சொல்லி விடுங்கள்.

3:169

وَلَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أَمۡوَٰتَۢاۚ بَلۡ أَحۡيَآءٌ عِندَ رَبِّهِمۡ يُرۡزَقُونَ١٦٩

3:169. மனிதனின் வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றைப் பற்றிய உண்மை நிலை இந்த அறிவிலிகளுக்கு என்ன தெரியும். அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி உருவான அமைப்பை கட்டிக்காக நடந்த போரில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள். இது முறையல்ல. அவர்கள் “தியாகிகள்” ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதாரங்கள் அல்லாஹ்விடம் இருந்து கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அவை எவ்வாறு கிடைக்கின்றன என்பதை உங்களால் கணிக்க முடியாது.

3:170

فَرِحِينَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ وَيَسۡتَبۡشِرُونَ بِٱلَّذِينَ لَمۡ يَلۡحَقُواْ بِهِم مِّنۡ خَلۡفِهِمۡ أَلَّا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ١٧٠

3:170. “இந்த தியாகிகள்” அல்லாஹ்வின் புறத்திலிருந்து தமக்கு கிடைத்துள்ள பெரும் பாக்கியத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்கள். மேலும் அவர்கள் செய்த தியாகங்களினால் இவ்வுலகில் வாழும் மற்றவர்களுக்கும் எந்த பயமும் துக்கமும் இல்லாத பாதுகாப்பும், சந்தோஷமான வாழ்க்கையும் கிடைப்பதை உணர்ந்து பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.

3:171

۞ يَسۡتَبۡشِرُونَ بِنِعۡمَةٖ مِّنَ ٱللَّهِ وَفَضۡلٖ وَأَنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُؤۡمِنِينَ١٧١

3:171. அல்லாஹ்வின் புறத்திலிருந்து தங்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் அருட்கொடைகளைப் பார்த்து அளவிலா சந்தோஷம் அடைகிறார்கள். மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று சிறப்பாகச் செயல்படுவோரின் உழைப்பு வீண் போவதில்லை என்பதையும் கண்கூடாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற நற்பலன்கள் கிடைத்திருப்பதைப் பார்த்து பெருமகிழ்ச்சியும் அடைகிறார்கள்.

3:172

ٱلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِلَّهِ وَٱلرَّسُولِ مِنۢ بَعۡدِ مَآ أَصَابَهُمُ ٱلۡقَرۡحُۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ مِنۡهُمۡ وَٱتَّقَوۡاْ أَجۡرٌ عَظِيمٌ ١٧٢

3:172. இந்த மூஃமின்கள் எத்தகையோர் என்றால் தமக்குப் போரில் காயங்கள் பல ஏற்பட்டு சிரமங்களையும், துயரங்களையும் சந்திக்க நேர்ந்த போதும், அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்காக இறைத்தூதர் மீண்டும் போருக்கு அழைப்பு விடுத்தால், அவர்கள் உடனே முகமலர்ச்சியுடன் தயாராகி விடுகிறார்கள். இப்படியாக அல்லாஹ் காட்டிய வழியில் சிறப்பான ஆட்சியமைப்பை ஏற்படுத்தி அதை கட்டிக் காக்கும் இலட்சியத்துடன் பணியாற்றியவர்கள் இவர்கள். இவர்களே சிறந்த வாழ்க்கைப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.

3:173

ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدۡ جَمَعُواْ لَكُمۡ فَٱخۡشَوۡهُمۡ فَزَادَهُمۡ إِيمَٰنٗا وَقَالُواْ حَسۡبُنَا ٱللَّهُ وَنِعۡمَ ٱلۡوَكِيلُ ١٧٣

3:173. இப்படிப்பட்ட உயர் இலட்சியங்களைக் கொண்ட இஸ்லாமிய அமைப்பில் பணியாற்றும் இவர்களிடம், பகைவர்கள் திரட்டியுள்ள படை பலத்தைப் பற்றி கூறி பயமுறுத்துகிறார்கள். மேலும், அதற்கு அஞ்சி ஒதுங்கி இருக்கும்படி உபதேசிக்கிறார்கள். ஆனால் படைவீரர்களாகிய மூஃமின்களுக்கோ, பீதியோ பயமோ ஏற்படுவதற்குப் பதிலாக அல்லாஹ்வின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை மென்மேலும் வலுவடையவே செய்கிறது. “அல்லாஹ்வைவிட சிறந்த பாதுகாவலனோ உதவியாளனோ வேறு யாராவது இருக்க முடியுமா?” என்று பதிலளித்து விடுகிறார்கள்.

3:174

فَٱنقَلَبُواْ بِنِعۡمَةٖ مِّنَ ٱللَّهِ وَفَضۡلٖ لَّمۡ يَمۡسَسۡهُمۡ سُوٓءٞ وَٱتَّبَعُواْ رِضۡوَٰنَ ٱللَّهِۗ وَٱللَّهُ ذُو فَضۡلٍ عَظِيمٍ١٧٤

3:174. இப்படிப்பட்ட அசைக்க முடியாத நம்பிக்கையும் உறுதிப்பாடும் கொண்ட மூஃமின்கள், தாம் எடுத்துக் கொண்ட பணியில் எவ்வித அச்சமுமின்றி வீரத்துடன் களத்தில் முன்னேறிய வண்ணம் இருந்தனர். மேலும் அவர்களுக்கு பெருமளவு பாதிப்புகள் ஏற்படாமல், அல்லாஹ்வின் நியதிப்படி போர் யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்று சந்தோஷத்துடன் வீடு திரும்பினார்கள். இதற்குக் காரணம் அல்லாஹ்வின் விருப்பம் என்னவோ அதன்படியே அவர்கள் செயல்பட்டது தான். எனவே அவர்கள் விரும்பியபடி மகத்தான வெற்றி அல்லாஹ்வின் நியதிப் படி அவர்களுக்குக் கிடைத்து விட்டது.

3:175

إِنَّمَا ذَٰلِكُمُ ٱلشَّيۡطَٰنُ يُخَوِّفُ أَوۡلِيَآءَهُۥ فَلَا تَخَافُوهُمۡ وَخَافُونِ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ١٧٥

3:175. மறுபக்கம் சுயநலக்கார கும்பல், தம் சகாக்களுடன் விதவிதமான வதந்திகளைப் பரப்பி மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தவே முயலுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று நடக்கும் நீங்கள், இந்த மிரட்டல் பேச்சிற்கு பயப்பட வேண்டியதில்லை. மாறாக நீங்கள் அஞ்ச வேண்டியது அல்லாஹ்வுக்கு மட்டும்தான். அதாவது அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சி செயல்பட வேண்டும்.

3:176

وَلَا يَحۡزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِي ٱلۡكُفۡرِۚ إِنَّهُمۡ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗاۚ يُرِيدُ ٱللَّهُ أَلَّا يَجۡعَلَ لَهُمۡ حَظّٗا فِي ٱلۡأٓخِرَةِۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ١٧٦

3:176. சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுபவர்களின் செயல் வேகத்தைப் பார்த்து, நீ கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களுடைய தகாத செயல்களால் இந்த ஆட்சியமைப்புக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது. அவர்களுடைய செயல்களால் ஏற்படும் தீய விளைவுகள் அவர்களைத் தான் பாதிக்கும். தற்காலிக சந்தோஷங்கள் கொஞ்சம் அவர்களுக்கு கிடைத்திட லாமே அன்றி, வருங்கால வாழ்வில் எவ்வித நற்பேறும் ஒருபோதும் கிடைக்காது. அவர்கள் செய்து வரும் தீய செயல்களே அவர்கள் அழிந்து போவதற்கு காரணமாகி விடும். இதுவே அல்லாஹ்வின் நிலையான நடைமுறைச் சட்டமாகும்.

3:177

إِنَّ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلۡكُفۡرَ بِٱلۡإِيمَٰنِ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗاۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ١٧٧

3:177. மேற்சொன்ன விஷயம் அவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்பதல்ல. யாரெல்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட பின், அற்ப ஆதாயங்களுக்காக அதை நிரகரித்து அதற்கு மாற்றமாகச் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். ஏனெனில் இவ்வாறு செயல்படுவதால் ஏற்படும் அழிவுகள் அவர்களுக்குத் தானே அன்றி அல்லாஹ்வுக்கு அல்ல.

தற்காலிக சொகுசு வாழ்வை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்பவர்கள், “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற அல்லாஹ்வின் சட்டம் எதுவும் கிடையாது என்று நினைக்கின்றனர். எனவே தீய செயல்களின் விளைவுகளாக ஏற்படும் அழிவைப் பற்றி அவர்களிடம் எச்சரிக்கை செய்யும் போது, அது வெறும் அச்சுறுத்தல் என்று தவறாக எண்ணிக் கொள்கின்றனர். ஏனெனில் அந்த விளைவுகள் அவர்கள் முன் உடனே தோற்றத்திற்கு வருவதில்லை. அதற்குரிய நேரத்தில் தான் வரும். ஒரு விதை முளைத்து, செடியாகி காய்ப்பதற்கு உரிய நேரத்தை நிர்ணயித்தது போலத் தான் இதுவும்.

3:178

وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّمَا نُمۡلِي لَهُمۡ خَيۡرٞ لِّأَنفُسِهِمۡۚ إِنَّمَا نُمۡلِي لَهُمۡ لِيَزۡدَادُوٓاْ إِثۡمٗاۖ وَلَهُمۡ عَذَابٞ مُّهِينٞ١٧٨

3:178. இந்த காலத் தவணை என்பதெல்லாம் ஒரு சமுதாயம் தன் தவறை உணர்ந்து திருந்துவதற்கு அளிக்கப்பட்ட அவகாசமேயன்றி, ஆடம்பரமாக வாழ நமக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு என்று தவறாக எண்ணிக்கொள்ள வேணடாம். அவ்வாறு நினைத்து செயல்பட்டால் அவர்களுடைய தீயசெயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்று, அவர்களை “வேதனைமிக்க நரகம்” என்கிற பாழ்குழியில் தள்ளி விடும்.

ஓர் அமைப்பு வெற்றி பெற வேண்டும் என்றால் அதில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்களாகவும், தூய உள்ளமும், மனஉறுதியுடன் செயல் வேகமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் உலகில் எந்த ஓரு மறுமலர்ச்சியும் ஏற்படும்போது, அதன் ஆரம்ப காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் அதில் கலந்துக் கொள்வார்கள். ஆனால் அதைத் தொடர்ந்து போராட்டம் மற்றும் கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்க வேண்டிய நிலை வரும்போது தான், மாசு படிந்த உள்ளங்கள் அதிலிருந்து நீங்கிக் கொள்வார்கள். தூய உள்ளமுடையவர்கள் மட்டும் உறுதியுடன் நிலைத்து இருப்பார்கள்.

3:179

مَّا كَانَ ٱللَّهُ لِيَذَرَ ٱلۡمُؤۡمِنِينَ عَلَىٰ مَآ أَنتُمۡ عَلَيۡهِ حَتَّىٰ يَمِيزَ ٱلۡخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِۗ

3:179. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட அனைவரும் தொடர்ந்து இந்த அமைப்பில் நீடிப்பார்கள் என்பதல்ல. போராட்டம், கஷ்ட நஷ்டம் என்று சோதனைகள் வரும்போது தீயவர்கள் யார், நல்லவர்கள் யார் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிடும். ஆனால் இந்த விஷயத்தை அல்லாஹ் முன்கூட்டியே அறிவிப்பதில்லை. அவர்களின் அணுகுமுறையை வைத்தே அவர்களை தெரிந்துக் கொள்ளலாம்.

وَمَا كَانَ ٱللَّهُ لِيُطۡلِعَكُمۡ عَلَى ٱلۡغَيۡبِ وَلَٰكِنَّ ٱللَّهَ يَجۡتَبِي مِن رُّسُلِهِۦ مَن يَشَآءُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۚ وَإِن تُؤۡمِنُواْ وَتَتَّقُواْ فَلَكُمۡ أَجۡرٌ عَظِيمٞ١٧٩

ஆக மனித ஆற்றல்களால் அறிந்துக் கொள்ள முடியாத மறைவான விஷயங்களை மட்டுமே தம் தூதுச் செய்திகளில், தான் பொருந்திக் கொண்ட தூதர்கள் மூலம் அல்லாஹ் அறிவிக்கின்றான். நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதன்படி உருவான ஆட்சியமைப்பு கட்டளைக்கும் ஏற்ப சிறப்பாகச் செயல்பட்டால், சிறப்பான எதிர்காலம் உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

3:180

وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَبۡخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ هُوَ خَيۡرٗا لَّهُمۖ بَلۡ هُوَ شَرّٞ لَّهُمۡۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُواْ بِهِۦ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ١٨٠

3:180. மேலும் ஒட்டு மொத்த சமுதாய நலனை நோக்கமாகக் கொண்டு அல்லாஹ் காட்டிய வழியில் ஆட்சியமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. எனவே அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்குக் கிடைத்துள்ள செல்வங்களிலிருந்து இந்த அமைப்பின் வளர்ச்சிக்காக வழங்குங்கள். அதில் உலோபித்தனம் செய்வது நல்லது என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். உண்மையிலேயே அது உங்களுக்கு தீங்கானதாகும். காலப் போக்கில் இந்த செல்வக் குவியலே உங்களுக்கு அரிகண்டமாக மாறி விடும். அதுமட்டு மின்றி இந்த வேதனை மரணத்திற்குப் பின்பும் தொடரும். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள பரிபாலன ஏற்பாட்டைக் கொண்டு தான் உங்களால் செல்வங்களைப் பெருக்கிக்கொள்ள முடிகிறது. எனவே இந்த செல்வங்களை அல்லாஹ்வின் கட்டளைப் படியே செலவிட வேண்டும். நீங்கள் செய்வது யாவும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்று அவர்களிடம் எடுத்து கூறிவிடுங்கள். (மேலும் பார்க்க 56:63-74)

3:181

لَّقَدۡ سَمِعَ ٱللَّهُ قَوۡلَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ فَقِيرٞ وَنَحۡنُ أَغۡنِيَآءُۘ سَنَكۡتُبُ مَا قَالُواْ وَقَتۡلَهُمُ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖ وَنَقُولُ ذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ١٨١

3:181. “சிறப்பாக சகல வசதிகளோடு வாழும் செல்வ சீமான்கள் நாம். எனவே யாருடைய ஆதரவும் நமக்குத் தேவையில்லை. அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு தான் மிகவும் வசதியற்ற நிலையில் இருக்கிறது. எனவே அது நம்முடைய ஆதரவைத் தேடுகிறது” என்று பேசி வருபவர்களின் பேச்சும், சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரைக் கொலை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இல்லை. இவை யாவும் மிகத் துல்லியமாகப் பதிவாகி வருகிறது. சுட்டெரிக்கும் வேதனைகளை அனுபவிக்க வேண்டிய காலக் கட்டம் அவர்களை நெருங்கி வருகிறது என எச்சரித்து விடுங்கள்.

3:182

ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيكُمۡ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّامٖ لِّلۡعَبِيدِ١٨٢

3:182. இந்த வேதனைகள் அவர்கள் செய்து வரும் தீய செயல்களின் விளைவாக அவர்கள் முன் வந்து நிற்பவையே ஆகும். அவரவர் செய்த குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை தான் கொடுக்கப்படும். அல்லாஹ்வின் புறத்திலிருந்து யாருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது.

3:183

ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ عَهِدَ إِلَيۡنَآ أَلَّا نُؤۡمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأۡتِيَنَا بِقُرۡبَانٖ تَأۡكُلُهُ ٱلنَّارُۗ

3:183. அதுமட்டுமின்றி அவர்களுடைய பேச்சு எவ்வாறு உள்ளது என்பதையும் கவனியுங்கள். “ஒருவரை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அவர் அல்லாஹ்வுக்கு குர்பானி கொடுக்க வேண்டும். அந்தக் குர்பானிப் பொருளை நெருப்பு தீண்டி, அதை இறைவன் ஏற்றுக் கொள்வதை நாம் கண்கூடாக காண வேண்டும். அதன் பின்புதான் அவரை இறைத்தூதராக ஏற்று அவர் மீது விசுவாசம் கொள்ள முடியும். இப்படித் தான் அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று பேசி வருகிறார்கள். இவை எல்லாம் அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட கற்பனைக் கதைகளாகும். அல்லாஹ் யாரிடமும் அப்படியொரு உறுதிமொழி எதுவும் வாங்கவில்லை.

قُلۡ قَدۡ جَآءَكُمۡ رُسُلٞ مِّن قَبۡلِي بِٱلۡبَيِّنَٰتِ وَبِٱلَّذِي قُلۡتُمۡ فَلِمَ قَتَلۡتُمُوهُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ١٨٣

நபியே நீர் அவர்களிடம், “ஒருவேளை உங்களுடைய பேச்சில் உண்மை இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். எனக்கு முன் வந்த இறைத்தூதர்கள் உங்கள் கூற்றின் படி இறைவனுக்குக் குர்பானி கொடுத்து, தம்மை இறைத்தூதர் என்று நிரூபித்தனர் என்பது உண்மை என்றால், நீங்கள் அவர்களைப் பின்பற்றி நடப்பதற்குப் பதிலாக அவர்களைக் கொலை செய்யும் அளவிற்குத் துணிந்ததற்கான காரணம் என்ன? இதற்குப் பதிலளியுங்கள்” என்று கேளும்.

3:184

فَإِن كَذَّبُوكَ فَقَدۡ كُذِّبَ رُسُلٞ مِّن قَبۡلِكَ جَآءُو بِٱلۡبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ وَٱلۡكِتَٰبِ ٱلۡمُنِيرِ١٨٤

3:184. இப்படி அவர்கள் பேசி வருவது புதிதல்ல. உமக்கு முன் வந்த ஒவ்வொரு இறைத் தூதரிடமும் இப்படித் தான் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி அவரை ஏற்க மறுத்து இறை வழிகாட்டுதலைப் புறக்கணித்தனர். உமக்கு முன் வந்த ஒவ்வொரு இறைத்தூதரும் அவர்களிடம் தெளிவான அறிவுப்பூர்வமான ஆகமங்களையும், வாழ்வின் ஒளிமயமான சட்ட திட்டங்களையும் எடுத்துரைத் தனர். ஆனால் அவர்களோ இப்படிப்பட்ட சாக்கு போக்குகளைச் சொல்லி அவற்றை பொய்ப்பிக்கவே முற்பட்டனர்.

3:185

كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَإِنَّمَا تُوَفَّوۡنَ أُجُورَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ فَمَن زُحۡزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدۡخِلَ ٱلۡجَنَّةَ فَقَدۡ فَازَۗ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ١٨٥

3:185. மேலும் அவர்களிடம், “ஒவ்வொருவரும் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும். மனிதனுடைய வாழ்க்கை மரணத்திற்குப் பின்பும் தொடர வேண்டும் என்பதே அல்லாஹ்வின் செயல் திட்டமாகும். எனவே நீங்கள் இவ்வுலக வாழ்வில் செய்து வரும் செயல்களுக்குரிய பலன்களை ஒருவேளை இவ்வுலகில் கிடைக்கவில்லை என்றாலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வில் நிச்சயமாக அளிக்கப்படும் (பார்க்க 67:2) சுவர்க்கமும் நரகமும் அவரவர் இவ்வுலகில் செய்து வந்த செயல்களைப் பொறுத்தே அமையும். எவன் ஒருவன் இவ்வுலக வாழ்விலும் மறுமை வாழ்விலும் நரக வேதனையிலிருந்து மீண்டு சுவர்க்க வாழ்வைத் தேடிக் கொள்கின்றானோ, அவன்தான் உண்மையான வெற்றியாளன். (மேலும் பார்க்க: 2:201,10:63-64 & 14:27) எனவே மரணத்திற்குப் பின் தொடர்கின்ற நிலையான சந்தோஷங்களைக் கொண்ட வாழ்க்கையை ஒப்பிடும் போது, இவ்வுலகில் மனோ இச்சையின் படி வாழ்ந்து கிடைக்கின்ற சுகமோ சொற்பமே ஆகும்” என்பதை விளக்கிவிடுங்கள்.

3:186

۞ لَتُبۡلَوُنَّ فِيٓ أَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡ وَلَتَسۡمَعُنَّ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَمِنَ ٱلَّذِينَ أَشۡرَكُوٓاْ أَذٗى كَثِيرٗاۚ وَإِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ذَٰلِكَ مِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ ١٨٦

3:186. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! உங்களுடைய மோதல்கள் இத்தகையவர்களோடு தான் இருக்கும். இந்த மோதல்களில் பொருட்சேதமும் உயிர் சேதமும் ஏற்பட்டு பல வகையில் சோதனைகளுக்கு ஆளாவீர்கள். அது மட்டுமின்றி வேதமுடையவர்களும் மனம் போன போக்கில் வாழும் முஷ்ரிக்குகளும் உங்களுக்கு எதிராக பல வகையில் தொந்தரவு செய்வார்கள். மன வருத்தம் ஏற்படும்படி பேசியும் வருவார்கள். இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் நீங்கள் மன உறுதியுடன் உங்கள் செயல் திட்டங்களில் நிலைத்திருந்து செயல்படுங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை எப்போதும் பேணி செயலாற்றுங்கள். இதுவே உங்களுடைய உயர் இலட்சியங்களுக்கு உறுதுணையாக விளங்கும்.

வேதமுடையவர்கள் தங்களிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதாக ஆதாரமற்ற விஷயங்களைக் கூறி வருகிறார்கள்.(3:183) அவர்களிடம் அல்லாஹ் உண்மையிலேயே வாங்கிக் கொண்ட உறுதிமொழி என்ன என்பதை தெளிவுபடுத்தி விடுங்கள்.

3:187

وَإِذۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَتُبَيِّنُنَّهُۥ لِلنَّاسِ وَلَا تَكۡتُمُونَهُۥ فَنَبَذُوهُ وَرَآءَ ظُهُورِهِمۡ وَٱشۡتَرَوۡاْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَبِئۡسَ مَا يَشۡتَرُونَ١٨٧

3:187. அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களின்படி தாமும் வாழ்ந்து, அவற்றை அனைத்து தரப்பு மக்களிடமும் தெளிவாக எடுத்துரைத்து, அனைவரும் சிறப்பாக வாழ வழி செய்ய வேண்டும் (மேலும் பார்க்க 2:83) இறை வழிகாட்டுதல்களில் எதையும் மக்களிடம் மறைக்கக் கூடாது. இதுதான் அவர்களிடம் அல்லாஹ் வாங்கிக்கொண்ட உறுதிமொழி ஆகும். ஆனால் அவர்களோ அந்த உறுதி மொழிகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு, சொற்ப ஆதாயங்களுக்காக சொந்தமாக கற்பனைக் கதைகளை உருவாக்கி, மக்களிடம் சொல்லி அவர்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் சற்றே சிந்தித்து செயல்பட்டிருந்தால்,அவர்கள் செய்து வருவது எவ்வளவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து இருப்பார்கள்.

3:188

لَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَفۡرَحُونَ بِمَآ أَتَواْ وَّيُحِبُّونَ أَن يُحۡمَدُواْ بِمَا لَمۡ يَفۡعَلُواْ فَلَا تَحۡسَبَنَّهُم بِمَفَازَةٖ مِّنَ ٱلۡعَذَابِۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ١٨٨

3:188. வேதமுடையவர்களில் உள்ள மதகுருமார்கள், தாம் செய்து வரும் அற்பமான செயல்களைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். அதாவது பயனற்ற விஷயங்களை மக்களிடம் போதித்து வருகிறார்கள். இவ்வாறு செய்வது மிகப்பெரிய சாதனை என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் போதிப்பதை அவர்களே பின்பற்றுவதும் இல்லை. மற்றவர்கள் தம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல்களுக்கு அல்லாஹ்விடம் கிடைக்கும் வேதனையிலிருந்து ஒருபோதும் அவர்கள் தப்பிக்க முடியாது என்பதை அவர்களிடம் தெளிவாக எடுத்துரையுங்கள்.

உண்மையில் பாராட்டும் புகழும் உலக மக்களின் நன்மைக்காக ஒருவர் செய்யும் செயற்கரிய செயலைக் கொண்டுதான் கிடைக்கும். ஆனால் அவர்களோ மக்களை ஏமாற்றி, பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின் றனர். அதேபோல் அல்லாஹ்வையும் ஏமாற்றி விடலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். ஆனால் அல்லாஹ் நிர்ணயித்த வேதனைகளிலிருந்து தப்பிக்கவே முடியாது.

3:189

وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ١٨٩

3:189. ஏனெனில் வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன. எனவே எல்லா படைப்புகளும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள அளவுகோலின் படியே இயங்கிவரும்.

இந்த விதிமுறைகளின் படி அவரவர் செய்து வரும் செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் தான் பெற்றுக்கொள்ள முடியும். (10:4) (34:3-4) (53:31) கண்மூடித் தனமான மூடநம்பிக்கையில் வாழ்பவர்களுக்கு இந்த உண்மை எல்லாம் புரியாது. எதையும் சிந்தித்து செயல்படுவோருக்குத் தான் இந்த உண்மை புரியும். நல்ல அறிவாற்றல் உடைய இவர்கள்,

3:190

إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ١٩٠

3:190. உலகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதையும், அதன் நோக்கத்தைப் பற்றியும் ஆராய்வார்கள். மாறி மாறி வரும் இரவு பகலைக் கொண்டு இந்த பூமி எவ்வாறு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதையும், அதைக் கொண்டுதான் உயிரினங்கள் உயிர் வாழமுடிகிறது என்பதையும் ஆராய்ந்து அறிவார்கள்.அவர்களால் மட்டுமே அல்லாஹ்வின் அளவற்ற வல்லமையைப் பற்றிய அத்தாட்சிகளை அறிந்துக் கொள்ள முடியும்..

3:191

ٱلَّذِينَ يَذۡكُرُونَ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِهِمۡ

3:191. இப்படி அறிவாற்றல்களுடன் வாழும் இவர்கள், தம் வாழ்நாள் முழுவதும் அல்லும் பகலும் நின்ற நிலையிலும் அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும் போதும், அல்லாஹ் நிர்ணயித்துள்ள சட்ட திட்டங்களைப் பற்றி ஆராய்வார்கள்.

وَيَتَفَكَّرُونَ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ رَبَّنَا مَا خَلَقۡتَ هَٰذَا بَٰطِلٗا سُبۡحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ ١٩١

அகிலங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றியும், அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றியும் ஆராய்வார்கள். இப்படி தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இவர்கள், “இறைவா! நீ எவற்றையும் வீணாகப் படைக்கவில்லை. இப்படிப்பட்ட எண்ணங்களுக் கெல்லாம் அப்பாற்பட்டவன் தான் நீ. எங்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக” என்று தம் எண்ணங்களை இறைவனிடம் சமர்ப்பிப்பார்கள்.

அதாவது ஆராய்ச்சிகளின் மூலம் கிடைக்கும் கண்டுபிடிப்புகள் யாவும் உலக மக்கள் பலன் பெறும் வகையில் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகவே நீ படைத்துள்ளாய். அவற்றைத் தவறாக அழிவுக்காகப் பயன்படுத்தினால், அதனால் ஏற்படும் விபரீத விளைவுளைப் பற்றியும் எண்ணி அஞ்சுகிறோம். அதே சமயம் இறைவனின் படைப்புகளை ஆராய்ச்சி செய்யாமல், அவற்றிலிருந்து கிடைக்கக் கூடிய பலன்களைப் பெறாமல் அழிந்து போன சமுதாயங்கள் ஏராளம். இப்படி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இயலாத சமுதாயமாக நீ எங்களை ஆக்கிவிடாதே. இதுவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று நடக்கும் உலக மேதைகளின் எண்ணங்களும் செயல்பாடுகளும் ஆகும்.

3:192

رَبَّنَآ إِنَّكَ مَن تُدۡخِلِ ٱلنَّارَ فَقَدۡ أَخۡزَيۡتَهُۥۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٖ١٩٢

3:192. “எங்கள் இறைவனே! எந்தச் சமுதாயம் உன் நியதிப்படி நரக வேதனைக்கு ஆளாகுமோ, அது நிச்சயமாக இழிவான வாழ்விற்குத் தள்ளப்படும். மேலும் இவ்வாறு அக்கிரமம் செய்யும் சமுதாயத்தை அவ்வேதனைகளிலிருந்து மீட்க உதவி செய்வோர் எவரும் இல்லை” என்பதாக அவர்களின் பிரார்த்தனை இருக்கும்.

அதாவது அல்லாஹ்வின் படைப்புகளை ஆராய்ச்சி செய்யாமல் அவற்றிலிருந்து கிடைக்கக் கூடிய பலன்களைப் பெறும் பாக்கியத்தை இழந்து நிற்கும் சமுதாய மக்களின் செயல்கள் எல்லாம் வீணாகிவிடும். அதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாகி இழிவுக்குள்ளாவார்கள். மேலும் அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடையான அறிவாற்றலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் இருப்பது மிகப் பெரிய அக்கிரமச் செயலாகும். எனவே இப்படி இழிவாக வாழும் சமுதாயங்களைப் பற்றி யார் அக்கறை காட்டுவார்கள்?

3:193

رَّبَّنَآ إِنَّنَا سَمِعۡنَا مُنَادِيٗا يُنَادِي لِلۡإِيمَٰنِ أَنۡ ءَامِنُواْ بِرَبِّكُمۡ فَـَٔامَنَّاۚ

3:193. “உங்கள் இறைவனின் வழிகாட்டுதலை ஏற்று அனைவரும் செயல்பட முன்வாருங்கள். அதையே உங்கள் வாழ்வின் இலட்சியமாக்கிக் கொள்ளுங்கள்” என்று அழைப்பவரின் அழைப்பை ஏற்று, “நாங்கள் மனித குலத்தின் சிறப்பான வாழ்க்கைக்கு மிகச் சரியான பாதையைக் காட்டும் இறைவழிகாட்டுதலை அறிவுப்பூர்வமாகவும் உறுதியோடும் ஏற்றுக்கொண் டோம்” என்பார்கள்.

رَبَّنَا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرۡ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلۡأَبۡرَارِ١٩٣

அதைத் தொடர்ந்து இவர்களின் எண்ணங்கள் இவ்வாறு இருக்கும். “இறைவா! எங்களால் ஏற்படும் சிறு சிறு தவறுகளின் பாதிப்புகளிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக. தீய செயல்களிலிருந்து நாங்கள் விலகியிருக்க எங்களுக்கு வழிகாட்டுவாயாக. தம் வாழ்வின் இலட்சியத்தில் வெற்றி கண்டவர்களின் வரிசையில் இடம் பெறவே நாங்கள் நாடுகிறோம். எனவே எங்களை அப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டவர்களோடு இணைத்து வைப்பாயாக” என்பதாக இருக்கும்.

3:194

رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخۡزِنَا يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ إِنَّكَ لَا تُخۡلِفُ ٱلۡمِيعَادَ ١٩٤

3:194. “அகிலங்கள் அனைத்தையும் பரிபாலிக்கும் இறைவனே! உன் வழிகாட்டுதலைப் பின்பற்றி நடந்தால் வளம் மிக்க சந்தோஷங்கள் நிறைந்த வாழ்வு கிடைக்கும் என்று உன் தூதர்கள் மூலமாக நீ வாக்களித்த படி எங்களுக்கும் தந்தருள்வாயாக. மேலும் இழிவு தரும் வேதனைகளை விட்டு எங்களைக் காத்தருள்வாயாக. நீ அளித்த வாக்குறுதிகளில் எப்போதும் மாறு செய்வதில்லை. ஒவ்வொரு செயலுக்கும் உரிய விளைவுகள் தோற்றத்திற்கு வந்துதான் ஆகும் என்பதை நாங்கள் அறிகிறோம்” என்பதாக அவர்களின் பிரார்த்தனை இருக்கும்.

3:195

فَٱسۡتَجَابَ لَهُمۡ رَبُّهُمۡ أَنِّي لَآ أُضِيعُ عَمَلَ عَٰمِلٖ مِّنكُم مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰۖ بَعۡضُكُم مِّنۢ بَعۡضٖۖ

3:195. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி விடப்பட்ட அழைப்பை ஏற்று உயர்ந்த நோக்கங்களுடன் செயல்படும் போது, மறு புறத்திலிருந்து அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டம் அவர்களுடைய எண்ணங்களுக்கும் செயல்பாட்டிற்கும் அங்கீகாரம் அளித்து விடுகிறது. உங்களில் ஆணோ பெண்ணோ எவர் ஒருவர் இறை வழிகாட்டுதலின் படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்கிறாரோ, அவருடைய செயல்கள் வீண் போகாது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஆண் பெண் என்ற பேதம் இருப்பதில்லை. ஏனெனில் நீங்கள் அனைவரும் சமுதாயத்தின் அங்கத்தினர்கள் தாம். எனவே மனித குலத்தில் ஆண் பெண் என்று பிரித்துப் பார்க்க முடியாது.

فَٱلَّذِينَ هَاجَرُواْ وَأُخۡرِجُواْ مِن دِيَٰرِهِمۡ وَأُوذُواْ فِي سَبِيلِي وَقَٰتَلُواْ وَقُتِلُواْ لَأُكَفِّرَنَّ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ

இதையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இறைவழிகாட்டுதலின் படி ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்தும் போது, நீங்கள் பல துன்பங்களையும் துயரங்களையும் சந்திக்க நேரிடலாம். உங்களுக்குப் பிடித்தமான செல்வங்களை விட்டுவிட வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். வீடு வாசல்களை இழக்கவும் நேரிடும். கடினமான வேதனைக்கும் ஆளாகலாம். கலகம், கலவரம், போர் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். அதில் உங்கள் உயிருக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

وَلَأُدۡخِلَنَّهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ ثَوَابٗا مِّنۡ عِندِ ٱللَّهِۚ وَٱللَّهُ عِندَهُۥ حُسۡنُ ٱلثَّوَابِ١٩٥

ஆக யார் இவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு மன உறுதியுடன் இறை வழிகாட்டுதலின் படி தொடர்ந்து செயல்படுகிறார்களோ, அந்தச் சமுதா யத்தில் தான் சீர்கேடுகள் நீங்கும் என்று வாக்கு அளிக்கப்படுகிறது. (பார்க்க 2:155-156, 2:214) இப்படி உருவாகும் சமுதாயத்தில் தாராளமான பொருளாதார வசதிகள் வற்றாத ஜீவநதியாய் பெருகி வரும். அதனால் அங்கு சந்தோஷங்கள் பூத்துக் குலுங்கும். இதுவே அவர்கள் செய்து வந்த நற்செயல்களுக்கு அல்லாஹ் வின் புறத்திலிருந்து கிடைக்கும் சன்மானங்களாகும். இப்படிப்பட்ட சன்மானங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்வதன் மூலமே கிடைக்கும் என்பது திண்ணம்.

3:196

لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ ٱلَّذِينَ كَفَرُواْ فِي ٱلۡبِلَٰدِ١٩٦

3:196. இறை வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் தற்சமயம் உல்லாசமாக வாழ்ந்துக் கொண்டிருப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். அவர்களுடைய சந்தோஷங்கள் தற்காலிகமே ஆகும்.

3:197

مَتَٰعٞ قَلِيلٞ ثُمَّ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمِهَادُ ١٩٧

3:197. அப்படியும் அவர்களுக்குக் கிடைக்கின்ற சந்தோஷங்கள் மிகவும் அற்பமானவை தான். அதன்பின் அவர்களுடைய வாழ்வில் பிரச்சனைகளும் இன்னல்களும் தான் ஏற்படும். அது மிகவும் கெட்டதாகும்.

3:198

لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا نُزُلٗا مِّنۡ عِندِ ٱللَّهِۗ وَمَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ لِّلۡأَبۡرَارِ١٩٨

3:198. இதற்கு மாறாக எந்தச் சமுதாயம் இறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி உயர் பண்புகளுடன் ஆக்கப்பூர்வமான நற்செயல்களைத் தொடர்ந்து செய்கின்றதோ, அது சந்தோஷங்கள் நிறைந்த சமுதாயமாகத் திகழும். மேலும் தாராளப் பொருளாதார வசதிகள், வற்றாத ஜீவநதிபோல் கிடைத்து, அது சுவனத்திற்கு ஒப்பானதாகத் திகழும். உயர் பதவி வகிப்பவர்களுக்கு மதிப்பு மரியாதையுடன் கூடிய விருந்து உபசரிப்பு கிடைப்பது போல், அந்த சமுதாயத்த வர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் மேலும் இந்த சான்றோர்களுக்கு அல்லாஹ்விடம் கிடைக்கும் நற்பேறுகள் எவ்வளவு பெரிய சந்தோஷங்களைத் தரும் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்படி ஒரு சமுதாயத்தில் துன்பமோ துயரமோ நெருங்குமா?

3:199

وَإِنَّ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَمَن يُؤۡمِنُ بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡكُمۡ وَمَآ أُنزِلَ إِلَيۡهِمۡ خَٰشِعِينَ لِلَّهِ لَا يَشۡتَرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡۗ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ١٩٩

3:199. அல்லாஹ் உருவாக்கியுள்ள இத்தகைய சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு உலகிலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான ஒன்றாகும். எனவே வேதமுடையவர்களுக்கும் இத்தகைய சுவன வாழ்வு கிடைக்கும். ஏனெனில் இவ்வேதமும் அவர்களிடமுள்ள வேதத்தின் தொடர்ச்சியான ஒன்று தான் என்பதை ஏற்று அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவார்கள். அற்ப ஆதாயங்களுக்காக இறைவழி காட்டுதலைப் புறந்தள்ளி விடமாட் டார்கள். எனவே இத்தகையோருக்கும் அவரவர்களுடைய செயல்களுக் குரிய பலன்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிச்சயமாக கிடைக்கும். ஆக ஒவ்வொருவருடைய செயல்களையும் கணக்கெடுப்பதில் அல்லாஹ், மிகத் துரிதமானவன் என்பதை மறவாதீர்கள்.

3:200

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱصۡبِرُواْ وَصَابِرُواْ وَرَابِطُواْ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ٢٠٠

3:200. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! ஒரு சமுதாயத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்லவேண்டும் என்றால், உங்களுள் விடாமுயற்சியும் இறைக் கொள்கையில் நிலைத்திருப்பதும், ஒருவருக்கொருவர் இணைந்து ஒளிவுமறைவு இன்றி தோழமை உணர்வுடன் ஒருமித்த மனதோடு செயல்படுவதும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடப்பதும் மிகவும் முக்கியமானவையாகும். அப்போது தான் உங்கள் இலட்சியத்தில் வெற்றி பெறுவீர்கள்.