۞ அல் குர்ஆன் தெளிவுரைஅல்-குர்ஆன் – மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வழிகாட்டுதலும் தீர்வும்
English
45

அல் ஜாஸியா

மண்டியிட்டு கெஞ்சுதல்

Jathiya

Surah 45  ·  37 வசனங்கள்

الجاثية
۞

بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)

45:1

حمٓ١

45:1. பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய முஹம்மது நபி மூலம் அருளப்பட்ட வேதமிது.

45:2

تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ٢

45:2. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்தும் சகல வல்லமையும், ஞானமும் மிக்க அல்லாஹ்விடமிருந்து அருளப்படும் வேதமிது.

45:3

إِنَّ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّلۡمُؤۡمِنِينَ٣

45:3. அகிலங்கள் மற்றும் பூமியின் படைப்புகளில் அல்லாஹ்வின் சர்வ வல்லமையின் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவை சிந்தித்து செயலாற்றும் மூஃமின்களுக்கு கிடைக்கும். அவற்றை அவலர்கள் ஆய்வு செய்து மனித வள மேம்பாட்டிற்காகப் பயன்படுத்துவார்கள். (பார்கக் 3:190-191)

45:4

وَفِي خَلۡقِكُمۡ وَمَا يَبُثُّ مِن دَآبَّةٍ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ٤

45:4. அதுமட்டுமின்றி உங்களைப் படைத்திருப்பதிலும், எண்ணற்ற ஜீவராசிகளைப் உலகம் முழவதிலும் பரவலாகப் படைத்திருப்பதிலும் அல்லாஹ்வின் வல்லமையின் சான்றுகள் பல கிடைக்கும். அவை யாவும் மனிதனின் சிறப்பான வாழ்விற்காகவே படைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்துக் கொள்வீர்கள். (பார்க்க 2:29)

45:5

وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن رِّزۡقٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ٥

45:5. மேலும் மாறிமாறி வரும் இரவுப் பகலைப் பற்றி சிந்தித்துணர்வார்கள். வானத்திலிருந்து மழை பொழிய வைத்து, அதைக் கொண்டு வறண்டு கிடக்கும் பூமியை செழிப்பாக்கி, அதிலிருந்து பல்வேறு உணவு வகைகள் கிடைத்து வருவதைப் பற்றியும் சிந்தித்துணர்வார்கள் இதற்காக உலகம் முழுவதிலும் காற்றை மாறி மாறி வீசச் செய்வதையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைப் பற்றி சிந்தித்துணரும் மக்களுக்கு அல்லாஹ்வின் சர்வ வல்லமையின் சான்றுகள் பல கிடைக்கும்.

45:6

تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۖ فَبِأَيِّ حَدِيثِۢ بَعۡدَ ٱللَّهِ وَءَايَٰتِهِۦ يُؤۡمِنُونَ٦

45:6. மனிதவள மேம்பாட்டிற்காக அல்லாஹ்வின் படைப்புகள் உறுதுணையாக இருப்பது போல, மனித சமுதாயங்களும் ஒழுக்க மாண்புகளுடன் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே இறைவழிகாட்டுதல் அடங்கிய இவ்வேதம் அளிக்கப் படுகிறது. இந்த அளவுக்கு தெளிவாக எடுத்துரைத்த போதும், அவர்கள் இவற்றை விட்டுவிட்டு வேறு எந்த பேச்சைக் (ஹதீஸை) கேட்டு ஈமான் கொள்ளப் போகிறார்கள்?

ஆக உலகப் படைப்புகளின் ஆய்வுகளை மேற்கொண்டும் இறை வழிகாட்டுதலை பின்பற்றிக் கொண்டும் சிறப்பாக வாழ்வதற்குப் பதிலாக (பார்க்க 39:67) வெறும் கற்பனை உலகத்தைப் பற்றிய ஹதீஸ்களைப் பேசிப் பேசியே மதிமயங்கிக் கிடக்க விரும்புகிறீர்களா?

45:7

وَيۡلٞ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمٖ٧

45:7. மனித வளத்தை குன்றச் செய்யும் வீணான பேச்சைக் கேட்டு காலத்தை வீணடித்தால், அவர்கள் அழிவு எனும் பாதாளத்திற்குள் செல்ல ஆயத்தமாகிக் கொள்ளட்டும்.

45:8

يَسۡمَعُ ءَايَٰتِ ٱللَّهِ تُتۡلَىٰ عَلَيۡهِ ثُمَّ يُصِرُّ مُسۡتَكۡبِرٗا كَأَن لَّمۡ يَسۡمَعۡهَاۖ فَبَشِّرۡهُ بِعَذَابٍ أَلِيمٖ٨

45:8. இத்தகையவர்களிடம் இறைவனின் வழிகாட்டுதலை எடுத்துரைத்தால், அவற்றை கேட்காதது போல் ஆணவத்தோடு சென்றுவிடுவார்கள். இத்தகையவர்களுக்கு பேரழிவு காத்துக்கிடக்கிறது என்று அறிவித்து விடுங்கள்.

45:9

وَإِذَا عَلِمَ مِنۡ ءَايَٰتِنَا شَيۡ‍ًٔا ٱتَّخَذَهَا هُزُوًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ٩

45:9. அப்படியும் இறைவழிகாட்டுதலில் சிலவற்றை அவர்கள் அறிந்துக் கொண்டாலும், அவற்றை வைத்துக் கொண்டு பரிகசித்துக் கொண்டிருப்பார்கள். அத்தகையோர் இழிவு தரும் வேதனையில் சிக்கிக் கொள்வார்கள். அதலிருந்து வெளிவரும் எந்த வழியும் இருக்காது.

45:10

مِّن وَرَآئِهِمۡ جَهَنَّمُۖ وَلَا يُغۡنِي عَنۡهُم مَّا كَسَبُواْ شَيۡ‍ٔٗا

45:10. உலகில் பலதரப்பட்ட மக்கள் துயரங்களால் அவதிப்பட்டு வருவதை காண்கிறார்கள். அவர்களுடைய வாழ்வு நரகமாக மாறியுள்ளதையும் காண்கிறார்கள். ஆனால் அவர்கள் அதன் காரணத்தை அறிந்து அதற்கேற்ற நடவடிக்கை எடுக்காமல், உலகத்திற்கு எந்த பலனும் அளிக்காத செயல்களைச் செய்து வருகிறார்கள். (👉18:103-106)

وَلَا مَا ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ١٠

அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு கற்பனை தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டு, வழிபட்டு வருபவர்களின் நிலைமையும் அதுவே ஆகும். இத்தகையவர்களுக்கு வேதனை மிக்க நரகம் காத்திருக்கிறது.

45:11

هَٰذَا هُدٗىۖ وَٱلَّذِينَ كَفَرُواْ بِ‍َٔايَٰتِ رَبِّهِمۡ لَهُمۡ عَذَابٞ مِّن رِّجۡزٍ أَلِيمٌ١١

45:11. ஆனால் இந்தக் குர்ஆன் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சிறந்த வழியை காட்டுகிறது. எனவே இதன் வழிகாட்டுதலை ஏற்காமல் தவறான வழியில் செல்பவர்கள் நோவினைத் தரும் நரக வேதனைகளை அனுபவிக்கப் போவது தவிர்க்க முடியாததாக ஆவிடுகிறது

இத்தகைய நரக வேதனைகளிலிருந்து மீள வழிமுறைகள் உள்ளன. அவையே உலக படைப்புகளின் ஆய்வுகளைச் செய்வதோடு இறை வழிகாட்டுதலின் படி மனிதவள மேம்பாட்டிற்காக அவற்றைப் பயன்படுத்த முன்வர வேண்டும். இதற்காக

45:12

۞ٱللَّهُ ٱلَّذِي سَخَّرَ لَكُمُ ٱلۡبَحۡرَ لِتَجۡرِيَ ٱلۡفُلۡكُ فِيهِ بِأَمۡرِهِۦ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ١٢

45:12. கடல்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் படைத்தது அல்லாஹ் தான். அவற்றில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் படி கப்பல்களைத் தயாரித்து பயன்படுத்திக் கொள்கிறீர்கள். இவற்றைக் கொண்டு கடல் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்வின் அளவற்ற அருட்கொடைகளை தேடிக் கொள்ளவும் செய்கிறீர்கள். இவற்றையெல்லாம் அல்லாஹ் காட்டிய வழியில் உலக நன்மைக்காகப் பயன்படுத்தி அவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் (👉 16:14.)

45:13

وَسَخَّرَ لَكُم مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا مِّنۡهُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ١٣

45:13. இப்படியாக அல்லாஹ்வின் செயல்திட்டத்தின் படி வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும்படியாக படைக்கப்பட்டுள்ளன. ஆனால் சிந்தித்து செயலாற்றும் மக்களுக்குத் தான் இவற்றின் அருமை தெரியும்.

வெறும் மூடநம்பிக்கையுடன் கற்பனை உலகில் வாழ்பவர்களுக்கு உலக படைப்புகளின் அருமை தெரிய வாய்ப்பில்லை. இவர்களைப் பொறுத்த வரையில் அல்லாஹ்வும் மலக்குகளும் பல்லக்கில் வந்து அவர்களுடைய எல்லா காரியங்களையும் முடித்து வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் இருப்பார்கள். (👉 2:210 & 6:116)

45:14

قُل لِّلَّذِينَ ءَامَنُواْ يَغۡفِرُواْ لِلَّذِينَ لَا يَرۡجُونَ أَيَّامَ ٱللَّهِ لِيَجۡزِيَ قَوۡمَۢا بِمَا كَانُواْ يَكۡسِبُونَ١٤

45:14. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று செயல் படுபவர்களே, அல்லாஹ் நிர்ணயித்த மனித செயல்களுக்கேற்ற விளைவுகள் ஏற்படும் காலம் வரும் என்பதை ஏற்காதவர்களிடம், “நீங்கள் இறைச் செயல்திட்டங்களின் படி செயல்பட்டு வாருங்கள். ஒவ்வொரு சமுதாயத்தவருக்கும் அவரவர் செய்யும் செயலுக்கேற்ற பலன்களே அல்லாஹ்வின் நியதிப்படி கிடைக்கும்” என்பதை எடுத்துரையுங்கள்.

45:15

مَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ أَسَآءَ فَعَلَيۡهَاۖ ثُمَّ إِلَىٰ رَبِّكُمۡ تُرۡجَعُونَ١٥

45:15. தனி நபரோ அல்லது சமுதாயமோ ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்து வந்தால் அதன் பலன்கள் அவர்களுக்கே கிடைக்கும். மாறாக தவறான வழியில் சென்றால் அதன் பாதிப்புகள் அவர்களையே வந்தடையும். ஆக உலகில் மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்லும். எனவே நிர்ணயித்த விதிமுறைகளின் படியே பலன்களும் விளைவுகளும் ஏற்படும் என்பதையும் அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.

45:16

وَلَقَدۡ ءَاتَيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلۡنَٰهُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ١٦

45:16. இதே அடிப்படையில் தான் இஸ்ரவேலர்களுக்கும் வேத ஞானங்கள் அளிக்கப்பட்டன. அவற்றை கடைப்பிடித்ததால் இறைவனின் நியதிப்படி அவர்களுக்கு ஆட்சி அதிகாரங்கள் கிடைத்தன. மேலும் அவர்களிடம் பல நபிமார்கள் வந்தார்கள். அவர்களுக்கு பரிசுத்தமான உணவு வகைகளும் கிடைத்து வந்தன. இப்படியாக அவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த மற்ற சமூகத்தவர்களை விட மேன்மைப் பெற்றவர்களாக இருந்தார்கள்.

45:17

وَءَاتَيۡنَٰهُم بَيِّنَٰتٖ مِّنَ ٱلۡأَمۡرِۖ فَمَا ٱخۡتَلَفُوٓاْ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۚ

45:17. அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதத்தில் இறைவனின் செயல்திட்டங்களைப் பற்றிய குறிப்புகள் தெளிவாக தொகுக்கப்பட்டு இருந்தன. அவ்வாறு தெளிவான ஞானங்கள் வந்த பின்பும், அவர்கள் காலப் போக்கில் போட்டி பொறாமையின் காரணமாக மார்க்கத்தில் பிளவை ஏற்படுத்திக் கொண்டனர்.

إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ١٧

திருக்குர்ஆனின் அடிப்படையில் மண்டும் ஆட்சியமைப்பு நிலைபெறும் கால கட்டத்தில் இந்த வேற்றுமை பகைகளுக்கு சரியான தீர்ப்புக் கிடைத்துவிடும். அல்லது கியாம நாளில் தீர்ப்பு அளிக்கப்படும்.

45:18

ثُمَّ جَعَلۡنَٰكَ عَلَىٰ شَرِيعَةٖ مِّنَ ٱلۡأَمۡرِ فَٱتَّبِعۡهَا وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ١٨

45:18. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நேரான வழியை வஹீ மூலம் காட்டியுள்ளோம். (👉42:13) எனவே நீங்கள் அதை பின்பற்றுங்கள். இறைவழிகாட்டுதலின் உண்மை நிலையை அறியாத மக்களின் விருப்பங்களுக்கு இணங்கி செயல்படாதீர்கள். (👉 6:106)

45:19

إِنَّهُمۡ لَن يُغۡنُواْ عَنكَ مِنَ ٱللَّهِ شَيۡ‍ٔٗاۚ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۖ وَٱللَّهُ وَلِيُّ ٱلۡمُتَّقِينَ١٩

45:19. அல்லாஹ்வின் செயல் திட்டங்களுக்கு எதிராக அவர்களால் எதுவும் தீங்கிழைக்க முடியாது. (👉 3:111) இப்போது ஒருரையொருவர் உமக்கு எதிராக கைகோர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இறை வழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்களுக்கு ஆதரவாக அல்லாஹ்வின் துணை எப்போதும் இருக்கும்.

45:20

هَٰذَا بَصَٰٓئِرُ لِلنَّاسِ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ٢٠

45:20. காரணம் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் உலக மக்களின் அறிவுக் கண்ணை திறக்கக் கூடியதாக இருக்கின்றன. மேலும் இவற்றை முழு மனதுடன் ஏற்று செயல்படுபவர்களுக்கு தலைசிறந்த வாழ்க்கைக்கு வேண்டிய மிகச் சரியான வழிகாட்டியாகவும், இறைவனின் அருட்கொடையாகவும் இருக்கின்றன.

45:21

أَمۡ حَسِبَ ٱلَّذِينَ ٱجۡتَرَحُواْ ٱلسَّيِّ‍َٔاتِ أَن نَّجۡعَلَهُمۡ كَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَوَآءٗ مَّحۡيَاهُمۡ وَمَمَاتُهُمۡۚ سَآءَ مَا يَحۡكُمُونَ٢١

45:21. ஏனெனில் சமுதாயத்தை கெடுக்கும் வகையில் செயல்படுபவர்கள், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபவர்களுக்கு சமமானவர்கள் என எண்ணிக் கொள்கிறார்களா? எவ்வாறு உயிருடன் இருப்பவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்களோ, அவ்வாறே இவ்விரு பிரிவினரும் சமமாக மாட்டார்கள். இவ்விரு பிரிவினரும் சமம் என எண்ணிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.

45:22

وَخَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّ وَلِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۢ بِمَا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ٢٢

45:22. அகிலங்களையும் பூமியில் உள்ளவற்றையும் ஆக்கப்பூவர்மான நலத் திட்டங்களுக்காகவே அல்லாஹ் படைத்துள்ளான் என்ற உண்மை அவர்களுக்கு தெரியாது. அல்லாஹ்வின் அத்திட்டத்தின்படி மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சரியான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் தான் இவற்றை செயல்படுத்தி உள்ளான். எனவே அவரவர் செயல்களுக்கு அவர்களே பொறுப்பாளியாக ஆகிறார்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்த அநியாயமும் ஏற்படுவதில்லை.

சிந்தித்து செயலாற்றுவதற்காக மனிதனுக்கு பகுத்தறிவு அளிக்கப்பட்டு இருக்கும் போது, இறைவழிகாட்டுதலுக்கு என்ன அவசியம் இருக்கிறது என்று கேட்கிறார்கள். ஆனால் இறைவழிகாட்டுதல் இன்றி வாழும் மக்களிடம் ஆசைகளும் மனோ இச்சைகளும் மிகைத்து நிற்கிறதே! அறிவு, மனோ இச்சைக்கு அடிமையாகி இருக்கிறதே! இது அவர்களுக்குப் புரியவில்லையே!

45:23

أَفَرَءَيۡتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ وَأَضَلَّهُ ٱللَّهُ عَلَىٰ عِلۡمٖ وَخَتَمَ عَلَىٰ سَمۡعِهِۦ وَقَلۡبِهِۦ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِۦ غِشَٰوَةٗ

45:23. தன்னுடைய மனோ இச்சைக்கு அடிபணிந்து செயல்படுவர்களை நீங்கள் பார்த்தீர்களா? தம் மனதில் எழும் ஆசைகளின்படி தான் அவர்கள் செயல்படுவார்கள். அவற்றின் பாதிப்புகளைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். அந்தப் பாதிப்புகள் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள். அவர்களுக்கு பகுத்தறிவு இருந்தும் அவர்களுடைய நிலைமை என்னவாக ஆகிவிடுகிறது என்பதை கவனித்தீர்களா? அவர்களுக்கு ஆசைகள் மிகைக்கும் போது, அவர்களுடைய உள்ளங்களும், காதுகளும், பார்வைப் புலன்களும் செயலிழந்து விடுகின்றதே!

فَمَن يَهۡدِيهِ مِنۢ بَعۡدِ ٱللَّهِۚ أَفَلَا تَذَكَّرُونَ٢٣

எனவே எந்த அறிவுரைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்கும் தகுதியே அவர்களிடம் இருப்பதில்லையே! இத்தகையவர்களுக்கு வேறு யாரால் நேர் வழி காட்ட முடியும்? இதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் படி அவர்களிடம் சொல்லுங்கள்.

மேலும் இத்தகைய சமுதாயங்களில் வாழும் மக்கள் தற்காலிக சுகங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்வார்கள். வருங்கால நன்மைக்காகவோ, மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்க்கைக்காவோ எந்த ஏற்பாடுகளையும் செய்ய மாட்டார்கள். அவர்களிடம் இதைப் பற்றி கேட்டால்

45:24

وَقَالُواْ مَا هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا نَمُوتُ وَنَحۡيَا وَمَا يُهۡلِكُنَآ إِلَّا ٱلدَّهۡرُۚ

45:24. “மனித வாழ்க்கை என்பது இவ்வுலகில் வாழ்வதோடு சரி. இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை எதுவும் கிடையாது. ஏதோ குறிப்பிட்ட காலம் வரையில் வாழ்கிறோம். அதன்பின் மரணம் அடைந்து விடுகிறோம். நமக்கு முடிவு காலம் வந்தால் அழிந்து போய்விடுவோம், அவ்வளவுதான்” என்பார்கள்.

وَمَا لَهُم بِذَٰلِكَ مِنۡ عِلۡمٍۖ إِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ٢٤

இவையாவும் தெளிவான ஞானம் இல்லாமல் பேசுகின்ற பேச்சாகும். அவர்கள் பேசுவது வெறும் யூகத்தின் அடிப்படையில் தான்.

45:25

وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ مَّا كَانَ حُجَّتَهُمۡ إِلَّآ أَن قَالُواْ ٱئۡتُواْ بِ‍َٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ٢٥

45:25. மனித வாழ்க்கை என்பது மரணத்திற்குப் பின்பும் தொடர்கின்ற ஒன்று என்று அவர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தால், இதை ஏற்காமல் வீணாக தர்க்கம் செய்கிறார்கள். “உங்களுடைய கூற்று உண்மையென்றால், இறந்து போன எங்களின் மூதாதையர்களை மீண்டும் எழுப்பி, எங்கள் கண் முன் கொண்டுவந்து காட்டுங்கள்” என்கிறார்கள்.

45:26

قُلِ ٱللَّهُ يُحۡيِيكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ

45:26. அவர்களிடம், “மனித வாழ்வும் மரணமும் அல்லாஹ்வின் செயல்திட்டத்தின் படி உருவானவையாகும். அதன்படி நீங்கள் வாழ்கிறீர்கள். அதன் பின் நீங்கள் மரணித்து விடுகிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்வு அத்துடன் முடிந்து விடுவதில்லை.

ثُمَّ يَجۡمَعُكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ٢٦

நீங்கள் அல்லாஹ் நிர்ணயித்த நிலையான விதிமுறைப்படி உங்கள் வாழ்வு தொடர்கிறது. இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்த உண்மை எல்லாம் தெரியாது” என்று அறிவித்து விடுங்கள். (விளக்கத்திற்குப் பார்க்க 6:22-23)

45:27

وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوۡمَئِذٖ يَخۡسَرُ ٱلۡمُبۡطِلُونَ٢٧

45:27. இந்த செயல்திட்டங்கள் யாவும் அகிலங்களையும் பூமியையும் படைத்து அனைத்து அதிகாராங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுத்தப்பட்டவை ஆகும். எனவே மக்கள் செய்து வரும் நற்செயல்களின் நற்பலன்கள் மற்றும் தீய செயல்களின் தீய விளைவுகள் தோற்றத்திற்கு வரும் காலக்கட்டம் நிர்ணயிக்கப்பட்டது உறுதியே. அப்போது கற்பனை உலகில் வாழ்ந்து வந்தவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதே (பார்க்க 7:8-9)

45:28

وَتَرَىٰ كُلَّ أُمَّةٖ جَاثِيَةٗۚ كُلُّ أُمَّةٖ تُدۡعَىٰٓ إِلَىٰ كِتَٰبِهَا ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ٢٨

45:28. எனவே இறைவனின் இந்த திட்டத்தின்படி தான் உலகிலுள்ள நாடுகளின் நிலைமையும் உருவாகி வரும். கற்பனை உலகில் வாழும் நாடுகள் யாவும் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, முன்னேறிய நாடுகளிடம் மண்டியிட்டு மன்றாடிக் கொண்டிருக்க நேரிடும். ஓவ்வொரு நாட்டினரின் செயல்பாடுகளின் பதிவேடுகளே பேசும். இப்படியாக அவர்களுடைய செயல்கள் என்னவோ அதன்படியே பலன்களும், தீய விளைவுகளும் ஏற்பட்டு வரும்.

45:29

هَٰذَا كِتَٰبُنَا يَنطِقُ عَلَيۡكُم بِٱلۡحَقِّۚ إِنَّا كُنَّا نَسۡتَنسِخُ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ٢٩

45:29. இதுவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிலைநிறுத்தப்பட்ட விதிமுறை ஆகும். எனவே நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்களோ அவ்வாறே பலன்களும் விளைவுகளும் ஏற்படும். இதில் எந்த மாற்றமும் ஏற்படாது. இப்படியாக உங்களுடைய ஒவ்வொரு செயலும் பதிவாகி வருகிறது. அவை ஒருபோதும் அழியாது.

45:30

فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُدۡخِلُهُمۡ رَبُّهُمۡ فِي رَحۡمَتِهِۦۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡمُبِينُ٣٠

45:30. எனவே இறைவழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்மான நற்செயல்களை செய்துவரும் சமுதாயங்களுக்கு இறைவன் தன் அருட்கொடைகளை அளவின்றி கொடுக்கிறான். இத்தகைய வளமான வாழ்க்கை பெறுவது பெரும் பாக்கியமாகும் அல்லவா?

45:31

وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَفَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَٱسۡتَكۡبَرۡتُمۡ وَكُنتُمۡ قَوۡمٗا مُّجۡرِمِينَ٣١

45:31. இதற்கு மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்க மறுக்கும் சமுதாயங்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கும். அவர்களுடைய இழி நிலைக்கு அவர்களே காரணம் ஆவார்கள். ஏனெனில் அவர்களிடம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை எடுத்துரைத்த போது, அவர்கள் ஆணவத்துடன் அவற்றைப் புறக்கணித்து வந்ததோடு தீய செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளாகவே இருந்தார்கள்.

45:32

وَإِذَا قِيلَ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱلسَّاعَةُ لَا رَيۡبَ فِيهَا قُلۡتُم مَّا نَدۡرِي مَا ٱلسَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنّٗا وَمَا نَحۡنُ بِمُسۡتَيۡقِنِينَ٣٢

45:32. அப்போது இத்தகைய விளைவுகள் ஏற்படும் காலம் வருவது உறுதி என்றும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதே என்றும் கூறவில்லையா? இதில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று உங்களிடம் சொன்னோமே. ஆனால் நீங்கள் அதைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றீர்கள். எங்களுடைய கூற்றை வெறும் கற்பனையே என்று எண்ணி அவற்றை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை என்று கூறினீர்களே.

45:33

وَبَدَا لَهُمۡ سَيِّ‍َٔاتُ مَا عَمِلُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ٣٣

45:33. எனவே நீங்கள் செய்து வந்த தீய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் காலம் வந்து விட்டது. எதை நீங்கள் பரிகாசம் செய்து வந்தீர்களோ, அதுவே உங்களை சூழ்ந்துக் கொண்டது.

45:34

وَقِيلَ ٱلۡيَوۡمَ نَنسَىٰكُمۡ كَمَا نَسِيتُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَا وَمَأۡوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ٣٤

45:34. இத்தகைய விளைவுகளை சந்திக்கும் கால கட்டத்தைப் பற்றி நீங்கள் அலட்சியமாக இருந்து விட்டது போலவே இன்றைய கட்டத்தில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையைப் பற்றி நாம் அலட்சியப் படுத்துவோம். எனவே இனி நீங்கள் தங்கப் போகும் இடம் வேதனை அளிக்கக் கூடிய இடமாகத் தான் இருக்கும். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றுவோர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

45:35

ذَٰلِكُم بِأَنَّكُمُ ٱتَّخَذۡتُمۡ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗا وَغَرَّتۡكُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ فَٱلۡيَوۡمَ لَا يُخۡرَجُونَ مِنۡهَا وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ٣٥

45:35. இதுவே அல்லாஹ்வின் முன்னெச்சரிக்கையை ஏளனமாக எடுத்துக் கொண்டு உலக வாழ்க்கையின் தற்காலி சுக போகத்தில் மயங்கிக் கிடந்தவர்களுக்கு ஏற்படும் மோசமான நிலைமையாகும். இத்தகைய நிலையிலிருந்து அவர்களால் ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அவர்களுக்கு பாவ மன்னிப்பும் கிடைக்காது.

45:36

فَلِلَّهِ ٱلۡحَمۡدُ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَرَبِّ ٱلۡأَرۡضِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ٣٦

45:36. இத்தகைய எழுச்சி மிகு கால கட்டங்களில் அல்லாஹ்வின் மாபெரும் வளர்ச்சித் திட்டங்களே செயல்பட்டு வரும். அவற்றை ஒட்டு மொத்த சமுதாய மக்களின் நலனைப் பேணிக் காக்கவே பயன்படுத்தப்படும். இப்படியாக இறைவனின் செயல்திட்டங்கள் யாவும் ஆயிரமாயிரம் போற்றுதலுக்கு உரியவையாகத் திகழும்.

45:37

وَلَهُ ٱلۡكِبۡرِيَآءُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ٣٧

45:37. அப்படியொரு காலக் கட்டத்தில் அகிலங்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களே செயல்பட்டு வருகின்றன என்பதையும், ஒவ்வொரு படைப்பும் அல்லாஹ்வின் வல்லமையையே பறைசாற்றுகிறது என்பதையும் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். மேலும் அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையிலானவை என்பதையும் ஏற்றுக் கொள்வார்கள்.

அத்தியாயம் : 46 – பகுதி:26 - சூர : ஆஃகாஃப் (மணல் மேடுகள்)