۞ அல் குர்ஆன் தெளிவுரைஅல்-குர்ஆன் – மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வழிகாட்டுதலும் தீர்வும்
English
44

அத் துஃகான்

புகை மண்டலம்

Dhukhan

Surah 44  ·  59 வசனங்கள்

الدخان
۞

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)

44:1

حمٓ١

44:1. பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய முஹம்மது நபி மூலம் அருளப்பட்ட வேதமிது.

44:2

وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ٢

44:2. விவரமாகத் தொகுக்கப்பட்டுள்ள இவ்வேதம் மிகவும் தெளிவானது என்பதற்கும் இதுவே சான்றாக விளங்குகின்றது.

44:3

إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةٖ مُّبَٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ٣

44:3. உலகமே இருள் சூழ்ந்த நிலையில் தவித்திருக்கும் போது, பெரும் பாக்கியங்களுடன் ரமஜான் மாதத்தில் இந்தக் குர்ஆன் அருளப்பட ஆரம்பமானது. (பார்க்க 2:185) மனிதனின் தவறான செயல்களின் விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து எச்சரிக்கை செய்வது இறைவனின் நடைமுறைச் சட்டமாகும். அது போலவே இவ்வேதமும் முன்னெச்சரிக்கை செய்கிறது.

44:4

فِيهَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِيمٍ٤

44:4. இவ்வேதத்தில் இறைவனின் ஒவ்வொரு செயல்திட்டத்தைப் பற்றியும், அதன் நோக்கங்களைப் பற்றியும் தனித்தனியே பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. (97:4)

44:5

أَمۡرٗا مِّنۡ عِندِنَآۚ إِنَّا كُنَّا مُرۡسِلِينَ٥

44:5. இவ்வேதம் இறைவன் புறத்திலிருந்து, “வஹீ எனும் இறைவழிகாட்டுதல்” என்கின்ற செயல் திட்டத்தின் படி அருளப்படுகிறது. ஆரம்பம் முதலே இறைத் தூதர்களை அனுப்பி இத்தகைய வழிகாட்டுதல் அருளப்பட்டு வந்துள்ளது.

44:6

رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ٦

44:6. இவை யாவும் இறைவனின் அருட்கொடைகளாகும். அனைத்தையும் கேட்கும் வல்லமையும் அறிந்துக் கொள்ளும் பேராற்றலும் இறைவனுக்கு உண்டு. எனவே ஒவ்வொரு மனித செயலின் விளைவுகளும் அவன் நிர்ணயித்த விதிமுறைகளின் படியே ஏற்பட்டு வரும்.

44:7

رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ٧

44:7. அகிலங்களையும் பூமியையும் இவற்றிற்கிடையே உள்ளவற்றையும் படைத்ததோடு, அவற்றின் ஒவ்வொன்றும் தம் இறுதி இலக்கை சென்றடையும் வரை தேவையான அனைத்து பரிபாலன ஏற்பாடுகளையும் செய்பவன் ஏக இறைவனே. அதன்படி மனிதனின் உடல் வளர்ச்சி மட்டுமின்றி ‘ரூஹ்’வின் வளர்ச்சிக்கும் இறைவழிகாட்டுதல் அவசியமாகிறது. இதைப் பற்றி மனிதன் சிந்தித்துப் பார்த்தால் அவனுக்கு உண்மை விளங்கி விடும்.

44:8

لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ٨

44:8. அவனையன்றி அகிலத்தில் வேறு யாருடைய அதிகாரமும் எங்கும் செயல் படுவதில்லை. எனவே அவனுடைய செயல்திட்டங்களே நிலையாக ஜீவித்து செயல்படக் கூடியவை. அவன் உங்களைப் படைத்து பரிபாலித்து வருவது போல, உங்களுடைய மூதாதையர்களையும் படைத்து பரிபாலித்த இறைவனும் அவனே.

44:9

بَلۡ هُمۡ فِي شَكّٖ يَلۡعَبُونَ٩

44:9. இவையாவும் உயர் இலட்சியங்களுடன் கூடிய செயல் திட்டங்களைப் பற்றியதாகும். ஆனால் உலக மக்களுக்கு இன்னமும் இவற்றில் சந்தேகம் தான் உள்ளது. எனவே அவற்றை அவர்கள் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த அளவிற்கு தெளிவான ஆதாரங்களுடன் அவர்களுக்கு உண்மைகளை எடுத்துரைத்த போதும், அவர்கள் இதைப் பற்றி சிந்திக்காமல் இறைவழிகாட்டுதலின் பக்கம் விடப்படும் அழைப்பை எதிர்ப்பதில் முன்னொடியாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நேரவிருக்கும் பேராபத்தை அவர்கள் எதிர் பார்த்து இருக்கட்டும்.

44:10

فَٱرۡتَقِبۡ يَوۡمَ تَأۡتِي ٱلسَّمَآءُ بِدُخَانٖ مُّبِينٖ١٠

44:10. அப்படியொரு கலவரம் வெடிக்கும் காலக் கட்டத்தில் எங்கு நோக்கினும் புழுதிகள் பறந்து கொண்டிருக்கும். வானமே புகை மண்டலமாகத் தோன்றும். அந்த பேரழிவுகளின் பயத்தால் அவர்களுடைய கண்களே இருண்டு விடும்.

44:11

يَغۡشَى ٱلنَّاسَۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٞ١١

44:11. வேதனை மிக்க அந்த புழுதிகள் அவர்களை நாலாப் புறமும் சூழ்ந்துக் கொள்ளும். அவை யாவும் அவர்களுக்கு நோவினைத் தரும் வேதனைகளாக இருக்கும்.

44:12

رَّبَّنَا ٱكۡشِفۡ عَنَّا ٱلۡعَذَابَ إِنَّا مُؤۡمِنُونَ١٢

44:12. அப்போது அவர்கள், “எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டு இந்த வேதனைகளை நீக்குவாயாக. நிச்சயமாக நாங்கள் உன் வழிகாட்டுதலை ஏற்று நடக்கும் மூஃமின்களாக ஆகிவிடுவோம்” என்று மன்றாடுவார்கள்.

44:13

أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ١٣

44:13. இத்தகைய வேதனைகள் அவர்களை சூழ்ந்து கொள்ளும் என்று ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்த இறைத்தூதர் அவர்களிடம் வரவில்லையா? அவரை ஏற்காமல் இப்போது திருந்துவதாகச் சொல்வதில் என்ன பயன்? (பார்க்க 17:15)

44:14

ثُمَّ تَوَلَّوۡاْ عَنۡهُ وَقَالُواْ مُعَلَّمٞ مَّجۡنُونٌ١٤

44:14. அவர்கள் அவருடைய அறிவுரைகளைப் பொருட்படுத்தவே இல்லை. யாரோ தன்னை பேரறிஞன் என்று சொல்லிக் கொண்டு ஏதோ உளறிக் கொண்டிருக்கிறார் என்றல்லவா அவர்கள் கூறினார்கள்?

44:15

إِنَّا كَاشِفُواْ ٱلۡعَذَابِ قَلِيلًاۚ إِنَّكُمۡ عَآئِدُونَ١٥

44:15. இப்போது அவர்களுடைய வேதனைகளை எப்படி குறைக்க முடியும்? அப்படியே சிறிது காலத்திற்காக அவ்வேதனைகளைக் குறைத்தாலும் அவர்கள் திருந்துவதாக இல்லை.

44:16

يَوۡمَ نَبۡطِشُ ٱلۡبَطۡشَةَ ٱلۡكُبۡرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ١٦

44:16. எனவே மனித செயல்களின் விளைவுகள் என்ற பிடி மிகவும் கடுமையானது என்றும், அதன்படி நீங்கள் செய்து வரும் தீய செயல்களுக்கு ஏற்ற தண்டனை கிடைப்பது உறுதி என்றும் அவர்களுக்கு அறிவிக்கவில்லையா?

இந்த உண்மைகளை வரலாற்று ஆதாரங்களுடனும் பலமுறை கூறி இருக்கிறோம். அவற்றை மீண்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

44:17

۞وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَهُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَهُمۡ رَسُولٞ كَرِيمٌ١٧

44:17. நடந்த உண்மை என்னவென்றால் இவர்களுக்கு முன் ஃபிர்அவ்னுடைய சமூகத்தாரும் தீய வழியில் செயல் பட்டதால் அவர்களுக்கு சிறு சிறு வேதனைகள் வந்து கொண்டிருந்தன. அவற்றை சரிசெய்ய கண்ணியமான முறையில் இறைத்தூதர் ஒப்புக் கொண்டார் (பார்க்க 7:130-133 &44:48-49)

44:18

أَنۡ أَدُّوٓاْ إِلَيَّ عِبَادَ ٱللَّهِۖ إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ١٨

44:18. அவர் ஃபிர்அவ்னிடம் அல்லாஹ்வின் அடியார்களாக இருக்கின்ற இஸ்ரவேலர்களை விடுதலை அளித்து தன்னோடு அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டார். (பார்க்க 20:47) மேலும் அவர், “இதனால் நாம் அனைவருக்கும் நன்மையே ஏற்படும். என்னை நம்புங்கள். நான் இறைவனின் சார்பாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கேட்டுக் கொண்டார்.

44:19

وَأَن لَّا تَعۡلُواْ عَلَى ٱللَّهِۖ إِنِّيٓ ءَاتِيكُم بِسُلۡطَٰنٖ مُّبِينٖ١٩

44:19. மேலும் அவர், “நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்த தெளிவான சான்றுகளை எடுத்துரைத்துள்ளேன். அவற்றை புறந்தள்ளி விடாதீர்கள்” என்றும் கேட்டுக் கொண்டார்.

44:20

وَإِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُمۡ أَن تَرۡجُمُونِ٢٠

44:20. “இதற்காக நீங்கள் என்னை கல்லால் அடித்து கொல்லப் போவதாக பயமுறுத்துகிறீர்கள். ஆனால் நம் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்விடமே பாதுகாப்பு தேடிக்கொள்கிறேன்” என்று கூறினார்.

44:21

وَإِن لَّمۡ تُؤۡمِنُواْ لِي فَٱعۡتَزِلُونِ٢١

44:21. மேலும் அவர், “என்னுடைய அறிவுரைகளை நீங்கள் கேட்க முன்வரவில்லை என்றால், என்னை விட்டு நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு என்னை கொல்லப் போவதாக கூறுவது சரியா?” என்று கேட்டார்.

44:22

فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوۡمٞ مُّجۡرِمُونَ٢٢

44:22. ஆனால் அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருந்தார்கள். எனவே அவர், “இறைவா! உன் அறிவுரைகளை மதிக்காமல் அவர்கள் அக்கிரமங்களை செய்து வருகிறார்களே!” என்று பிரார்த்தித்தார்.

44:23

فَأَسۡرِ بِعِبَادِي لَيۡلًا إِنَّكُم مُّتَّبَعُونَ٢٣

44:23. எனவே இறை வழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல் வீரர்களை இரவோடு இரவாக அழைத்துச் செல்லும்படி இறைச் செய்தி வந்தது. இதைப் பற்றி கேள்விப்பட்டு உங்களை ஃபிர்அவ்னியர்கள் பின்தொடர்வார்கள்.

44:24

وَٱتۡرُكِ ٱلۡبَحۡرَ رَهۡوًاۖ إِنَّهُمۡ جُندٞ مُّغۡرَقُونَ٢٤

44:24. மேலும் நீங்கள் செல்லும் வழியில் குறுக்கே நைல் நதி வரும். அதன் குறுக்கே ஒரு பாலத்தை கட்டுங்கள். (பார்க்க 20:77) அதன் வழியாக கடந்து சென்று விடுங்கள். உங்களை பின்தொடரும் பகைவர்கள் அந்த நதியில் விழுந்து மூழ்கிவிடுவார்கள். (விளக்கத்திற்குப் பார்க்க 7:136)

44:25

كَمۡ تَرَكُواْ مِن جَنَّٰتٖ وَعُيُونٖ٢٥

44:25. ஃபிர்அவ்ன் மன்னனிடமும் அவர்களுடைய சமூகத்தாரிடமும் எத்தனையோ தோட்டங்களும் நீர் ஊற்றுகளும் இருந்தன. அவற்றை எல்லாம் அவர்கள் இழக்க நேர்ந்தது.

44:26

وَزُرُوعٖ وَمَقَامٖ كَرِيمٖ٢٦

44:26. அது மட்டுமின்றி அவர்களிடம் விசாலமான விளை நிலங்களும் உயரமான மாளிகைகளும் இருந்தன. அவையும் அவர்களிடமிருந்து பறிபோயின.

44:27

وَنَعۡمَةٖ كَانُواْ فِيهَا فَٰكِهِينَ٢٧

44:27. கூடவே அவர்களுடைய சுகமான வாழ்வும் சந்தோஷங்களும் படிப்படியாகப் பறிபோயிற்று.

44:28

كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا قَوۡمًا ءَاخَرِينَ٢٨

44:28. அவர்களுடைய அழிவுக்குப் பின் அந்தச் செல்வங்கள் யாவற்றிற்கும் வேறு சமுதாயத்தவர்கள் வாரிசுதாரர்களாக ஆகிவிட்டனர்.

44:29

فَمَا بَكَتۡ عَلَيۡهِمُ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ وَمَا كَانُواْ مُنظَرِينَ٢٩

44:29. ஆகவே அவர்களுக்காக வானமோ பூமியோ அழவும் இல்லை. அவர்களால் அந்த அழிவிலிருந்து தப்பிக்க முடியவுமில்லை.

44:30

وَلَقَدۡ نَجَّيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مِنَ ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ٣٠

44:30. ஆனால் இழிவு தரும் பேரழிவிலிருந்து இஸ்ரவேலர்கள் தப்பித்துக் கொண்டனர். அவர்கள் இறைவழிகாட்டுதலின் படி நாட்டை விட்டு வெளியேறியதால் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது.

44:31

مِن فِرۡعَوۡنَۚ إِنَّهُۥ كَانَ عَالِيٗا مِّنَ ٱلۡمُسۡرِفِينَ٣١

44:31. அதுமட்டுமின்றி கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடமிருந்தும் விடுதலை கிடைத்தது. அவன் மிகவும் ஆணவத்துடன் அநியாய அக்கிரமமான முறையில் தான் அட்சி செய்து வந்தான்.

44:32

وَلَقَدِ ٱخۡتَرۡنَٰهُمۡ عَلَىٰ عِلۡمٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ٣٢

44:32. மேலும் இஸ்ரவேலர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி செயல்பட்டு வந்ததால் அக்காலத்தில் உலகில் வாழ்ந்த மற்ற சமூகத்தவர்களைவிட சிறந்த மாமேதைகளாக விளங்கினார்கள்.

44:33

وَءَاتَيۡنَٰهُم مِّنَ ٱلۡأٓيَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٞاْ مُّبِينٌ٣٣

44:33. அதாவது அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைத்த தெளிவான வழிகாட்டுதல்கள் அவர்களை உயர்நிலைக்கு அழைத்து சென்றன.

44:34

إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ٣٤

44:34. ஆனால் இப்போது மக்காவாசிகளாகிய இவர்கள், அவை எல்லாம் உண்மை இல்லை என்கிறார்கள்.

44:35

إِنۡ هِيَ إِلَّا مَوۡتَتُنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُنشَرِينَ٣٥

44:35. மேலும் அவர்கள், “மனித வாழ்க்கை என்பது இவ்வுலக வாழ்வோடு முடிந்து விடுகிறது. அதன் பிறகு மறுவாழ்வு என்பது கிடையாது. எனவே நாங்கள் மீண்டும் எழுப்பப்பட மாட்டோம்” என்கிறார்கள்.

44:36

فَأۡتُواْ بِ‍َٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ٣٦

44:36. அது மட்டுமின்றி மீண்டும் எழுப்பப்டுவது உண்மை என்றால் முந்தைய காலத்தில் இறந்து போன எங்கள் மூதாதையர்களை எழுப்பி காட்டுங்கள் என்கிறார்கள்.

44:37

أَهُمۡ خَيۡرٌ أَمۡ قَوۡمُ تُبَّعٖ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ أَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ٣٧

44:37. இத்தகைய விதண்டா வாதம் செய்கின்ற நீங்கள் செல்வத்திலும் ஆட்பலத்திலும் பலசாலிகளா அல்லது உங்களுக்கு முன் அழிந்து போனார்களே அந்த முன்னோர்கள் பலசாலிகளா என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களைவிட பன்மடங்கு பலசாலிகளாக இருந்த ‘ஆது’, ‘சமூது’ போன்ற சமூகத்தவர்களே இறைவன் விதித்த “மனித செயல்களின் விளைவுகள்” என்ற சட்டத்தின் பிடியில் சிக்கி அழிந்து போனார்கள். நீங்கள் எம்மாத்திரம்?

44:38

وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ٣٨

44:38. அகிலங்களையும் பூமியையும் இவற்றிற்கு இடையே உள்ளவற்றையும் வீண் விளையாட்டிற்காகப் படைத்திருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? ஒருபோதும் அதற்காக படைக்கவில்லை. சீரிய செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் அவை படைக்கப்பட்டன.

44:39

مَا خَلَقۡنَٰهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ٣٩

44:39. இறைவனின் அந்த திட்டத்தின்படி மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சரியான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த உண்மைகளை அறியாமல் அவர்கள் தம் மனம் போன போக்கில் எதிர் மறையாக செயல்பட்டு வருகிறார்கள்.

44:40

إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ مِيقَٰتُهُمۡ أَجۡمَعِينَ٤٠

44:40. எனவே அவர்கள் செய்து வரும் தீய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வந்தே தீரும். அந்த விளைவுகள் நிர்ணயிக்கப்பட்ட கால தவணைக்குப் பின் ஏற்படும். (பார்க்க 16:61)

44:41

يَوۡمَ لَا يُغۡنِي مَوۡلًى عَن مَّوۡلٗى شَيۡ‍ٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ٤١

44:41. அப்படியொரு கால கட்டத்தில் யாரும் யாருக்கும் எவ்வித உதவியும் செய்ய இயலாது. ஒவ்வொருவருக்கும் தம் பாவச் சுமைகளின் வேதனையிலிருந்து தப்பிப்பது எப்படி என்ற கவலையே மிகைத்திருக்கும்.

44:42

إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ٤٢

44:42. ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோரின் நிலை இவ்வாறு இருக்காது. அல்லாஹ்வின் செயல்திட்டமே அனைத்தையும் மிகைப்பதாகவும் கருணைமிக்கதாகவும் உள்ளது. (பார்க்க 21:102&27:89)

44:43

إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ٤٣

44:43. எனவே இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டவர்களின் நிலைமை கள்ளிச் செடியின் கனியை மென்று தின்பவனின் நிலைப் போன்று அருவெறுப்பாக இருக்கும். (பார்க்க 17:60 & 37:62-65)

44:44

طَعَامُ ٱلۡأَثِيمِ٤٤

44:44. இதுவே பாவச் செயல்களை செய்வோர்களின் நிலைமை.

44:45

كَٱلۡمُهۡلِ يَغۡلِي فِي ٱلۡبُطُونِ٤٥

44:45. அவர்களுடைய வயிறுகள் உருக்கப்பட்ட செம்பு போல் எரிய ஆரம்பிக்கும்.

44:46

كَغَلۡيِ ٱلۡحَمِيمِ٤٦

44:46. வெந்நீர் கொதிப்பதைப் போல் அவர்களுக்கு வயிற்றெரிச்சல் இருக்கும்.

44:47

خُذُوهُ فَٱعۡتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلۡجَحِيمِ٤٧

44:47. அவர்களை இழுத்து வேதனைத் தரும் பாதாளத்தில் தள்ளிவிடுவார்கள்.

44:48

ثُمَّ صُبُّواْ فَوۡقَ رَأۡسِهِۦ مِنۡ عَذَابِ ٱلۡحَمِيمِ٤٨

44:48. “அவர்களுடைய தலைக்கு மேல் கொதி நீரை ஊற்றுங்கள். தலைக்கணம் பிடித்து ஆடிய ஆட்டங்கள் யாவும் தணிந்துவிடும்” என்று கூறப்படும்.

44:49

ذُقۡ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡكَرِيمُ٤٩

44:49. “இப்போது நீ சுவைக்கும் வேதனைகள் எவ்வாறு உள்ளன? உன்னுடைய வல்லமையும் உயர் அந்தஸ்தும் எங்கே ?” என்று கேட்கப்படும்.

44:50

إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمۡتَرُونَ٥٠

44:50. “இத்தகைய வேதனைகளை சுவைக்க வேண்டி வராது என்ற மிதப்பில் இருந்தீர்களே அந்த வேதனைகள் இவை தான்” என்று அவர்களிடம் கூறப்படும்.

44:51

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٖ٥١

44:51. ஆனால் இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்கள் இதற்கு நேர் மாற்றமாக அச்சமற்று இருப்பார்கள்.

44:52

فِي جَنَّٰتٖ وَعُيُونٖ٥٢

44:52. அவர்கள் வாழும் இடம் சுவனத்து சோலைகளும் நீர் ஊற்றுகளும் நிறைந்தவையாக இருக்கும்.

44:53

يَلۡبَسُونَ مِن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَقَٰبِلِينَ٥٣

44:53. மேலும் அவர்களுக்கு உலகளாவிய ஆடை ஆபரணங்கள் கிடைத்து வரும். அவர்கள் சந்தோஷத்தில் ஒருவரையொருவர் பார்த்துப் பூரித்துப் போவார்கள்.

44:54

كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ٥٤

44:54. இப்படியாக அங்கு கண்களைக் குளிர வைக்கும் உற்ற தோழர்களும் வந்து இணைவார்கள்.

44:55

يَدۡعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ٥٥

44:55. அவர்கள் அச்சமற்று வாழ்வார்கள். அங்கு அவர்கள் கேட்கும் எல்லா விதமான கனி வகைகளும் பழரசங்களும் கிடைக்கும்.

44:56

لَا يَذُوقُونَ فِيهَا ٱلۡمَوۡتَ إِلَّا ٱلۡمَوۡتَةَ ٱلۡأُولَىٰۖ وَوَقَىٰهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ٥٦

44:56. மேலும் அவர்களுக்கு நிலையான வாழ்வு கிடைத்து வரும். இதற்கு முன் உலக வாழ்வில் அவர்களுக்குக் ஏற்பட்ட மரணத்தைப் போன்று இனியும் மரணம் ஏற்படாது. அவர்கள் நரக வேதனைகளிலிருந்து மீண்டுக் கொள்வார்கள்.

44:57

فَضۡلٗا مِّن رَّبِّكَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ٥٧

44:57. இவை யாவும் உமது இறைவனின் “வழிகாட்டுதல்” என்ற அருட்கொடைகளாகும். இப்படியொரு வாழ்வு கிடைப்பது மிகப் பெரிய பாக்கியமாகும் அல்லவா?

44:58

فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ٥٨

44:58. நீங்கள் நல்லறிவுரைகளைப் பெறுவதற்காகவே நீங்கள் பேசும் மொழியிலேயே எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இவற்றை தொகுத்து தந்துள்ளோம்.

44:59

فَٱرۡتَقِبۡ إِنَّهُم مُّرۡتَقِبُونَ٥٩

44:59. ஆகவே நீங்கள் இறைவனின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு நற்பலன்களை எதிர்பாருங்கள். அவர்களும் தம் வழக்கப்படி செயல்பட்டு அவற்றின் விளைவுகளை எதிர் பார்க்கட்டும்.

சிந்தனையாளர்களே! மேற்சொன்ன நரக வாழ்க்கை மற்றும் சுவர்க்க வாழ்க்கை இவ்வுலகில் இறைவழிகாட்டுதலின் படி ஆட்சி நடைபெறும் போதும் அவரவர் செயலுக்கேற்ப கிடைத்து வரும். மரணத்திற்குப் பின்பும் இதே நிலை நீடிக்கும். இவ்வுலகில் அத்தகைய ஆட்சி இல்லை என்றால் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வில் கிடைப்பது சர்வ நிச்சயம்.