۞ அல் குர்ஆன் தெளிவுரைஅல்-குர்ஆன் – மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வழிகாட்டுதலும் தீர்வும்
English
55

அர் ரஹ்மான்

அருட்கொடையாளன்.

Rahman

Surah 55  ·  78 வசனங்கள்

الرحمن
۞

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)

55:1

ٱلرَّحۡمَٰنُ١

55:1. யாதொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காத அருட்கொடையாளனாக இருக்கும் ஏக இறைவனிடமிருந்து வரும் வழிகாட்டுதல் இது.

55:2

عَلَّمَ ٱلۡقُرۡءَانَ٢

55:2. மனிதனுக்கு வேண்டிய வாழ்வாதாரம் மற்றும் ஒழுக்க மாண்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இந்தக் குர்ஆன் மூலம் கற்றுத் தரப்படுகின்றன.

55:3

خَلَقَ ٱلۡإِنسَٰنَ٣

55:3. மனிதனைப் படைத்த ஏக இறைவனிடமிருந்து அருளப்படும் வழிகாட்டுதல் இது.

55:4

عَلَّمَهُ ٱلۡبَيَانَ٤

55:4. மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகள் அனைத்தையும் மிகத் தெளிவான முறையில் எடுத்துரைக்கும் வேதமிது.

55:5

ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ٥

55:5. மேலும் சூரியனையும் சந்திரனையும் தத்தம் வட்டரையில் மிகச் சரியாக கணக்கிட்டு சுற்றிவரச் செய்த இறைவனின் வழிகாட்டுதலாகும்.

55:6

وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ٦

55:6. கிளைகள் இல்லாத செடிகொடிகளும், கிளைகள் அடங்கிய மரங்களும், யாருடைய கட்டளைக்கு கட்டுப்பட்டு செயல்படுகின்றனவோ, அந்த ஏக இறைவனிடமிருந்து அருளப்படும் வேதமிது.

55:7

وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ٧

55:7. வானத்தை விதானமாகவும் அதிலுள்ள ஒவ்வொன்றையும் சரியான அளவுகோலுடன் சமச் சீர்நிலையில் இயக்கி வைத்த இறைவனிடமிருந்து அருளப்படும் வேதமிது.

அதாவது உலகப் படைப்புகளையும் (Creations) உலகத்தைச் சுற்றியுள்ள தட்பவெப்ப நிலை மற்றும் பல்வேறு சக்திகளையும் (Atmospheric or Cosmic Balance) ஆராய்ந்து பாருங்கள். அவை எல்லாம் தத்தம் வட்டரைக்குள் சரியான அளவுகோலின் படி (Equilibrium - த்தில்) இயங்கி வருகின்றன. (67:3 & 4)

55:8

أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ٨

55:8. இறைவன் படைத்த படைப்புகளில் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் சிறப்பாக இயங்குவது போலவே, மனித உலகிலும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாத சமதர்ம சமுதாயம் உருவாகிட இவ்வழிகாட்டுதல் வலியுறுத்துகிறது.

55:9

وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ٩

55:9. மனித சமுதாயமே! நீ உன் சமுதாயத்தில் பொருளாதாரம் மற்றும் சமூக சமன்பாட்டை (Socio-Economic Balance) ஏற்படுத்துங்கள். அதில் ஒருபோதும் ஏற்றத்தாழ்வோ அநீதியோ ஏற்படாதவாறு சமுதாயத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

55:10

وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ١٠

55:10. இந்தப் பூமியில் விளையும் உணவு வகைகள் யாவும் அனைத்து உயிரினங்களுக்காகவுமே ஆகும். எனவே அவற்றை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய அவற்றை பொது உடமை ஆக்குங்கள்.

55:11

فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ١١

55:11. அந்த உணவு வகைகளில் ருசி மிக்க கனி வகைகளும், பாளையுடைய பேரீத்த மரங்களும் அடங்கும்.

55:12

وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ١٢

55:12. தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், நறுமணம் மிக்க செடிகளும் அவற்றில் அடங்கும்.

எனவே இறைவழிகாட்டுதலின் படி சமச் சீரான சமூக அமைப்பை ஏற்படுத்தவில்லை என்றால் மக்களுள் சுயநலப்போக்கு வளர்ந்து, செல்வங்களை இயன்றவரையில் குவிப்பதிலேயே குறியாய் இருப்பார்கள். இதனால் சமூக சமன்பாடு சீர்குலைந்து நலிந்த மக்கள் அவதிக்குள் ஆவார்கள். எனவேதான் இறைவனின் வழிகாட்டுதலை மக்களுக்கு கற்றுக் கொடுத்து அதன்படி சிறப்பாக வாழ இந்தக் குர்ஆன் வலியுறுத்துகிறது. உலகில் மனிதன் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே எண்ணற்ற அருட்கொடைகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.

55:13

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ١٣

55:13. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பித்து அவனுடைய கட்டளைக்கு இணங்காமல் செயல்பட எண்ணுகிறீர்கள்?

55:14

خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ١٤

55:14. இறைவனின் மாபெரும் செயல்திட்டத்தின் படியே மனித படைப்பின் ஆரம்பம் ஓசைத் தரும் களி மண்ணின் சத்திலிருந்து உருவானது.

55:15

وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ١٥

55:15. மனித படைப்புக்கு முன்பு பூமியில் ஜின் இனமாகிய ஆதிவாசிகள், இந்த பூமி கடிய வெப்பமாக இருந்த போது படைக்கப்பட்டார்கள். (பார்க்க 15:26-27)

55:16

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ١٦

55:16. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் எல்லையற்ற படைப்புகளின் வல்லமைகளில் எவற்றை உங்களால் மறுக்க முடியும்?

55:17

رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ١٧

55:17. இறைவனின் பரிபாலன அமைப்பின்படி, சூரியன் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய இரு திசைகளில் உதித்து, தென்மேற்கு மற்றும் வடமேற்கு ஆகிய இரு திசைகளில் மறைகிறது.

இதனால் தட்பவெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு நான்கு பருவக் காலங்கள் உருவாகின்றன. அதைக் கொண்டு பல்வேறு கனிவகைகளும் பழங்களும் தானிய வகைகளும் பூமியில் விளைகின்றன. (பார்க்க 41:10)

55:18

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ١٨

55:18. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இந்த மாபெரும் பரிபாலன ஏற்பாடுகள் இல்லை என்று உங்ளால் மறுக்க முடியுமா?

55:19

مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ١٩

55:19. பூமியை சுற்றியுள்ள கடல்களைப் பாருங்கள். அவை ஒன்றோடு ஒன்று கலந்தாற் போல் உள்ளன.

55:20

بَيۡنَهُمَا بَرۡزَخٞ لَّا يَبۡغِيَانِ٢٠

55:20. ஆயினும் அவற்றிற்கிடையே திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் ஒரு கடலில் உள்ள தண்ணீர் இன்னொரு வகை நீருடன் கலப்பதில்லை. (பார்க்க 25:53&35:12)

55:21

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٢١

55:21. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய ஏற்பாடுகள் இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?

55:22

يَخۡرُجُ مِنۡهُمَا ٱللُّؤۡلُؤُ وَٱلۡمَرۡجَانُ٢٢

55:22. அவ்விரு கடல்களில் இருந்தும் முத்துக்களையும் பவளங்களையும் எடுக்கிறீர்கள்.

55:23

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٢٣

55:23. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் எந்தெந்த அருட்கொடைகளைப் பொய்ப்பிப்பீர்கள்?

55:24

وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَ‍َٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ٢٤

55:24. அன்றியும் மலைகளைப் போல் உள்ள பெரிய பெரிய கப்பல்கள், அவன் நிர்ணயித்த விதிமுறைகளின் படி தண்ணீரில் மிதந்து வேகமாக நீந்தி செல்கின்றன.

ஆக இவற்றை மனிதன் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்வதில் இறைவன் புறத்திலிருந்து எந்தத் தடையுமில்லை. எனவே

55:25

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٢٥

55:25. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவன் ஏற்படுத்திய நீரில் அத்தகைய தன்மைகள் இருப்பது பொய் என்பீர்களா?

55:26

كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٖ٢٦

55:26. மேலும் பூமியில் உள்ள படைப்புகள் அனைத்திலும் மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே வரும். அவற்றில் எதுவும் இவ்வுலகில் நிலையாக இருந்து செயல்படாது.

உதாரணத்திற்கு வானொலியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் அதை எல்லோரும் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இப்போது அது பயன்பாட்டில் இல்லை. ஆனால் அது தொலைக் காட்சிப் பெட்டிக்குள் இடம் மாறிச் சென்று விட்டது. அது போலவே தொலைப் பேசி, கை பேசி புகை வண்டி, வாகனங்கள், ஆகாய விமானம் என எல்லாமே கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறி மாறி வரும். எதுவுமே நிலையாக தங்காது

55:27

وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ٢٧

55:27. ஆனால் இந்த மாற்றங்களால் இறைவனின் சட்டதிட்டங்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது. ஏனெனில் இறைவன் இயற்றிய சட்டங்கள் யாவும் கண்ணியத்திற்கும் பெருமைக்கும் உரியவையாகவும், நிலையானதாகவும் உள்ளன.

உதாரணத்திற்கு பழைய காலத்தில் ஆபாசங்கள் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் நடந்து வந்தன. இப்போது திரையரங்குகளிலும், தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் ஊடகங்களிலுமா நடைபெறுகின்றன. ஆனால் அவை எங்கு எப்படி நடந்தாலும் இறைவனின் சட்டப்படி மானக்கேடான செயல்கள்தான். அதன் பாதிப்புகள் மிகவும் மோசமாகத் தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் வராது.

55:28

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٢٨

55:28. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் நிலையான வரையறைகள் என்பதெல்லாம் இல்லை என்று மறுக்கப் போகிறீர்களா?

55:29

يَسۡ‍َٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنٖ٢٩

55:29. அகிலத்திலும் பூமியிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளும், மனித இனமும் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இறைவனின் பரிபால அமைப்பைச் சார்ந்தே இருக்கின்றன. மாறி வரும் காலத்திற்கு ஏற்ற வகையில், தேவையான அளவு வாழ்வாதார வசதிகள் கிடைக்கும்படி இறைவன் புறத்திலிருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (பார்க்க 35:15& 14:34)

எடுத்துக்காட்டாக 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மக்கள் தொகை இருநூறு கோடியாக இருந்தது.அப்போதும் அவர்களுடைய தேவைகள் நிறைவேறி வந்தன. இப்போது அதுவே 700 கோடியாக அதிகரித்தும் அவர்களுடைய தேவைகள் நிறைவேறி வருகின்றன. ஒரு கட்டத்தில் அது 7000 கோடியாக இருந்தாலும் அதற்கேற்ற வகையில் தேவைகள் நிறைவேறி வரும்.

55:30

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٣٠

55:30. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய மாபெரும் உணவு தானிய ஏற்பாடுகள் இருப்பதை உங்களால் மறுக்க முடியுமா?

55:31

سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ٣١

55:31. உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களுடைய செயல்களின் கணக்கு வழக்குகள் ஏக இறைவனிடம் உள்ளது.

எனவே அவரவர் செயல்களுக்கேற்ப விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் பிரபஞ்சப் படைப்புகள் செயல்பட்டு வருகின்றன. (45:22)

55:32

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٣٢

55:32. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்று கூறி எப்படி உங்களால் தப்பித்துச் செல்ல முடியும்? காரணம்

55:33

يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ٣٣

55:33. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே! “மனித செயல்களின் விளைவுகள” என்ற சட்டம் அகிலங்கள் மற்றும் பூமி ஆகிய அனைத்திலும் செயல்பட்டு வருகின்றன. அந்த விளைவுகளிலிருந்து தப்பிக்க எண்ணினால், நீங்கள் அகிலத்தை கடந்து செல்லவேண்டி இருக்கும். உங்களுக்கு அதற்குரிய சக்தி இருந்தால் அவற்றைக் கடந்து சென்றுவிடுங்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வின் சட்டத்திலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது.

இந்த வாசகத்தை விஞ்ஞான ரீதியாகப் பார்க்கும் போது, வானத்தை கடந்து செல்லும தகுதி மனிதனுக்கு உண்டு என்று தெரிகிறது. காரணம், “வானங்களைக் கடந்து செல்லும் திறமை மனிதனுக்கு இருந்தால்” என்று சொல்லப்படுவது, மனித ஆற்றல்கள் வளரும் போது, அவனால் செல்ல முடியும் என்பதை குர்ஆன் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. அப்படியே கடந்து செல்வதாக இருந்தாலும், இறைவனின் படைப்புகளைப் பயன்படுத்தியே அவனால் கடந்து செல்ல முடியும். நவீன விஞ்ஞான வளர்ச்சியே இதற்கு ஆதாராம். அப்படியும் கடந்து சென்றாலும் உலகப் படைப்புகளைப் பற்றிய உண்மைகளை மட்டுமே அவனால் அறிந்துக் கொள்ளமுடியும்.

மற்றபடி மனித வாழ்விற்கான வழிகாட்டுதலை அவனால் அங்கிருந்து பெறவே முடியாது. அந்த உண்மைகளை திருக்குர்ஆன் மூலம் மட்டுமே அறிந்துக் கொள்ள முடியும். இதை விட்டு விட்டு தம்மாலும் வானத்தைக் கடந்து சென்று இறை வழிகாட்டுதலைப் பெற முடியும் என்று சொல்லிக் கொள்வதில் உண்மை எதுவும் இருக்காது. அவ்வாறு உங்களால் முடியும் என்றால் அதைக் கொண்டு வாருங்கள். எனவே

55:34

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٣٤

55:34. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவன் ஏற்படுத்தியுள்ள உறுதி வாய்ந்த இந்த சட்டம் எல்லாம் பொய்யென கூறி உங்களால் இறைச் செய்திகளை கொண்டு வர முடியுமா?

55:35

يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ٣٥

55:35. இறைவனின் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படும்போது, உங்களுக்கு நேரவிருக்கும் அழிவின் ஜுவாலைகள் புகை மண்டலங்களைப் போல் சூழ்ந்து கொள்ளுமே! அவ்வேதனைகளிலிருந்து தப்பிக்க உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கமாட்டார்களே!

55:36

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٣٦

55:36 நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் வேதனைகள் எதுவும் வராது என கூறி அலட்சியமாக இருக்கப் போகிறீர்களா?

55:37

فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةٗ كَٱلدِّهَانِ٣٧

55:37. உங்களுடைய அழிவின் போது, நெருப்பின் ஜுவாலைகள் வானமே பிளந்துவிடுவது போல் இருக்கும். அவை பூமியில் விழும்போது, உருக்கிய செம்புவின் பிழம்புகளைப் போல் உங்கள் உடலை சுட்டெரிக்குமே!

நவீன காலத்து யுத்தங்களையே இந்த வாசகம் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

55:38

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٣٨

55:38. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் நியதிப்படி இப்படிப்பட்ட அழிவுகள் வரும்போது அவற்றிலிருந்து தப்பிக்க முடியுமா?

அப்படியே தப்பித்தாலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வில் என்ன செய்வீர்கள்?

55:39

فَيَوۡمَئِذٖ لَّا يُسۡ‍َٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٞ وَلَا جَآنّٞ٣٩

55:39. அப்பொழுது அவர்களுடைய பாவச் செயல்களைப் பற்றிய கேள்வி கணக்கை நகர் புறத்தவனிடமோ நாட்டுப்புறத்தவனிடமோ கேட்கவேண்டிய அவசியமிருக்காது. காரணம் அவரவர் செயல்களின் பதிவேடுகள் அவர்களுடைய கழுத்தில் மாட்டப்பட்டு இருக்கும். (பார்க்க 17:13)

55:40

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٤٠

55:40. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவன் செய்துள்ள இந்த ஏற்பாடுகள் இல்லையெனக் கூறி அலட்சியமாக இருக்கப் போகிறீர்களா? காரணம்

55:41

يُعۡرَفُ ٱلۡمُجۡرِمُونَ بِسِيمَٰهُمۡ فَيُؤۡخَذُ بِٱلنَّوَٰصِي وَٱلۡأَقۡدَامِ٤١

55:41. குற்றவாளிகளின் நிலையை அவர்களுடைய முகங்களே காட்டிக் கொடுத்து விடுமே! அப்போது அவர்களுடைய தலை முடிகளைப் பிடித்து, கால்களில் விலங்கிட்டு இழுத்துச் செல்வார்களே!

55:42

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٤٢

55:42. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தைகைய தண்டனைகள் எதுவும் கிடையாது என கூறி அலட்சியமாக இருக்கப் போகிறீர்களா?

55:43

هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ٤٣

55:43. இதுதான் நரகம் என்றும் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்த குற்றவாளி களுக்காகவே அவை ஆயத்தப்பட்டுள்ளன என்றும் சொல்லப்படுமே!

55:44

يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانٖ٤٤

55:44. அவர்கள் இரு தலைக் கொள்ளியில் சிக்கிய எறும்பைப் போல நரக நெருப்பிற்கும், கொதிக்கும் நீருக்கும் இடையே சுற்றிக் கொண்டிருப்பார்களே!

55:45

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٤٥

55:45. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய கடுமையான தண்டனையைப் பற்றி பயப்பட மாட்டீர்களா? அவையெல்லாம் பொய் என்பீர்களா?

55:46

وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ٤٦

55:46. இறைவன் நிர்ணயித்த மனித செயல்களின் விளைவுகள் என்ற சட்டத்திற்கு அஞ்சி, நற்செயல்களைச் செய்தோர் இவ்வுலகிலும் மரணத்திற்குப் பின் தொடரும் வாழ்விலும் சுவனத்து சோலைகளிலும் இருப்பார்கள்.

55:47

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٤٧

55:47. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய சுவனச் சோலைகள் எல்லாம் இல்லை என மறுத்து அவற்றை இழக்கப் போகிறீர்களா?

55:48

ذَوَاتَآ أَفۡنَانٖ٤٨

55:48. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் பல விதமான வாழ்வாதார வசதிகளும் தாரளமாகக் கிடைக்கும்.

55:49

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٤٩

55:49. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய அருட்கொடைகள் எதுவும் வேண்டாம் என்று கூறுகிறீர்களா?

55:50

فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ٥٠

55:50. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் நீரருவிகள் ஓடிக்கொண்டே இருப்பது போல் வாழ்வாதார வசதிகளில் எந்தக் குறைவும் ஏற்படாது.

55:51

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٥١

55:51. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதால் இத்தகைய வசதிகள் எதுவும் கிடைக்காது என கூறுகிறீர்களா?

55:52

فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ٥٢

55:52. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் கிடைக்கின்ற எல்லா கனிவகைகளிலும் ஜோடி ஜோடியாக இருக்கின்றதே.

55:53

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٥٣

55:53. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இந்த ஏற்பாட்டினைப் பற்றி ஆராயாமல் அவற்றை கண்மூடித்தனமாக பொய்யென கூறுகின்றீர்களா?

55:54

مُتَّكِ‍ِٔينَ عَلَىٰ فُرُشِۢ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ٥٤

55:54. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் பட்டாலான ஆடைகளை அணிந்து சாய்வு நாற்காலிகளில் அமர்ந்த வண்ணம் தம் பணிகளைத் தொடர்வார்கள். அவர்கள் விரும்பும் பழ வகைகள் கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும்.

55:55

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٥٥

55:55. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய அருட்கொடைகளைப் பெற நீங்கள் விரும்ப மாட்டீர்களா?

55:56

فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ٥٦

55:56. அவ்விரு சுவனத்து சோலைகளில் இருக்கும் அலுவலகங்களில் பெண்களும் பணி புரிவார்கள். அவர்கள் பரிசுத்த எண்ணங்கள் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் நகர்புறத்தவரோ நாட்டுப்புறத்தவரோ ஒருபோதும் முறைதவறி நடக்கவே மாட்டார். இத்தகைய பரிசுத்தமான சமூக அமைப்பு உருவாகும்.

55:57

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٥٧

55:57. நகர்புறம மற்றும் நாட்டுப்புற மக்களே! இத்தகைய சமூக அமைப்பு இவ்வுலகிலும் மறு உலகிலும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறுகிறீர்களா?

55:58

كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ٥٨

55:58. அப்பெண்மணிகள் பத்திரைமாற்று தங்கம் போன்றும், பவளத்தைப் போன்றும் பிற ஆடவர்களை கெட்ட எண்ணத்துடன் ஏரெடுத்தும் பார்க்காத பரிசுத்தமானவர்களாக இருப்பார்கள். (மேலும் பார்க்க 37:48, 38:52& 55:72)

55:59

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٥٩

55:59. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இத்தகைய சமூக அமைப்பு இவ்வுலகிலும் மறு உலகிலும் உருவாக வாய்ப்பில்லை என்று கூறுகிறீர்களா?

55:60

هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ٦٠

55:60. இறைவழிகாட்டுதலின் படி ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்களைச் செய்யும் சமுதாயங்களில் தான் இத்தகைய சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். இதைத் தவிர வேறு எந்த வழிமுறைகளாலும் இத்தகைய சுமுகமான சூழ்நிலையை ஒருபோதும் உருவாக்கவே முடியாது.

55:61

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٦١

55:61. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இந்த சவாலை ஏற்று அவனுடைய வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டு இத்தகைய சமுதாயத்தை உருவாக்கிக் காட்ட முடியுமா?

இத்தகைய சமூக அமைப்பு இவ்வுலகில் மட்டும் கிடைக்கும். மரணத்திற்குப் பின் கிடைக்காது என்றோ மரணத்திற்குப் பின்பு தான் கிடைக்கும் இங்கு கிடைக்க வாய்ப்பில்லை என்றோ நினைப்பது தவறாகும்.

55:62

وَمِن دُونِهِمَا جَنَّتَانِ٦٢

55:62. இத்தகைய சுவனத்து சோலைகள் இவ்வுலகிலும் மறு உலகிலும் கிடைக்கும். இது உறுதி.

55:63

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٦٣

55:63. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! திரைக்கு மறைவாக இருக்கும் இத்தகைய சுவனத்து சோலைகள் யாவும் பொய்யென்று கூறுகிறீர்களா?

55:64

مُدۡهَآمَّتَانِ٦٤

55:64. அவ்விரு சுவனத்து சோலைகளும் பசுமை நிறைந்ததாய் காணப்படும்.

55:65

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٦٥

55:65. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய ஏற்பாடுகள் எதுவும் இருக்காது என்று கூறுகிறீர்களா?

55:66

فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ٦٦

55:66. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் வாழ்வாதார நீரூற்றுகள் பொங்கிக் கொண்டே இருக்கும்.

55:67

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٦٧

55:67. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இத்தகைய நீரூற்றுகள் எதுவும் இருக்காது என மறுக்கிறீர்களா?

55:68

فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ٦٨

55:68. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் பல்வேறு கனிவகைகளும், பேரிச்சையும், மாதுளையும் கிடைக்கும்.

55:69

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٦٩

55:69. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் இத்தகைய கனி வகைகள் எதுவும் இல்லை என்று மறுக்க முடியுமா?

உலகில் பொழியும் மழை நீரை தக்க முறையில் தேக்க வைத்து, நதி நீரை சமமான முறையில் பங்கிட்டு வந்தால் மட்டுமே மேற்சொன்ன நீரூற்றுகளும் பசுமை நிறைந்த சோலைகளும் உருவாகும். இதற்கு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் உழைப்பும் அவசியம். அப்போது பிரச்சனையற்ற சமுதாயம் உருவெடுக்கும் போது அங்கு சந்தோஷங்கள் நிறைந்து இருக்கும். அங்கு பிறக்கும் குழந்தைகளும் அழகாக இருக்கும். எனவே

55:70

فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ٧٠

55:70. அவ்விரு சுவனத்து சோலைகளிலும் அழகானவர்களும் நற்பண்புள்ளவர்களும் இருப்பார்கள்.

55:71

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٧١

55:71. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் வழிகாட்டுதலின் படி செயல் பட்டால் இத்தகைய ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாகாது என்று கூறுகிறீர்களா?

55:72

حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ٧٢

55:72. அங்கு வாழும் பெண்கள் அழகானவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அழகிய பண்புள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

55:73

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٧٣

55:73. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இத்தகைய ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாக வாய்ப்பில்லை என்று கூறுகிறீர்களா?

55:74

لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ٧٤

55:74. எனவே அங்குள்ள பெண்களை நகர்புறத்தாரோ நாட்டுபறத்தாரோ தகாத முறையில தீண்டுவதற்கு வாய்ப்பே இராது.

அதாவது உண்மையான குர்ஆனிய சமூக அமைப்பில் சமுதாய நலப்பணிகளில் பெண்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள் (பார்க்க 33:35) ஆனால் தகாக உறவு எதுவும் இராது.

55:75

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٧٥

55:75 நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் வழிகாட்டுதலின்படி இத்தகைய ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க முடியாது என்பீர்களா?

55:76

مُتَّكِ‍ِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ٧٦

55:76. மேலும் அவர்கள் பசுமையான இரத்தனங்கள் பதித்த கம்பளங்கள் மீதும், அழகுமிக்க விரிப்புகள் மீதும் அமர்ந்த வண்ணம் தம் பணிகளைத் தொடர்வார்கள்.

55:77

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ٧٧

55:77. நகர்புறம் மற்றும் நாட்டுப்புற மக்களே! இறைவனின் வழிகாட்டுதலின்படி இத்தகைய வளம் மிக்க சமுதாயம் உருவாவது பொய்யென்று கூறுகிறீர்களா?

55:78

تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ٧٨

55:78. நபியே! மிக்க சிறப்பும் கண்ணியமும் உள்ள உம்முடைய இறைவனின் அழகான செயல் திட்டங்களை சிறப்பிக்க உழைத்து வருவீராக. அப்போது தான் இறைவனின் பரிபாலன அமைப்பு பளிச்சிடும் (பார்க்க 39:69)

இத்தகைய சிறந்த சமுதாயம் இவ்வுலகிலும் ஏற்படும் மறு உலகிலும் தொடரும். இவையே இறைவழிகாட்டுதலின் படி செயல்படும் போது கிடைக்கின்ற பாக்கியங்களாகும்.

அத்தியாயம்: 56 – பகுதி: 27 - சூரத்துல் வாஃகியா (எழுச்சி மிகு காலம்)